Thursday, June 14, 2018

உலகம் விரும்பும் மனிதன்

முதன்முதலில் நான் அவரை பார்த்தது என் இருபத்தி இரண்டு வயதில். முரளி ஒரு கூகிள் படத்தில் அவரை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அடுத்தவர் கணினியை எட்டிப் பார்க்கும கெட்டப் பழக்கம் நிறையவே இருந்தது. இரண்டு மூன்று முறை கிண்டல் செய்தும் பிரயோஜனம் இல்லை. நான் திருந்தவில்லை. முரளியிடம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று பரவசமாக சொன்னேன். அதற்கு முரளி  "சே"வை முதலில் பார்க்கும் எல்லோருக்கும் தோன்றும் உணர்வு அதுதான் என்றார். நட்சத்திரம் பொறித்த தொப்பியில் ஒரு தீர்க்கமான பார்வையோடு இருந்த அந்த ஸ்கெட்ச் படம் என் மனதில் வந்துவந்து போனது.




ஆர்க்குட்டுக்கும் முகநூலுக்கும் இடையில் வலைப்பூ காலம் ஒன்றிருந்தது நம் மார்கழியை போல. நிறைய எழுத்துக்களை வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டது அப்போது தான். அப்படி பாமரனின் வலைப்பூவை தொடர்ந்து வாசிக்கும் போது "சே"வை பற்றிய சின்ன அறிமுக வரலாறு இருந்தது. அதில் எனக்கு ஞாபகம் இருக்கும் பல வரிகளில் ஒன்று "ஹில்டாவை மறுமணம் செய்து கொள்ளச்சொல். உன் கை நடுங்குகிறது. நெற்றிக்கு குறி பார்." சத்தியமாக அந்த தைரியம் எனக்கு வரவே வராது. சமீபத்தில் கூட ஆஸ்பத்திரியில் மூச்சுத் தினறத்தினற மரணம் தழுவிவிடுமோ என்ற பயம் தான் இருந்தது எனக்கு. ஒரு மனிதன் துப்பாக்கிக்கு சவால் விட்டிருக்கிறான். அதுவும் எந்த நாட்டு மக்களுக்காகவோ. அவனை நான் படித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அந்த சிங்கப்பூர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில்  நான் வாங்கிய ஒரே தமிழ் புத்தகம் "சே - வேண்டும் விடுதலை" மருதன் எழுதியது. க்யூப வரலாறும் "சே"வின் வாழ்வை பற்றியும் அதிரடி கதை போல தெரிந்து கொண்டேன். என் லினக்ஸ் கணினிக்கு கிரான்மா என பெயர் வைத்தேன். மோட்டார் சைக்கிள் டெய்ரீஸ் படத்தை பார்த்தேன். எர்னஸ்டோ,  காதல், பயணம், கம்யூனிஸ்ட், துப்பாக்கி விபத்து, பிடலுடனான தர்க்கம், ஆஸ்த்துமா, தொழுநோயாளிகளுக்கான மருத்துவச்சேவை, அந்த டாக்டர் நண்பர், ஹில்டா, சின்சினா, அலெய்டா என ஒவ்வொரு துளியாக "சே"வை நினைவில் சேகரித்தேன். அவர் பிடலுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து வார்த்தைகளை உருவி போட்டு பல கடிதமும் கட்டுரையும் ஊக்கம் தரும் பேச்சுக்களையும் செய்திருக்கிறேன். நீங்கள் முறைக்கிறீர்கள் ஆனால் நம் "சே" அதற்க்காகவெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டார்.

"சே" இந்த காலத்திற்கு மட்டும் அல்ல எதிர்காலத்திற்கும் தேவையான அமரன். இந்த உலகில் உள்ள அத்தனை மத மகான்களும் மேற்க்கொண்ட பயணத்திலிருந்து "சே"வின் பயணம் வித்தியாசமானது. எல்லோரும் கடவுளை தேடி புறப்பட்டனர். புத்தன் கூட துன்பத்தின் காரணமறிய பயணத்தை துவக்கினான். தன் மருத்துவமும் நோயுற்ற வாழ்வும் தன் கண்முன்னே பயமுறுத்திக்கொண்டிருக்க, எங்கேயோ அழுது கொண்டிருக்கும் மனிதத்தின் விழிநீர் துடைக்க புறப்பட்டவர் "சே". ஒரு சின்ன அமௌன்ட் வாழ்வில் தொடர்ந்து கிடைத்தால் போதும் கவலையின்றி வாழலாம் என சுயநலமாக யோசிக்கிறேன் அவருக்கு ஐம்பது வருடங்கள் கழித்துப் பிறந்த நான். ஒரு நாட்டின் உயர் பதவியை விட இன்னொரு நாட்டின் விடுதலைக்கு துணை நிற்பதே தன் கடமை என வாழ்ந்து முடித்திருக்கிறார் அவர். க்யூபாவை விட்டு வெளியேறியதை பற்றி  மாமாவுடன் விவாதித்தபோது மாமா சொன்னார் புரட்சியை அப்படி எல்லாம் ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால் மானுடவிடுதலையின் மீதான தீவிரமே அவரை அப்படி செய்ய தூண்டி இருக்கிறது என்றார்.

"சே"வை பற்றி கணக்கிலடங்காமல் எழுதவும் பேசவும் பரவசப்படவும் முடியும் என்னால். ஆனால் "சே"வை போல என் சொற்களுக்கு சக்தி அதிகம் இல்லை. ஆகவே நிறைவு செய்யும் கட்டாயத்தோடு மேலும் ஒரு வரி. சென்ற வருட நீயா நானா நிகழ்வில் விருந்தினராக பங்கெடுத்த கரு.பழநியப்பன் "மனிதன் உலகத்தின் குடிமகன் ஆவதுதான் முக்கியம்" என்றார். என் மனதில் தோன்றியது, மானுட விடுதலையின் மீது தீராக்காதல் கொண்ட ஒரு மனிதனே அவ்வாறாக முடியும் என்றெண்ணினேன். மனதில் இலட்சித்தி எத்தனையாவது முறையோ "சே" வந்து போனார். ஆம் சே நீங்கள் தான் citizen of the world.

Friday, May 18, 2018

ஒரு ஆலமரத்தின் கதை

ஆனந்த்பாபு சேர்ந்தான் என்றுதான் பெஸ்ட் ட்யூஷன் சென்ட்டரில் (அதுதான் பெயர் என்று நினைக்கிறேன்) சேர்ந்தேன். பத்தாம் வகுப்பு ட்யூஷன் சென்ட்டர்கள் பெரும்பாலும் 3 திரைப்படத்தில் படவா கோபியின் வகுப்பறை போன்றே இருக்கும். அந்த நேரம் அந்த ட்யூஷன் வாத்தியாருக்கு பிரச்சினை போல. ஒரு வாரமாகியும் பாடத்தை ஆரம்பிக்கவில்லை. ஏனைய நண்பர்கள் எல்லாம் தங்கவேல் சார் ட்யூஷனில் சேர்ந்துவிட்டனர். அவரிடம் ஏற்கனவே போய் கேட்டதற்கு ஆட்கள் அதிகம் என்று சொல்லி விரட்டிவிட்டார்.



ஆனந்த்பாபு எப்படியோ சேர்ந்து விட்டான்.  அப்புறம் G.ராஜேஷோடு அவர் வீட்டுக்கு போய் அவரை குடையாய் குடைந்து சேர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்த அவர் எரிச்சலாகி இதோ பாரு உட்கார்ந்து படிக்க இடமில்லை. நின்னுக்கிறையா என்றார். G.ராஜேஷ் சரி சொல்லு எனச் சொல்ல நானும் தலையாட்ட சரி போ என்றார். நான் அவர் ட்யூஷனில் போய் உட்கார்ந்தேன். படிப்பில் ஆர்வம் இருந்ததால் படிக்கிற பையன்களெல்லாம் சேர்ந்து கொஞ்சம் இடம் கொடுத்தார்கள்.
அன்றைக்கு இரண்டாவதாக வகுப்பெடுக்க வந்த தங்கவேல் சார் என் அவஸ்தையை பார்த்து இதுக்குத் தான் சொன்னேன் வேண்டாமென்று என்றார். நான் இளித்தபடியே பரவாயில்லை சார் என்றேன்.

தங்கவேல் சார் ட்யூஷனில் சுந்தரேசன் சார் கணக்கும் இரத்தினசபாபதி சார் அறிவியல் பாடமும் எடுத்தார்கள். இதில் இரத்தினசபாபதி சார் எடுக்கும் அறிவியலை நான் காது கொடுத்துக் கேட்டதில்லை. எனக்கு பள்ளியில் சம்பத் சார் நடத்துவதே போதுமானதாக இருந்தது. ஆனால் சுந்தரேசன் சாரிடம் அப்படி அல்ல. அவர் நடத்துவதை கேட்பதே ஆனந்தமாக இருந்தது. Algebra trigonometry எல்லாம் அவர் கேட்க நான் விடை சொல்ல அவர் பாராட்டுவதெல்லாம் தெவிட்டாத நினைவுகள். அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார் "என்ன கல்யாணராமா திருமணஞ்சேரி போனியா". நான் உடனே "இல்ல சார்" என வழிவேன். பிரம்பை செல்லமாக தலையில் தட்டிவிட்டுப் போவார்.

தங்கவேல் சாரின் கவனத்தை ஈர்க்க நான் கொஞ்சம் படாத பாடுபட வேண்டியிருந்தது. என்னுடைய கெட்ட நேரம் நிறைய பல்புகள் வாங்கினேன். குறிப்பாக இரத்தினசபாபதிசார் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் நானும் அருண் எனும் நண்பனும் விரல் சண்டை போட்டுக் கொண்டிருக்க ஜன்னல் வழியே பார்த்துவிட்டு அவர் வகுப்பின் போது எங்கள் இருவரையும் எழுப்பினார். "நீங்க ரெண்டு பேரும் விரல நாமம்  மாதிரி வெச்சுகிட்டு விளையாட்றீங்க. இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் நாமம் போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான். சீ உக்காரு" என்றார். சரி என்றைக்காவது இவரிடம் பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்திக் கொண்டேன்.

தங்கவேல் சார் ட்யூஷனில் நிறைய தேர்வுகள் நடத்துவார் எல்லா பாடங்களுக்கும். தேர்வு எழுதுபவர்களை குழுவாக பிரிப்பார். நன்றாக படிக்கும் மாணவர்கள், சுமார் மாணவர்கள், ரொம்ப சுமார் மாணவர்கள் எல்லோரையும் கலந்து குழுவாக பிரிப்பார். குழு மதிப்பெண்கள் அடிப்படையில் முதலிடம் பெற்ற குழுவுக்கும் இரண்டாமிடம் பெற்ற குழுவுக்கும் பரிசுகள் தருவார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் ஒரு யுக்தியாக கையாள்வார். இன்றும் நான் வேலைக்கு நேர்முகத்தேர்வு நடத்தி என் டீமை இப்படித்தான் அமைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் மூலக்காரணம் தங்கவேல் சார் தான். அதேபோல் என் அலுவலக நண்பர்களுக்கு நான் பரிசுகள் வாங்கித் தரும் முறையிலும் தங்கவேல்சாரையே பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.

i.e என்ற வார்த்தைக்கு பொருள் சொன்னது, போர்-war வார்-pour என்று வார்த்தை ஜாலம் செய்தது, உலகப்போர்களை அதிரடிக்கதைகளாக சொல்லிக்கொடுத்தது என தங்கவேல் சார் பற்றிய கதைகள் நிறைய சொல்லலாம். நான் தொழில்நுட்ப கல்வி பயிலும்போதே பணி ஓய்வுபெற்று ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். எட்டு வருடங்கள் கழித்து மதுவின் கல்யாணத்திற்காக சீர்காழி சென்றபோது சாரை சந்தித்தேன். அவருக்கு என்னை பற்றி எந்த நினைவுமில்லை. என்ன கதை சொல்லியும் அவருக்கு நினைவூட்ட முடியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக வரவேற்றார். ஒரு வயதான மனிதர் தன் இளைய நண்பருடன் உரையாடுவதுபோல பேசினார்.

ஊர் திரும்புவதற்கு முன் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு சென்னை திரும்பினேன். என்னோடு கைக்குலுக்கினார். உள்ளே இருந்த கல்யாண ராமன் குதுகலித்தான். வரும்போது நினைத்துக் கொண்டேன் அவர் சொல்லிக் கொடுத்த உலகப்போர் வரலாறும் காரணமாக இருக்கலாம் என் சினிமா ஆர்வத்திற்கு. சார் என்னை மறந்து போவது இயற்கை தான். பறவைகளுக்குத்தான் வசித்த ஆலமரம் நினைவில் இருக்க வேண்டும்.  எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட என் நினைவில் S.m.h.s School groundல் மாலை வேளையில் கால்பந்தை துரத்திக் கொண்டு முதல் மனிதராக வரிவரியான டிஷர்ட்டில் தங்கவேல் சார் கடந்து போகிறார் மின்னல் என.

Wednesday, May 16, 2018

இது வேற யானை

ஏற்கெனவே பாலம் இதழில் மனசு அவர்களின் யானை சிறுகதை வந்துவிட்டதாலும், லக்ஷ்மி சரவணக்குமாரின் யானை என்ற சிறுகதை தொகுப்பு இருப்பதாலும் இந்த பதிவின் தலைப்பை இப்படி வைக்க வேண்டியதாயிற்று. மேலே சொன்னதில் மனசு அவர்களின் யானை கதையை படித்திருக்கிறேன். அது ஒரு வியட்நாம் தேசத்துக் கதை.



நான் சொல்ல வந்தது நான் பார்த்த யானையை பற்றி. கோயில் யானை. ஒவ்வொரு முறை புதுவைக்கு செல்லும் போதும் மறவாமல் மணக்குளவிநாயகர் கோயிலுக்கு செல்வேன். அங்கிருக்கும் யானை குள்ளமாக இருக்கும். நான்கு கால்களிலும் வெள்ளியில் கொலுசு போட்டிருக்கும். ஆண் யானையா இல்லையா என்பதை படம் பார்த்து முடிவு செய்து கொள்ளவும். கால் ஒன்றில் இரும்பு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அதன் கீழ் அமர்ந்திருக்கும் பாகன் தன் கையில் வைத்திருக்கும் அங்குசத்தை வைத்து தட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலும் கருநீலச்சட்டை போட்டே அவரை பார்த்த ஞாபகம். அந்த யானையையும் அதன் பாகனையும் நினைக்கும் போதெல்லாம் என்னை கவராத ஜெயமோகனின் எழுத்துக்களில் என்னைக் கவர்ந்த வரிகள் கூடவே வரும் அது "கொலைவேழத்தின் பெருங்கருணையை அறிந்தவன் ஒருவன் மட்டுமே. அதன் கீழ் வாழும் எளிய பாகன் தான்"

ஆனால் எங்கள் ஊரில் இருந்த பெரியகோயில் யானையின் பாகன் சட்டை அணிந்து பார்த்ததில்லை. யானை மேய்ப்பவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அதேபோல அந்த யானையின் கீழ் பாகன் உறங்கியும் பார்த்ததில்லை. ஒரேயொருமுறை மட்டும் சாயுங்காலத்தில் அந்த பாகன் ரொம்ப வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவர் கூட வரும் பையன் யானையை மிரட்டி கூப்பிட்டுக் கொண்டிருந்தான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதே மது காதில் வந்து கிசுகிசுப்பாய் "அந்தாள் தண்ணியடிச்சிருக்கான்" என்றான்.
அந்த பெண்யானை வாரம் ஒருமுறை குளிப்பதற்கு எங்கள் தெருவில் புகுந்து தான் திருக்கோலக்கா கோவில் குளத்திற்கு செல்லும். இல்லை வாய்க்காலுக்கு போகுமாயிருக்கும். ஒருமுறை வாய்க்காலில் குளித்ததை பார்த்திருக்கிறேன். குளித்துவிட்டு திரும்ப எங்கள் தெருவழியாகவே பட்டை எல்லாம் அடித்துக் கொண்டு ஜம்மென்று போகும். கடைவீதி வழியாக பலரை ஆசிர்வதித்து வாழைப்பழம் தேங்காய் காசுகள் என கல்லா கட்டிக்கொண்டு போகும்.

பெரியகோயில் யானை இறந்து போனதை அப்பாதான் வந்து சொன்னார். அன்று தான் அதன் பெயர் ஜெயந்தி என்றே தெரியும் எனக்கு. அதன் இறப்பு செய்தியை செய்தித்தாளிலும் போட்டார்கள். அன்று மாலை நானும் மதுவும் கிளம்பினோம். நடந்து தான் போனோம். கோயில் உள்ளே அதன் கொட்டடிக்கு சென்றோம். எத்தனையோ இரவுகள் அந்த கொட்டடியின் இருட்டை பார்த்து பயந்திருக்கிறேன். தனியே பிராகாரத்தை சுற்றும்போது சிலசமயம் யானை செய்யும் சலசலப்புக்கு அஞ்சி பயந்து ஓடியிருக்கிறேன். இன்று அந்த கொட்டடிக்கு வெளியிலிருந்து நல்ல நூறுவாட்ஸ் வெளிச்சத்திற்கு நடுவே யானை கிடத்தப்பட்டிருப்பதை பார்த்தேன். நான் பார்த்த யானை அல்ல அது. உடல் வற்றி தலை சிறிதாகி ஏதோ ஒரு பொருளாகக் கிடந்தது. மது "நீ வருத்தப்பட ஆரம்பிச்சா உன்னை சமாதான படுத்த முடியாது" என என்னை உள்ளே செல்லவிடாமல் தடுத்து விட்டான். பிறகு வெளியேவந்து "பாவம்டா அந்த யானை. ஆனா அந்த பாகன் பாரு இனிமே என் பொழப்புக்கு என்ன செய்வேன் ஏதாவது காசு போட்டு போங்கன்ட்றான்" என்றான் கோபமாக. ஒரு கட்டம்வரைதான் இறந்தவர்களுக்காக அழமுடியும் என்றோ பாகன் வறுமையையோ  நாங்கள் புரிந்திருக்க வாய்ப்புமில்லை வயதுமில்லை. மறுநாள் அப்பா அதன் ஈமச்சடங்கிற்கு சென்று வந்தார். எரியூட்டினார்கள் என்று நினைவு.

நான் இதுகுறித்து எழுதியதை பற்றி சரவணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன் இளமைக்காலத்திய நினைவுகளையும் தான் படித்த யானை கதைகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார். குறிப்பாக யானை சவாரி செய்ததை சொன்னார். நான் என் வாழ்வில் யானை சவாரி செய்ததே இல்லை. யானை அருகே சென்று ஒரிருமுறை ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதுவும் வைத்தீஸ்வரன் கோயில் யானையிடம் மட்டும். யானை கதைகளை நிரம்ப படித்திருந்தாலும்  யானையை பற்றிய தகவல்கள் அதிகமாக தெரிந்திருந்தாலும்  ஒருமுறை யானை பற்றி மாமா சொன்னதை இங்கே சொல்லி முடிப்பது சரியாக இருக்கும். "யானை பாத்திருக்கியா? அதுக்கு மதம் பிடிச்சா காடே தாங்காது. தொம்சம் பண்ணிரும். சிங்கம்புலி எல்லாம் காணாப்போயிரும். ஆனா அவ்ளோ பெரிய யானையை மனுசன் தான் வயித்துக்காக கடைக்கடையா பிச்சை எடுக்கவுட்ருவான். நம்ம எல்லாருமே ஒருவகையில அந்த யானை தான்".

Monday, May 14, 2018

ஏனென்றால் என் பிறந்தநாள்

துன்பம் நிறைந்த வாழ்வில் மகிழ்ச்சி எண்ணிப்பார்க்கும் அளவே இருக்கும்

என்று தால்ஸ்தாய் சொல்லவில்லை. அவர் அப்படி சொன்னதாக நான் எடுத்துக் கொண்டேன். அப்படியான சந்தோஷமான தருணங்களில் ஒன்று என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாதிரி மகிழ்ச்சி இருக்கும். ஒருமுறை சந்தனக்கலரில் சட்டை போட்டுக்கொண்டு வீடுவீடாக எவர்சில்வர் டப்பாவில் சாக்லேட் கொடுத்துவிட்டு வந்தேன். ஒருமுறை மது என்னை அழைத்துப் போய் சமோசா வாங்கிக் கொடுத்தான். இரண்டு பிறந்தநாட்களுக்கு அப்பா வாட்ச் வாங்கி தந்தார். இரண்டு வாடச்சுகளுக்கும் நடுவே எட்டு வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு பல வருடங்களுக்கு பிறகு நண்பர் பிரேம் வாட்ச் வாங்கி கொடுத்திருக்கிறார்.


பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் பழக்கம் கிடையாது. ஆனால் ஆசை இருக்கிறது. என் ஆறாவது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய ஞாபகம் இருக்கிறது. அன்று அக்காவின் தோழிகள் நிறையபேர் வந்திருந்தார்கள். அதில் இப்போது ஞாபகம் இருப்பது கவிதாக்காவும் அவர் கண்ணாடியும் மட்டும்தான். கண்ணாடி போட்ட பெண்களின் மீது என்னுள் பெருகும் அன்பிற்கும் காதலுக்கும் அது காரணமாக இருக்கலாம். பிறகு கேக் வெட்டியது என்னுடைய இருபத்தி இரண்டாவது பிறந்தநாளில். பிரகாஷ் சந்தோஷ் ராம் என என் அலுவலக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள் அது. நான் அதிகமாக பரிசுகள் பெற்ற பிறந்த நாளும் அதுதான். இரண்டு பேண்ட் இரண்டு சட்டை. காதலியிடமிருந்து ஒரு சட்டை(இப்போது முன்னாள்), ஒரு பிள்ளையார் பொம்மை, பணி நிரந்தர ஆணை அப்புறம் ஒரு மிக்கிமௌஸ் கேக். அதில் எழுதிய வாசகங்கள் இப்போதும் புன்னகை வரவழைப்பது. Happy birthday Mr. Romeo.
சத்தியமாக அதைத்தான் எழுதி இருந்தார்கள்.

அதேபோல பிறந்த நாளில் எதையாவது வித்தியாசமாக செய்து பார்க்கும் ஆசை வரும். சிலசமயம் அது சரியாக வரும். சிலநேரங்களில் சொதப்பும். ஒருமுறை பிறந்த நாள் அன்று வேலைக்கு கிளம்பிவிட்டேன். அம்மா எவ்வளவு காசு வேண்டும் என்று கேட்டார். யாருக்கும் செலவழிக்க தோன்றவில்லை. நூறு ரூபாய் கொடு போதும் என்றேன். ஒரு மாதிரி முறைத்தபடியே கொடுத்தார். அலுவலகம் வருவதற்குள் எண்ணம் மாறிவிட்டது. சரி எதையாவது வாங்கலாம் என முடிவுசெய்து என்ன வாங்குவது நூறு ரூபாய்க்கு என்று யோசித்தபடியே கடையில் இருந்த ஒரு பெட்டியை வாங்கினேன் நூற்றியிருபது ரூபாய்க்கு.  என் பையில் குப்பையுடன் குப்பையாய் பணத்தை திணித்து வைத்திருப்பேன். எப்போது துழாவினாலும் ஐம்பது தேறும். எனவே வாங்கிப்போய் பெட்டியில் இருந்ததை எல்லோருக்கும் கொடுத்தேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட குழந்தை பருவத்திற்கே போய்விட்டார்கள். எனக்கு ஒருவாரம் முன்பு பிறந்த நாள் கொண்டாடிய சிவா என்னிடம் ரகசியமாக கேட்டார். எவ்வளவு செலவு பண்ணீங்க என்றார். சொன்னேன். எண்ணுறு ரூபாய்க்கு A2B ஸ்வீட் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். ஒரு பய என்னை ஞாபகத்துல வெச்சுக்கமாட்டான். நீங்க பெரிய ஆளுங்க என்றபடி alpenliebe lollipopஐ சப்பியபடி சொல்லிவிட்டு சென்றார். சிரித்துக் கொண்டேன்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனக்கு எப்போதுமே வரமான நாட்கள் தான். ஒவ்வொரு வருடமும் நம்மை நினைவில் வைத்து வாழ்த்தும் உள்ளங்களே நம் ஆயுள் நீட்டிப்பிற்கும் நாம் வாழும் வாழ்வின் பக்கங்களை நிரப்புவதற்கும் காரணமானவர்கள். இதை தலைகீழாகவும் சொல்லலாம். தோழமை தாய்மார்களாக தோழமை தந்தையர்களாக தோழமை சகோதரசகோதரிகளாக உறவுகளில் நண்பர்களாக முகநூல் நட்புகளாக என வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் மட்டுமே என் இரண்டு பிறந்தநாட்களுக்கு நடுவில் என்னையும் என் அன்பையும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன்கள். ரஜினிகாந்தின் மனிதன் திரைப்படத்தில் ஶ்ரீவித்யா உதட்டசைக்கும் பாடல் ஒன்றில் வரும் இந்த வரிகளை அந்த அன்புள்ளங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். "உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க"

Sunday, April 22, 2018

My Hero சாப்ளின்

சின்ன வயதில் சாப்ளின் பற்றி கேள்வி பட்டதோடு சரி. இருபது நிமிட கதை எதிலாவது பார்த்திருப்பேன். நான் ஏழாம் வகுப்பில் சேர்ந்த அன்று விவேக் எனும் வகுப்புத் தோழன் பேச்சு வாக்கில் சொன்னான் "சாப்ளின் இறந்த பிறகு அவர் நடித்த படங்களை எல்லாம் சேர்த்து ஒரு படமாக வெளியிட்டிருக்கிறார்கள்". ஒருவேளை ஆவணப்படத்தை தான் அப்படி சொன்னானோ என்னவோ. அவரை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சேகரித்து வைத்திருந்தேன். ஒரு மாறுவேடப் போட்டியில் சாப்ளின் வேஷம் போட்ட சாப்ளினுக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது. ஹிட்லரை எதிர்த்து படம் செய்திருக்கிறார் சாப்ளின். இப்படி சில. நான் சாப்ளினின் முழுப் படங்களை பார்க்க ரொம்ப நாளாயிற்று.
  


நான் முதன்முதலாக பார்த்த சாப்ளினின் முழு திரைப்படம் மாடர்ன் டைம்ஸ். அதில் அந்த இயந்திரத்தின் உள்ளே பல்சக்கரத்தோடு சுற்றுவார். வெறும் உடலை வளைத்து காட்டி இருப்பார். இன்றைக்கு நீலத்திரை,  கிராபிக்ஸ் கண்ணுக்கு புலப்படாத கயிறு இந்த உபகரணங்களோடு நடத்தி காட்டும் சாகசங்களைவிட கடினமான காட்சி அது. 

சிட்டி லைட்ஸ் திரைப்படத்தின் கடைசி காட்சி. இவர் நாயகியை அவ்வளவு காதலுடன் பார்ப்பார். அவரோ இவரை ஒரு மனநிலை சரி இல்லாதவராய் பார்ப்பார். நான் அழ ஆரம்பித்து விடுவேன். அப்படியே நொடிப்பொழுதில் நாயகி இவர் கையை தொட்டு இவர்தான் தன் காதலன் என உணரும் நேரம் அது எனக்கு சந்தோஷ கண்ணீராக ஊத்திக் கொண்டிருக்கும்.

Gold rush திரைப்படத்தின் முதல் காட்சி. சாப்ளின் நடக்கிறார். பின்னே ஒரு கரடி நடக்கிறது. இரண்டு பேருமே எதையோ தேடிய படியே ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்யாமல் செல்வார்கள். ஒரு குகை திருப்பத்தில் கரடி அது வழியே சென்று விடும். இவர் தன் பாதையை தொடர்வார். என்ன ஒரு தைரியம்டா என்று தோன்றியது (the circus சிங்கம் காட்சியை விடவும் என்னை கவர்ந்த காட்சி தான்).

‌மேலே சொன்ன மூன்று காட்சிகளும் பேசும் அவசியம் இன்றி நடிப்பால் மட்டுமே வெளிப்படுத்தி இருப்பார். சினிமா பேச ஆரம்பித்த பிறகும் கூட சினிமாவில் மௌனமே மிக சக்தி வாய்ந்த மொழி என்று ஆணித்தரமாக நம்பியிருக்கிறார். (இன்னமும் அவர் பேசி நடித்த monsieur verdoux பார்க்கவில்லை).  அவரைப்போல இன்னொரு நவரச நாயகனை ஆக்க்ஷன் ஹீரோவை சூப்பர் ஸ்டாரை   பேசாமலே பொதுவுடமை பேசியவரை ஒருசேரக் காணமுடியவில்லை. ஆனால் தனித்தனியே காண்கிறேன். ஒப்பீடு செய்யும் போதெல்லாம் உங்களை மிஸ் பண்ணுகிறேன் என் பிரியமுள்ள சாப்ளின், ஹேப்பி பர்த்டே.

Sunday, April 8, 2018

சிவப்பு தொப்பியணிந்த சிவப்பு பையன்


சரியாக வாய்க்காங்கரைத் தெருவுக்கு இணையாக செல்லும் சீர்காழி மெயின் ரோடு. அங்கே ச.மு.இ. உயர்நிலைப் பள்ளிக்கு பக்கத்தில் இருப்பான் அவன். சிகப்பாய் தொப்பி அணிந்துகொண்டு ஒரு இந்திய சராசரி பெண்ணின் உயரத்துக்கு ஓரடி கம்மியாக இருப்பான் அவன். கருப்பு வாயை எப்போதும் திறந்த படியே வைத்திருப்பான். அந்த வாயில்தான் நான் என் பெரியம்மாவிற்கு எழுதிய முதல் கடுதாசியை போட்டேன். பூட்டு போட்ட பெரிய வயிற்றில் அதை பத்திரமாய் வைத்துக்கொண்டான்.



ஊரில் ஒருசமயம் பலபேருக்கு போஸ்ட் ஆபீஸ் போவது ஒரு வேலையாக இருக்கும். அந்த போஸ்ட்ஆபீஸுக்கு சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்தும் வருவார்கள். எனக்கு தெரிந்து வங்கிக்கு இணையாக அங்கே கூட்டமிருக்கும். எதையாவது எழுதிய வண்ணம் இருப்பார்கள். Inland லெட்டர் இதை இங்க்லேண்டு லெட்டர் என்றே உச்சரித்துக் கொண்டிருந்தேன், புலிப்படம் போட்ட போஸ்ட்கார்ட் என்று எதிலாவது தங்கள் தகவல்களை பொறித்துக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இங்க்பேனா உபயோகிப்பார்கள். ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் எழுதினாலும் ஒரு மாதிரியான கூட்டெழுத்தை உபயோகிப்பார்கள். தமிழில் எழுதினால் நலம் நலமறிய ஆவல் என்கிற வரிகள் நிச்சயம் இருக்கும். ஆங்கிலத்தில் regarding என்கிற சொல்லைப் போல இப்பவும் என்கிற சொல்லை தமிழில் உபயோகிப்பார்கள்.

நான் மேலே சொன்ன எதையுமே பின்பற்றியதில்லை கடிதம் எழுதும்போது நலம் நலமறிய ஆவல் வரிகளைத் தவிர. இரண்டாம் வகுப்பிற்கு செல்லும்போது என்னமோ சென்னையிலிருக்கும் பெரியம்மாவிற்கு கடிதம் எழுதவேண்டும் என்ற பேராவல் பிறந்தது எனக்கு. இருபத்தைந்து பைசாவிற்கு ஒரு போஸ்ட்கார்ட் வாங்கி அதில் அடித்தல் திருத்தலோடு எழுதி இப்படிக்கு பாலாji என்று முடிக்கும் இடத்தில் மூன்று அடித்தல் திருத்தல் வேறு. அவ்வபோது அப்பா அம்மா கொடுக்கும் கடிதங்கள் பெரும்பாலும் மாமாவுக்கும் தாத்தாவுக்கும் எழுதுவதை நான்தான் சிவப்பு பையனிடம் சேர்ப்பேன். புது போஸ்ட்கார்டும் வாங்கி வருவேன்.

அப்படி வாங்கிய அன்று ஒருநாள் ஐம்பது வயது மதிக்கத்தக்க அவர் என்னிடம் தம்பி ஒரு லெட்டர் எழுதித் தர்றியா என்றார். நான் என் கையெழுத்து நல்லா இருக்காதே என்றேன். பரவாயில்லை எழுது என்றார். எழுத தயாரானேன். "மரியாதைக்குரிய மாப்பிள்ளை அவர்களுக்கு, என் பெண்ணை வீட்டைவிட்டு விரட்டியது நியாயமா? இந்த பாவம் உங்களை சும்மா விடுமா? என் பெண்ணின் கதி என்ன?" என்று நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனக்கு பழகாத சொற்களை கோர்த்துக்கொண்டே போனார். நானும் பல அடித்தல் திருத்தல்களோடு எழுதி அவர் சொன்ன முகவரிக்கு 50பைசா ஸ்டாம்ப் ஒட்டி அந்த தபால்பையனின் வாயில் வைத்துவிட்டு வந்தேன். பின்னாளில் அக்காவின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனஸ்தாபங்களின் போது அப்பா பட்ட துயரங்கள் அந்த போஸ்ட்கார்ட் எழுதச் சொன்ன மனிதரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது.

மூன்றாம் வகுப்பில் இருந்தே தமிழிலும் ஆங்கிலத்திலும் கடிதம் வரையக் கற்றுக்கொடுத்துவிடுவார்கள்.  கடிதம் எழுதுதல் என்ற வார்த்தையைவிட கடிதம் வரைதல் என்ற வார்த்தையே எப்போதும் பிடித்தமானது. வார்த்தைகளை கொண்டு வரையத்தான் செய்கிறோம். வரைந்த கடிதங்கள் செய்யும் அற்புதங்கள் கொஞ்சமில்லை. நிறையவே. ஜென்னியும் மார்க்ஸும் வரைந்து கொண்ட காதல் கடிதங்களும் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்களும் வரலாற்றில் கடிதங்கள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு சாட்சியங்கள்.  கி.ராவுக்கும் கு.அழகிரிசாமிக்கும் இடையிலான கடிதங்கள் சுவைக்க சுவைக்க தெவிட்டாதவை. இதை எல்லாம் படிக்க நேரமில்லை என்பவர்கள் குறைந்தபட்சம் கடித இலக்கியத்தின் துணைக்கொண்டு உருவாக்கப்பட்ட காவியம் காதல்கோட்டை படமாவது பாருங்கள். ஒரு பக்கம் அஜித் ஒரு பக்கம் தேவயானி நடுவே இங்கிலேண்டு லெட்டர் கொண்ட அந்த படத்தின் போஸ்ட்டரை  மறக்கவே முடியாது என்னால்.

ஒருவருக்கு இன்னொருவர் கடிதம் எழுதி அனுப்புகிறார் என்பதே பெருமைக்குரிய செயலாக இருந்தது. அதனாலேயே புதுவருடத்திற்கும் பொங்கலுக்கும் வாழ்த்து அட்டைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். எனக்கு சில நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்றாலும் நினைவில் இருப்பது D.கார்த்தி அனுப்பிய வாழ்த்து அட்டை தான். அதில் வெற்றி என்பது அலைகளை எதிர்த்து மிதவைப்பலகையில் பயணம் செய்வதை போல (surfing! surfing!) என்று எழுதியிருந்தது ஆங்கிலத்தில். பலவருடங்கள் அந்த அட்டையை பத்திரமாக வைத்திருந்தேன்.  சிலவருடங்களுக்கு பிறகு வாழ்த்து அட்டைகளை வாங்கிக் கொள்ள பச்சைதொப்பியனிந்த குட்டிப்பச்சை பையனை வைத்தார்கள். அவன் சிவப்பு பையனுக்கு உதவியாக பண்டிகை காலங்களில் மட்டும் இருப்பான்.

இன்றைக்கு மூன்று வரிகளுக்கு மேல் மின்னஞ்சல் செய்வது இல்லை. ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும் மூன்றுவரிக்கு மிகாமல் எழுதப்படும் என் கடிதங்கள் நொடியில் பயணம் செய்து கொண்டிருக்கிறது  மின்னனுத் துகள்களாக. வாழ்த்து அட்டைகளுக்கென்றே இணையதளத்தில் முகநூலும் இன்னபிற சமூகவலைத்தளங்களும் வேலை செய்கின்றன. தபால் பையனின் தேவைகள் குறைந்துவிட்டது. அவனுக்கு இனி யார் சோகத்தையும் மகிழ்ச்சியையும் நலத்தையும் சுகவீனத்தையும் பற்றி தன்னுள் பூட்டிவைத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவன் வயிறு தற்போது பட்டினியாகத்தான் கிடக்கும். அவன் வாய் பெரும்பாலும் காற்றைத்தான் உறிஞ்சிக் கொண்டிருக்கும். ஆனால் அடுத்தவர் சோகத்தையும் துக்கத்தையும் தன் வயிற்றில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதில் அவன் மனம் சற்று பாரமில்லாமல் இருக்கும் . ஒருவேளை அவன் இறுதி நாட்களுக்கு அது ஆறுதலாய் இருக்கக்கூடும்.

Friday, April 6, 2018

வெள்ளச்சி

அன்றைக்கு இரவும் பண்ணிரெண்டு மணியாகிவிட்டது வீடு திரும்ப. தொழில்நுட்ப துறை சார்ந்த பணிகளுக்கு நேரம்காலம் இல்லை. நினைத்தால் வேலை. நினைத்தால் விடுமுறை. நினைத்தால் வேறுவேலை. சம்பளம் மட்டும் ஒரே பணியில் இருக்கும் இருவருக்குள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம். சரி அந்த பிரச்சினையை தொழிற்சங்கங்கள் வளரும் அன்று பேசுவோம். எனவே இரவு பண்ணிரெண்டு மணிக்கு அம்பத்தூர் இரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். பாதை அவ்வபோது இருட்டும் வெளிச்சமுமாக மாறிமாறி வரும். எப்போதாவது சில குறுக்குத் தெருக்களை உபயோகப்படுத்துவேன். அப்படி ஓரு குறுக்கு தெருவில்தான் என்னோடு அந்த பழுப்பு நிற தெருநாயும் பயணம் செய்ய ஆரம்பித்தது.

இது எப்போதாவது நிகழக்கூடியது. ஒரு தெருநாய் ஒரு தெருவைவிட்டு இன்னொரு தெருவிற்கு செல்ல முயற்சிக்கும் போது ஒரு மனிதனின் துணையை நாடும். ஒரு மனிதனின் கூடவே நடக்கும். அப்போதுதான் மற்ற தெருநாய்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியும். அந்த இரவுநேரத்தில் தனியாக நடந்து வந்த எனக்கு ஒரு நாய் என்னுடன் கூட நடந்து வந்தது கொஞ்சம் தைரியமாக இருந்தது. எனக்கு அது துணை அதற்கு நான் துணை. இரண்டு பேரும் ரோட்டின் இரண்டு பக்கவாட்டிலும் ஒப்பந்தம் செய்துகொண்டது போல் நடந்து வந்தோம். ஒரு தடவை ஓரிடத்தில் நின்றேன். அதுவும் நின்றது. மீண்டும் நடையை கட்டினோம். என் தெருமுனை வந்ததும் திரும்பினேன். இவ்வளவு தான் உன்னுடன் வரமுடியும் என்று சொன்னேன். ஆமாம் சொன்னேன். என்னிடமிருந்து பிரிந்து தனியே நடக்க ஆரம்பித்தது.

தெருநாய்களுடன் பேசும் பழக்கம் எனக்கு ஏதோ புதிதாக ஏற்பட்டது அல்ல. வெள்ளச்சியுடன் ஏற்கனேவே பேசியிருக்கிறேன். வெள்ளச்சியை நான் சந்தித்தபோது அது ஒரு வளர்ந்த தெரு நாய். முகேஷ், சுரேஷ், கார்த்தி சகோதரர்கள் எனக்கு நல்ல நண்பர்களான சமயத்தில் தான் எனக்கு வெள்ளச்சியின் அறிமுகம் கிட்டியிருக்கக்கூடும். இப்போதும் கூட என் மனக்கண் முன் சுரேஷ் வளர்ந்த வெள்ளச்சியின் மேல் அமர்ந்து சவாரி செய்ய முயற்சித்தது வந்து போகிறது. அவன்தான் அதற்கு வெள்ளச்சி என்ற பெயரும் வைத்தான்.

ஆனால் வெள்ளச்சி வெள்ளையானவள் அல்ல. வெளிர் பழுப்பும் ஆங்காங்கே வெள்ளைத்திட்டுக்களுமாக இருப்பாள். காதுகளை dog-eared பொசிஷனிலேயே வைத்திருப்பாள். யாருடைய முகத்தையாவது பார்த்தவண்ணமே அமர்ந்திருப்பாள். பார்த்து அப்படி எதை ரசிக்கிறாள் என அவளுக்குத்தான் தெரியும். யாரையும் கடித்ததாகவோ விரட்டியதாகவோ நினைவில் இல்லை. சிலநேரம் இரவு எட்டுமணிக்கு மேல் நான் நண்பர்களை பார்த்துவிட்டு திரும்புகையில் தெருமுனையிலிருந்து வீடு வரை துணைக்கு வருவாள். தெருவில் எப்படியும் யாராவது சோறு போட்டுவிடுவார்கள். சிலநாள் நம் வீட்டிலிருந்து தயிர்சாதம் கிடைக்கும்.

ஓரிடத்தில் எந்த நேரத்தில் உணவு கிடைத்ததோ அந்த நேரத்தை நினைவில் வைத்துக் கொண்டு மறுநாளும் அங்கு வந்து உணவுக்கு காத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பாள். அப்படி சிலசமயங்கள் என் வீட்டில் காத்திருக்கும் போது பேசியிருக்கிறேன். நிறையவெல்லாமில்லை. சும்மா இங்கேயே இரு. இல்லை நாளைக்கு வா. இன்னைக்கும் தயிர் சாதம்தான். இது போலத்தான். ஆனால் புரிந்து கொண்டு காத்திருப்பதையும் கிளம்புவதையும் அவள் முடிவு செய்து கொள்வாள்.

வெள்ளச்சி தெருநாய்தான் என்றாலும் அவள் இளைப்பாறுவதும் உறங்குவதும் கண்ட இடங்களில் அல்ல. அவள் உறங்குவது இளைப்பாறுவது எல்லாம் தெருமுனை பிள்ளையார் கோவில் வாசலில் தான். வேறு எங்கேயும் அவளை நீங்கள் தேடவேண்டியதில்லை. அந்த கோவில் வாசலில் இருக்கும் பெட்டிக்கடையே அவள் வாசஸ்தலம். எனக்கு தெரிந்து அவளது உணவுக்கான ஸ்பான்ஸர் பெரும்பாலும் அந்த பெட்டிக்கடை நடத்தியவர்கள் தான்.

மார்கழி மாதத்தில் மட்டும்(எல்லோரும் ஆர்வமாகிவிடுவீர்களே!) வெள்ளச்சியை சுற்றி ஒரே ஆண் கூட்டமாக இருக்கும். பெரிய கிராக்கி செய்த படியே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பாள். அப்புறம் பேறுகாலத்தில்(அவ்வளவு தான்! மேலே படியுங்கள்) மூன்று நான்கு குட்டிகளை ஈன்றெடுப்பாள். ஒருமுறை கார்த்தி சொன்னான் "அஞ்சு குட்டி போட்டுச்சு. ஒன்னை சாப்ட்ருச்சு". "அய்யோ பாவம் ஏன்டா சாப்ட்டுச்சு?"என்றேன். முகேஷ் "டேய் அதுதான்டா அதுக்கு மருந்து. அப்டி சாப்பிடலேன்னா பிரசவம் பண்ண நாய் செத்துரும்." என்றான். எனக்குத் தான் அவன் சொன்னது புரியவுமில்லை. பிடிக்கவுமில்லை. வெள்ளச்சியின் மீது லேசான கோபம் இருந்தது. மரணம் யாருக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளாத குழந்தை பருவம் இன்னொரு பிறந்த குழந்தை இறந்ததற்காக வருத்தப்பட்டது.

காலப்போக்கில் வளர்ந்து வேலைக்கு போய், காதல் கத்திரிக்காய் எல்லாம் பார்த்து சமூக அந்தஸ்த்துக்காக வாழ ஆரம்பித்து சிரித்து அழுது நடித்து உண்மையாய் இருந்து என்று வாழ்க்கையின் நீண்ட போராட்டத்தில் வெள்ளச்சியை மறந்துதான் விட்டேன் நண்பர் முருகேசன் தெருநாய் குறுக்கிட்டு பைக் விபத்துக்குள்ளாகும் வரை.  என்னை காண வந்த அன்று அவர் கால்களில் மருந்து வைத்து சுற்றியிருந்த வெள்ளை கட்டுக்களை பார்த்தபோது நினைத்துக்கொண்டேன் வெள்ளச்சி ஒருநாளும் யாருக்கும் தெரியாமல்கூட தீங்கிழைத்ததில்லை.

Thursday, April 5, 2018

கடந்து போனவர்கள்


ரமேஷும் அவன் நண்பர்களும் அந்த பாழடைந்த மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். எல்லோருமே சற்று அதிகமான போதையிலேயே இருந்தனர்.  மண்டபம் சுற்றிலும் வயக்காட்டு இருட்டு. உள்ளே கும்மிருட்டு. திடிரென ஒரு மனிதன் மண்டபத்தின் உள்ளிருந்து வெளியே வந்தான். கூட்டமாக இருந்த இவர்கள் யாருய்யா நீ என்றனர் அதிகாரமாய். அவனோ கொஞ்சம் திடுக்கிட்டு தயங்கியபடி ஒன்னுமில்ல தம்பி வெளிக்கு இருக்க வந்தேன். வேற ஒன்னுமில்ல என்றபடியே அவசரமாக ஓடிவிட்டான். சில நிமிடங்கள் கழித்து அடித்த பீருக்கு ஒரு நண்பனுக்கு அவசரமாக இயற்கை உபாதை வர அவன் இருட்டு மண்டபத்தின் உள்ளே சிறுநீர் கழிக்கச் சென்றான். சென்றவன் திரும்பி அலறியடித்தபடி பேய் டா என்று ஓடிவந்தான். இவர்கள் என்ன என்ன என அவனை சமாதானப்படுத்திவிட்டு உள்ளே சென்று பார்த்தனர்.




"பார்த்தா... இங்கே கொஞ்ச நாளா கருப்பு ட்ரெஸ்ல ஒன்னு சுத்திகிட்டு இருந்துச்சுல்ல பைத்தியம் அதுதான். அதத்தான் அந்தாள் அவ்ளோ நேரம் போட்டுட்டிருந்திருக்கான்". இரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தான் இரமேஷ். அப்புறம் என்றேன். அப்பறமென்ன.. அது ஒருமாதிரி ஒப்பாரி வெச்சுகிட்டிருந்தது. நான் முடிச்சுப்புட்டான்ல போபோன்னு வெரட்டிவிட்டோம். லூசுக்... பைத்தியத்தை போய் செஞ்சிருக்கான் பாரு என்று சிரித்தான். எல்லோருமே ஒருமுறை சிரித்துக் கொண்டோம். விளிம்புநிலை மனிதர்கள் பாலியல்ரீதியாக ஒடுக்கப்படுவது கொடுமை அதிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வன்புணர்வு செய்யப்படும் கொடுமையை அன்று அப்படித்தான் எடுத்துக் கொண்டது மனது. ஈ படம் சற்று முன்னதாக வந்திருக்கலாம். அந்த பெண்ணின் நிலை அவ்வளவு எளிதில் கடந்து போகக்கூடியது அல்ல என படத்தில் நாயகன் பிறந்த கதையை சொல்லும்போது நினைத்துக் கொண்டேன்.

தெருவில் ஒருவர் வெறும் கண்ணங்கரேலென்று ஒரு லுங்கி மட்டும் கட்டியிருப்பார். தாடியும் மீசையும் நிறைய தலைமயிருமாக சுற்றிக் கொண்டிருப்பார். தெருவில் அவரை எல்லா சிறுவர்களும் பி.காம் என்றழைத்தனர். யாரையாவது வைது கொண்டே இருப்பார். அது நம்மை அல்ல என்றும் நமக்குத் தெரியும். மேலும் அவர் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டியதேயில்லை. அக்காவை பார்த்தால் டீச்சரம்மா காசு கொடு என்பார். வீட்டில் சோறு கொடுத்தால் அதை தெரு முனையில் ஓரமாக வைத்துவிட்டு போய்விடுவார். எப்போதும் கரையான வாயில் பீடி இருக்கும்.

கொஞ்ச வருடங்கள் கழித்து மதுதான் அவர் பெயரை திலக்ராஜ் என்று சொன்னான். அவர் படித்தது பி.காம். இல்லை பி.ஏ என்றான். கொஞ்ச நாளைக்கு எங்களுக்குள் கிண்டலாக திலக்ராஜ் என்றழைத்துக் கொண்டோம்.  அது அவர் உண்மையான பெயரா என்று தெரியவில்லை. அவர் யாரென்று தெரியாமல் சக மனிதன் மீதான அக்கறை இல்லாமல் பதினெட்டு வருடங்கள் அந்த தெருவில் வாழ்ந்திருக்கிறேன். சிலவருடங்கள் கழித்து பெரியவனாக அந்த தெருவை வலம் வந்தபோது திலக்ராஜ் அங்கில்லை.

எப்போதும் அமைதியான அந்த அகலப்பாதையிலேயே எனக்கு பள்ளிக்கூடம் செல்வதில் விருப்பமிருந்தது. வேகமாக தனியே நடைப்போட்டுக் கொண்டிருந்தேன். ரோட்டின் ஓரத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக ஒரு உடல் படுத்துக் கிடந்தது. உடம்பில் பல இடங்களில் சதையை கரண்டி வைத்து எடுத்தது போல் காயம் பெரிதபெரிதாக. எந்த சலனமுமின்றி அவள் என்னை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். நான் இன்னும் வேகமாக நடையை கட்டினேன். அவளை எனக்கு தெரியும். உமா பைத்தியம். பல வருடங்களுக்கு முன் அக்காக்கள் அவளிடம் வம்பளந்து கொண்டிருந்தார்கள். அப்போதும் மனப்பிறழ்வில் இருந்தாள் என்றாலும் நன்றாக பூ, பொட்டுவைத்து நல்ல மாதிரியாகத்தான் இருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இரண்டு நாள் கழித்து சுரேஷும் கார்த்தியும் வந்து உமா பைத்தியம் செத்துப்போச்சு என்றார்கள். எல்லோரும் ச்சூள் கொட்டிவிட்டு அடுத்த நாளை எதிர்கொள்ளப் போய்விட்டோம்.  பின்னொரு நாள் ஆர்குட் வலைதளத்தில் ஒரு நண்பர் உமாபைத்தியத்தை பற்றி அஞ்சலி குறிப்பெழுதினார். எனக்கு அந்த பெண்ணின் வெறித்த கண்களையும் அதை கடந்து போன அந்த நிமிடத்தையும் மன்னிக்க முடியாமல் போனது. பல வருடங்கள் கழித்து முரளி என்னை சவுக்கால் சாடும் விதமாக தன் இளைப்பாறல் தொகுதியில் மாநகரம் என்று ஒரு கவிதை எழுதினார்.  அதில்

மழையையும் தாண்டி
மரணம் துப்பிய எச்சில்
மாநகரத்தின் முகத்தில் வழிகின்றது
அது முன்னிலும் வேகமாய் இயங்குகிறது
அன்பற்றதாக.

என்று முடித்திருந்தார். மாநகர மனிதனுக்கு மட்டுமல்ல நகரத்தில் வாழ்ந்த என்னையும் என் கையாலாகத்தனத்தையும் இந்த கவிதை  ஜென்மம் முழுக்க காறி உமிழ்ந்து கொண்டே இருக்கட்டும்.

Wednesday, April 4, 2018

அது சிகரெட் பிடிக்கிறது!

உண்மையிலேயே ஒரு சமவெளி நாகரிகத்திற்கு உதாரணமாக வாய்க்காங்கரைத் தெருவை சொல்லலாம். ஒரு கால்வாயின் கரை ஓரத்தில் அமைந்திருக்கும் வீடுகள்.  உண்மையில் தோட்டங்கள் அதன் பின் வீடு. வீடுகளின் முன்புறம் தெரு. அந்த தெருவின் பெயரை மாற்ற ஒரு ஜெயின் முயற்சி செய்தபோது அதை இன அழிப்பு நடவடிக்கை போல புரிந்து கொண்டு வீறுகொண்டு எதிர்த்த இளைஞர்களை கொண்டது அந்த வாய்க்காங்கரைத் தெரு. ஆனால் அவர்கள் யாரென்று சத்தியமாக எனக்கு தெரியாது.

தெரு முழுக்க பிராமணக் குடும்பம் இல்லை. பலதரப்பட்ட வகுப்பினரும் இருந்தனர். கொஞ்சம் வசதிகள் அதிகமிருந்த பிராமணர்கள் இருந்தார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பிராமணர்களும் இருந்தார்கள். வறுமைக்கோட்டுக்கு கீழே ஜாதி என்ன வேண்டியிருக்கிறது ம... என்கிறீர்களா அவர்களிடம் சொல்லிப்பாருங்கள். எக்ஸ்ட்ரா ரெண்டு ம... என்ற திட்டு உங்களுக்குத்தான் சேர்த்து கிடைக்கும். மற்றபடி பட்டியலின வகுப்பை சேர்ந்த யாரும் அங்கே இருந்ததாக ஞாபகமில்லை. அதற்கு ஈசானித் தெரு என்ற ஒன்று இருந்ததாக ஞாபகம் அதைதாண்டி அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

தெருவில் ஒருநாள் காலை வேளையில் வெள்ளை வெளேர் என்று இரண்டு பேர் நடந்து போய் கொண்டிருந்தனர். ஒருவர் ஆண். இன்றைக்கு கேட்டால் சட்டென்று வர்ணித்து விடுவேன் blonde ஆறடி உயரம். ஷார்ட்ஸ் அப்புறம் பேக்பேக் மாட்டியிருந்தார் என்று. கூடவந்த பெண்ணை இன்னும் நன்றாகவே வர்ணிப்பேன் ஆனால் அது இப்போது தேவையில்லை.


ஒரு இரண்டு வாரங்கள் இருந்திருப்பார்கள் எங்கள் தெருவில். அவர்கள் தங்கியிருந்த வீடு ஒரு பணக்கார பிராமணருடையது. அங்கே அவர்கள் வியாபார நிமித்தமாக வந்திருந்தார்கள். அந்த ஆண் அவ்வபோது தெருவில் சுதனுடன் shuttle விளையாடுவதை பார்த்திருக்கிறேன். அந்த பெண்ணை நான் வெளியே பார்த்ததே இல்லை.

என் அக்கா ட்யூஷன் எடுத்துக் கொண்டிருந்தார் நிறைய குழந்தைகளுக்கு. மதுவும் வந்து படித்துக் கொண்டிருந்தான். மதுவுடன் காயத்ரி என்ற பெண் படித்துக் கொண்டிருந்தாள். ரொம்பவும் வித்யாசமாக "இங்க வாவேன்" என்று விளிக்கும் பெண். அம்மா ரேவதி என்றும் அவர் அரசாங்க ஆஸ்பத்திரி செவிலி என்றும் ஞாபகம். எல்லோரும் மொட்டைமாடியில் ட்யூஷன் படித்துக் கொண்டிருந்தோம்.

திடிரென எங்களுக்குள் சலசலப்பு, நமுட்டு சிரிப்பு எல்லாம். நான் மதுவை என்ன என்பது போல் பார்க்க அந்த பக்கமாக கைகாட்டினார்கள். அங்கே இரண்டுவீட்டு மாடிகள் தாண்டி தெரிந்த மாடியில் அந்த வெள்ளைக்கார பெண் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள். கையில் ஒரு புத்தகம்.  நாங்கள் எல்லாம் ஹஸ்கி வாய்ஸில் என்னடா அது ஜட்டியோட உக்காந்திருக்கு, அய்யே சிகரட்டு குடிக்குது பாரேன் என்று பேசிக்கொண்டோம். தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்ற எந்த உணர்வும் இன்றி படித்துக் கொண்டிருந்தது எங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் வேடிக்கை அசிங்கம் எல்லாமாகவும் இருந்தது. அவளை ஓரிடத்தில் கூட அது என்ற சொல்லைத்தாண்டி உயர்திணையில் குறிப்பிடவே இல்லை.

அன்றைக்கு முப்பது வயது மதிக்கத்தக்க அவளைவிட இருபத்திரெண்டு வயது சிறியவனான நான் கிணற்றடியில் ஜட்டியோடு குளிக்க வெட்கப்பட்டு பாத்ரூமை தேடி ஓடிக்கொண்டிருந்தேன். இப்போது எப்படி என சந்தேகம் வேண்டாம். அட்டாச்ட் பாத்ரூம் தான். பின்னாளில் அதாவது வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு பாண்டிச்சேரி ஆரோவில் பீச்சில் அந்த பெண் உடைக்கு டூ-பீஸ் என்று பெயர் என அறிந்து கொண்டேன். நிறைய வெளிநாட்டுப் பெண்களை அந்த உடையில் பார்த்தும் இருக்கிறேன். அதற்கு சில வருடங்களுக்கு முன்பே ஆங்கில படங்களிலும் தற்போதைய தமிழ் படங்களிலும் பார்க்கிறேன். இப்போது பெண்கள் புகைப்பதையும் குடிப்பதையும்  ரொம்ப சகஜமாக எதிர்கொள்கிறேன். பார்க்கும் கண்களிலும் ஏற்கும் சிந்தனையிலும் தான் மாற்றம் வேண்டுமேயன்றி எதிர்ப்பாலினத்தை தரக்குறைவாய் எண்ணுவதில் கூடாது என்கிற அறிவை அன்றைக்கு நான் வசித்த சமவெளி நாகரிகத்தில் அறிந்து கொள்ளவில்லை. தவிர அன்று அதை அறியும் வயதும் அல்ல. ஆனால் எனக்கே எனக்கென்று எப்போதும் ஒரு க்யூரியாசிட்டி உண்டு. அதுதான் அப்போதும் இப்போதும் அந்த பெண்ணிடம் நான் அறிந்து கொள்ள விரும்புவதை எழுத தூண்டுகிறது. அது அந்த டூ-பீஸ் வெள்ளைக்காரப் பெண் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் பெயர் என்னவாயிருக்கும்?

Tuesday, April 3, 2018

கோடை என்றோர் வசந்தம்


மதியம் மூன்று மணி. நான் படுத்திருக்கும் கட்டில் அருகில் ஒரு ஜன்னல் உண்டு. அதன்வழியே மஞ்சள் ஒளி மிக உக்கிரமாய் இறங்கி கொண்டிருக்கிறது. ஏனோ அது ஜெயகாந்தனின் நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் கதையை ஞாபகப்படுத்தியபடி இருக்கிறது. கோடை வெயில் எப்போதுமே ஒரு வெறுமையை உணர்த்திக் கொண்டே இருக்கும் விநோதமான தனிமை வெளிச்சம். எவ்வளவு மகிழ்ச்சி வாழ்வில் எண்ணுவதற்கு இருக்கும்போதும் கோடையின் வெறுமைக்கென்று என் வாழ்வில் தனி இடம் உண்டு. அது ஒரு காலப்பயணத்திற்கான சாதனம்.



முழு ஆண்டுத்தேர்வின் கடைசிநாள் தரும்  adrenaline rush இருக்கிறதே அதற்கு முன் இருமுகன் inhaler எல்லாம் பிச்சை வாங்கவேண்டும். மனம் சந்தோஷம் பயம் எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு உணர்வை தைரியத்தை தரும். ஒருமுறை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சைக்கிள் ஹேண்ட்பாரில் கைவைக்காமல் ஓட்டிவந்தேன். இன்னொருமுறை வீட்டிற்கு வந்து தனியாக ஊஞ்சலில் ஆடிய வேகத்திற்கு வேறொருவராக இருந்தால் குடலே வெளியே வந்துவிடும். இதெல்லாம் ஒரு தைரியமா என்பவர்களுக்கு எனக்கும் தெனாலியை போல பல போபியாக்கள் உண்டு.

கோடை விடுமுறையின் முதல்நாள் மட்டும் பத்துமணி வரை தூங்கிப் பழகுவேன். அன்று மட்டும் எவ்வளவு நேரத் தூக்கம் என்றாலும் வீட்டில் திட்டுவிழவே விழாது. அப்புறம் மெதுவாக நம் பழைய பழக்கங்கள் மெல்ல எட்டிப்பார்க்கும் எட்டு மணிக்கு மேல் தூக்கம் வராது. அதன் பிறகு நேரத்தை கடத்த நமக்கு பல விஷயங்கள் கைகொடுக்கும். முக்கியமாக  தெருவில் கிரிக்கெட் அப்புறம் LMC கிரவுண்ட். அது இல்லாமல் கதை புத்தகங்கள் அப்புறம் விடுமுறைக்கு தவறாமல் மாமாவின் வீட்டிற்கு விசிட் செய்யும் விஜி அக்கா உமா அக்கா ஆர்த்தி மற்றும் ஆனந்த். அப்புறம் விக்னேஷின் உறவில் விவேக் பாலு காளி. இவர்களை என் எல்லா கோடை விடுமுறையிலும் பார்த்து விடுவோம் நாங்கள்(நான் மது, அவன் தங்கை ஆர்த்தி மற்றும் ஶ்ரீராம்).

ஆர்த்தியும் ஆனந்தும் வரும் நாட்கள் மிகச்சிறப்பான நாட்கள். அப்போதுதான் இராதா அண்ணா சுதன் வீட்டில் இருந்து விசிஆர் எடுத்து வந்து போடுவார். ஆங்கில சண்டை படங்களை நான் பார்த்து பழகிக் கொண்டது அப்போது தான். ஆகச்சிறந்த திரைப்படமான speed திரைப்படம் இராதாஅண்ணாவின் உபயத்தாலேயே பார்க்க முடிந்தது. இன்று நான் பார்க்கும் உலக சினிமாக்கள் அனைத்திற்கும் இராதா அண்ணா வாடகைக்கு எடுத்து வந்து போடும் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணம் ஆகும். சினிமா மீதான என் காதலுக்கு அவரும் ஒரு காரணம். முக்கியமாக அவர் சொன்ன courage of fire திரைக்கதை. சரவணன் கதை சொல்லும் ஒவ்வொரு முறையும் இராதா அண்ணா மனதில் வந்து போவார்.

அதே போல எல்லா கோடைவிடுமுறையிலும் எனக்கும் மதுவுக்கும் சண்டை வந்து விடும். ஒன்று அவன் adamant ஆக இருப்பான் இல்லை நான் புத்தி மட்டான ஆத்திரக்காரனாக இருப்பேன். எப்படியும் ஒரு சண்டையும் பின்னர் பத்துநாட்களுக்குள் சேர்ந்து கொள்வதும் கோடை ஸ்பெஷல்ஸில் ஒன்று. அதே போல வருடத்தில் ஒருமுறை மெட்றாஸ் போகும் வாய்ப்பு கோடை விடுமுறையில் மட்டுமே வாய்க்கும். எண்ணிப் பார்த்தால் அறுபது நாட்கள் தான் என்றாலும் அது கொடுக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி வாழ்க்கை தான்.

இன்றைக்கு சினிமாவும் புத்தகமும் என் வாழ்க்கையை நிறைத்திருக்கின்றன. நினைத்த படங்களை என்னால் பார்க்க முடியும். இராதா அண்ணா விடுமுறைக்கு வந்து விசிஆர் போட வேண்டும் என்றில்லை. நினைத்தவுடன் எனக்கு பிடித்தமான நண்பர்களுடன் அரட்டை விளையாட்டு என ஆனந்தமாக இருக்க முடியும். எந்த ஊரிலிருந்தும் யாரையும் எதிர்ப்பார்த்து இருக்கவில்லை தான். தேவை என்றால் எந்த ஊருக்கும் போய் வரலாம் தான். நிறைய நேரங்களும் இருக்கின்றன செலவிட. ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் கோடை விடுமுறை எனும் வசந்தத்தை நான் குறிப்பிட்ட  இவர்கள் எல்லாம் எனக்கு என்ன உறவு என்று நீங்கள் குழம்பிக் கொண்டிருக்கிற இவர்களோடு கொண்டாடாமல் கடக்கும் வெறுமையைத்தான் அந்த ஜன்னல் வெயில் என்னுள் நிறைத்துக் கொண்டிருக்கிறது மிக அதிகமாக.


Sunday, April 1, 2018

கக்கூஸ் - குற்றவுணர்வின் துவக்கமும் அச்சமும்

“இந்த பயங்கர நிலையில் இருத்தப்பட்டுங்கூட மனித உணர்ச்சி இப்படி இழிவுபடுத்தப்பட்டுங்கூட யாரும் ஆத்திரப்படாதது குறித்து அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது”.

புத்துயிர்ப்பு நாவலில் இருந்து லேவ் தால்ஸ்தாய் எழுதிய இந்த வரிகளில் ஆச்சரியப்பட்டதும் வருத்தப்பட்டதும் நிஜமாய் நான் இல்லை மதிப்பிற்குரிய தோழர் திவ்யா அவர்கள்.நானெல்லாம் இதை பற்றி கண்டும் காணாமல் வாழ்வதற்காக வெட்கப்படவேண்டும். படத்தின் முதல் காட்சியில் “கள்ள மௌனத்திற்கு” என்று சமர்ப்பிக்கப் படுகிறது. உண்மையில் அது கள்ள மௌனம் மட்டுமல்ல ஒரு பிடிவாதமான மௌனமும் கூட. “இப்படியெல்லாம் கூட பேர் வைப்பாங்களா?” என்று கேட்கிறார் என் சித்தி. பிடிவாதமான மௌனத்தின் மூலமாக இது போன்ற அவலங்களை ஒதுக்கி மறந்து கடக்க முயற்சிக்கும் என்னை போன்றோரின் கிண்டலான கேள்வி அது.




இந்த சமூகத்தில் ஒரு சாரார் மலம் அள்ளுவதை, அதுவும் வெறும் கையால் ஆம் வெறும் கையால் அள்ளும் அவலத்தை இத்தனை நாட்களாக நேரில் நான் பார்த்துவிடக்கூடாது என அஞ்சிய அந்த தொழிலை செய்வோரின் வாழ்வை ஆவணப்படுத்தியிருக்கிறது கக்கூஸ் ஆவணப்படம். அவர்கள் அள்ளுவதை காட்சியாய் பார்க்கும்போதே எனக்குள் குமட்டல் எடுத்துவிட்டது. அவர்கள் வாழ்வையே அந்த மலக்குழிக்குள் தள்ளியிருக்கிறோம்.  இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனாய் இதற்கு நான் வெட்கப்படுகிறேன். இதை மாற்ற இத்தனை நாள் யோசிக்க கூட இயலாத என் கையாலாகாத்தனத்திற்கு யாதொரு தண்டனையும் தகும்.

இந்த சமூகமும் அரசும் ஒரு சாராரை இப்படி வாழ வைப்பதை தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை நிரூபிப்பது போல அவர்களுக்கு உதவுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தையும் விலை அதிகம் என அரசு நிராகரிக்கிறது. எந்த மாவட்டத்திலும் இந்த அவலம் நிற்க வில்லை. ரோட்டோரமாயினும் சரி, பொது கழிப்பிடமானாலும் சரி எதுவாயினும் துப்புரவு தொழிலாளியே கையுறை கூட இல்லாமல் சரியான எந்த உபகரணமும் இல்லாமல் அதை சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. மனிதக்கழிவு மாத்திரம் அல்ல இறந்து போன நாய் பூனை எலி  ஏன் அநாதை பிணமாயினும் அவர்கள் தான் அதை எடுத்து போட்டு சுத்தம் செய்கிறார்கள். எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஒரு இறந்து போன மனிதரை வெறும் கையால் தூக்கி கொண்டு போனதை சொல்கிறார் ஒரு துப்புரவு தொழிலாளி. HIV +ve மிக மிக மிக குறைந்த அளவுள்ள ஒரு மனிதருக்கு சிகிச்சை செய்ய எவ்வளவு பாதுகாப்பு உபகரணங்களோடு போவார்கள் என பார்த்திருக்கிறேன். அவ்வளவு ஏன் சாதாரண நோயாளியின் ஒரு துளி ரத்தமாயினும் இல்லை அவர்களை தொடுவதாயினும் கையுறை, ஸ்ட்டர்லியம் இல்லாமல் அணுக மாட்டார்கள். ஆனால் நம் துப்புரவு தொழில் நண்பர்கள் பெண் தோழர்கள் இங்கே வெறும் கையால் வேலை செய்வதை கண்டும் காணமல் செல்கிறேன் நான். நகராட்சித்துறை, தனியார் ஒப்பந்தக்காரர்கள், நீதித்துறை, எதுவும் அவர்களுக்கு சாதகமாய் இல்லை. மலக்குழி மரணங்களை பற்றிப் பேசும்போது திவ்யா அவர்கள் அதை மலக்குழி கொலைகள் என குறிப்பிட சொன்னார். இது அரசு செய்யும் கொலை என்றார். அரசு மக்களுக்காக மக்களை கொண்டு மக்களால் நடத்தப்படும் ஜனநாயகம் எனில் இந்த மக்களில் ஒருவனான நானும் ஒரு கொலை குற்றவாளியே.

ஒருமுறை மக்கள் கவிஞர் சுகிர்தராணி ஒரு உரையில் குறிப்பிடும்போது தமிழில் மன்னிப்பு கோரும் இலக்கியம் ஒன்று இல்லை என்ற சொன்னார். இந்த பதிவு இலக்கியமல்ல. ஆனால் இந்த நாட்டை சுத்தம் செய்ய  நாம் பலி கொடுத்துக் கொண்டிருக்கும் துப்புரவாளர்களிடம், அரசு செய்யும் இந்த கொலைகளுக்கு உடந்தையாய் இருந்ததற்காக அவர்கள் குடும்பத்திற்கும் எழுத்தின் மூலமாக என் மன்னிப்பை கோருகிறேன்.

Thursday, March 29, 2018

Women of Desire

நேற்று தான் பேனா தொலைந்து போனது புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். அதிலே நான் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன் அங்கு யாருமில்லை என்று ஒரு கதை. படித்ததிலிருந்து எனக்கு ஊர் ஞாபகம் எல்லாம் இல்லை. ஊரோடு எனக்கு பெரிய உறவெல்லாம் இல்லை. அங்கே இருக்கும் திரையரங்குகளோடு சில ஞாபகங்கள் உண்டு.

சீர்காழியில் நான் இருந்த காலகட்டத்தில் மொத்தம் நான்கு திரையரங்குகள். இருந்தன. சிவகுமார், osm, துர்க்கா, ராஜா தியேட்டர்கள். இதில் சிவகுமார் தியேட்டருக்கு ஸ்டார் என்ற பெயரும் ராஜாவிற்கு ஜூப்பிடர் என்ற பெயரும் பழைய பெயர்கள். எப்போது இந்த பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ராஜா தியேட்டரை மட்டும் நான்கு பேர் முதல்போட்டு வாங்கி அதற்கு பாலாஜி திரையரங்கம் எனப் பெயர் வைத்து ஓட்டினார்கள். அந்த பெயர் மாற்றம் செய்த பிறகுதான் அங்கே புதிய திரைப்படங்களும் தமிழ் திரைப்படங்களும் காட்ட ஆரம்பித்தார்கள்.  அதுவரை ராஜா தியேட்டரில் "இங்கிலீஷ்" படங்கள் தான். போர்ன் என்ற வார்த்தை எல்லாம் அந்நியப்பட்டிருக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்கிற அடையாள எழுத்து மட்டுமே புரிகின்ற 'A' படங்கள்.

எனது ஏழாவது பரீட்சை ஆண்டு விடுமுறையில் ஒருநாள் மதியம் என் வீட்டற்கு மது வந்து வாசல் காலிங்பெல்லை அழுத்தினான்.  வாசலுக்கும் வீட்டுக்கும் 100 அடி தூரத்துக்கும் மேல். போய் என்னடா என்றால் சண்டை படம் ஒன்று போட்டிருக்கிறார்கள் ராஜா தியேட்டரில் வா போகலாம் என்றான். தனியாவா? என்றேன். இல்லடா நீ நான் அப்புறம் இதோ விஜயேந்திரன் மூனு பேரும் என்றான். இதுவரை தனியே சென்றதில்லையே என அப்பாவிடம் தயங்கிதயங்கி கேட்டேன். அப்பா ஏதோ யோசனையில் எந்த தியேட்டர் என்று கேட்டுவிட்டு சரிபோயிட்டு வா என்று பத்துரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பினார்.

கூடவே சேட்டு நண்பர்களும் வந்தார்களா என்பது நினைவில் இல்லை. வழியெங்கும் அந்த படத்தின் போஸ்ட்டரை தேடியபடியே சென்றேன். மெயின்ரோடு தாண்டி ஓரிடத்தில் ஒட்டப்பட்டிருந்தது. படத்தின் பெயர் jetli in The Legend. கிட்டத்தில் பார்த்தபோது கீழே U என்று பார்த்து மனது அப்பாடா என்றிருந்தது. அப்பா  என்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.
எல்லோரிடமும் பணம் வாங்கி டிக்கெட் கௌண்ட்டரில் டிக்கெட் எடுத்தான் மது. இதில் விஜெயேந்திரனுக்கு மட்டும் நான் மூன்று ரூபாயும் மது நான்கு ரூபாயும் காசு போட்டோம் ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் ஏழு ரூபாய். வீட்டில் சொல்லாமல் நண்பனுக்கு செய்த முதல் செலவு. யோசனை உபயம் குருநாதன் மது. 

விளம்பரம் நியூஸ் எல்லாம் போட்டு படம் ஆரம்பித்தபோது மனதில் இனம் புரியாத சந்தோஷம் தனியாக வந்திருக்கிறோம் என்று. படத்தில் பேசியவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசினார்கள். ஆனால் படத்தில் எல்லோரும் அக்ரஹாரத்து பையன்களை போல முன் மண்டையை சிரைத்திருந்தார்கள். பெண்களை போல பின்னே ஜடை பின்னியிருத்தார்கள். பெண்களோ கொண்டையிட்டிருந்தார்கள். எல்லோரும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக திரைக்கு அங்குமிங்கும் தாவிக்கொண்டிருந்தார்கள். இன்னார்தான் ஹீரோ என்று கண்டறிவதற்குள்ளாகவே இடைவேளை போட்டுவிட்டார்கள். 


இடைவேளை என்றால் ஆங்கிலப்படத்தின் அந்த ரீலை அப்படியே நிறுத்திவிடுவது. இப்போது போலல்லாம் அப்படியே pause ஆகாது. பட்டென்று கட் ஆகிவிடும். நிறுத்திவிட்டு படத்துக்கு சம்பந்தமில்லாத வேறொரு காட்சி. வெற்று வானமும் கடலும் நிறைந்த திரையில் படகில் ஒரு பெண்  தோன்றினாள். தன் கவுனை கழற்றி வெற்றுடலில் அவள் முழு உடலையும் காட்ட நான் கண்ணை பொத்திக்கொண்டேன்.

ஓரக்கண்களால் நண்பர்களை பார்த்தேன். ஏறக்குறைய எல்லாருமே கண்ணை மூடியது மாதிரிதான் இருந்தது. ஆனால் சிரித்துக் கொண்டே இருத்தோம். அப்புறம் அந்த டிரையிலர் முடிந்து இடைவேளை விட்டு தியேட்டர் கதவு திறந்தவுடன் மது செலவில் முறுக்கு வாங்கி சாப்பிட்டு மீதிப்படம் பார்த்து அரைகுரையாக நாங்களே திரைக்கதை சொல்லிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அப்பாவிடம் விஜயேந்திரனுக்கு செலவு செய்ததை தயங்கியபடி சொன்னேன். பரவாயில்லை ஆனால் இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றார்.

அப்பாவிடம் அந்த டிரெயிலர் விஷயத்தை சொல்லலாமா என்று யோசித்தேன். இல்லை வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். பத்தாவது படிக்கையில் வீட்டில் ஏதோ பேச்சுவாக்கில் அது A படம் என்று டைட்டானிக் படம் பற்றி பேசும்போது சொல்லி உதைவாங்கியபோது இரண்டு வருடங்கள் முன்பே நம் புத்திசாலித்தனம் வளர்ந்ததற்கு ஹார்லிக்ஸ்தான் காரணம் என்பதையும் அதை சாப்பிடுவதை நிறுத்தியது எவ்வளவு தவறு என்பதையும் புரிந்து கொண்டேன்.

பிற்பாடு மலீனா திரைப்படத்தில் பார்க்கும் போதும், அப்புறம் பாலக்குமாரனின் நாவலில் வரும் ஒரு விடலைப்பையன் ஆண்மை உணர்வு தாளாமல் அவதிப்படும் போதும் எனக்கு அந்த டிரையிலர் ஞாபகம் வந்தது.  இவ்வளவு ஞாபகங்களை சேகரித்தும் கூட  என் ஆண்மை விழிப்படைந்தது அந்த டிரைலர் பார்த்த அன்று தானா என்பது மட்டும் நிச்சயமாக தெரியவில்லை. பையன்களுக்கு புரிகிற வயதிலா பூப்பெய்கிறார்கள்? பெண்களுக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியாது. பையன்களிடம் இதை முறையாக பேசுவதற்கு என்ன வெளி இருக்கிறது குடும்ப அமைப்பில் என்று தெரியவில்லை. சரி நடந்து பல வருடங்கள் ஆன விஷயம். இப்போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அந்த வருத்தத்தையும் படத்தின் பெயரையும் பதிவு செய்யத்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். படத்தின் பெயரா..? பதிவின் தலைப்பை இன்னொருமுறை முனுமுனுத்துக் கொள்ளவும்.

Tuesday, March 27, 2018

அரசு பற்றி லெனின்

பெரிய கரப்பானை விட சிறிய மீனே மேல் என்று வேடிக்கையாக சொல்வார் லெனின்
நாங்கள் சின்ன மீன்கள் என்று சிரிப்பார்கள் ஊழியர்கள்.
அளவில் சிறியது பயனில் பெரியது என்று பாராட்டுவார் லெனின்  
                        --லெனினுக்கு மரணமில்லை புத்தகத்திலிருந்து....
எனக்கு தெரிந்த லெனின்:
ஸ்மோல்னி குளிர்கால அரண்மனை நோக்கி கிளர்ந்தெழுந்த நவம்பர் மாத அக்டோபர் புரட்சியின் நூறாவது வருடத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் உலகெங்கும் பரவிய எனதருமை காம்ரேட்களுக்கும் சோவியத்தை நிறுவ தங்கள் இன்னுயிரையும் அயராத உழைப்பையும் அளித்து 73 வருடங்கள் அதை காப்பாற்றிய காம்ரேட்களுக்கும் எனது வணக்கங்களை சமர்ப்பித்து இக்கட்டுரையை துவக்குகிறேன்.
எனக்கு லெனின் எங்கள் பள்ளி புத்தகத்தில் அறிமுகமானார். அவரோடு ஸ்டாலினும் இரும்புத்திரை நாடும் அறிமுகமானது. எங்கள் வரலாற்று  ஆசிரியர்களுக்கு லெனினை விட, ஸ்டாலினை விட சர்ச்சிலும், காந்தியை விட சந்திரபோசும் படேலும் பெரிய ஹீரோக்களாக தெரிந்தார்கள். அதனாலேயே லெனினை நான் தெரிந்துகொள்ள மிக அதிக காலம் பிடித்தது. இடைப்பட்ட ஒரு நாளில் ஏதோ ஒரு புத்தகத்தில் ஒரு முறை லெனின் சொன்னதாக, ஓரளவு என் ஞாபக அடுக்குகளில் இருந்ததை பதிவிடுகிறேன். ட்சாரின் அரியாசனம் போல அது. புரட்சிக்கு பிறகாய் இருக்கலாம் அதில் அதிகம் உயரமில்லாத லெனின் உட்கார்ந்தார். அவருடைய தோழர் சொல்கிறார் “உங்கள் கால்கள் தரையில் படக் கூட இல்லை.” லெனின் இப்படி பதிலளித்தார் என நினைக்கிறேன் “ஆம். ஆனால்  என் தலை வானத்தை நோக்கி நிமிர்ந்திருக்கிறது.”
அந்த கம்பீரத்தை அவர் ஸ்மோல்னி அரண்மனை நோக்கி நடக்கும் ஓவியத்தில் பார்த்தேன். அவர் 24 அக்டோபர் மாலை எழுதிய கடிதம் அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும். அது “இன்றே செயல் பட வேண்டும். தற்காலிக அரசாங்கத்தை கவிழ்க்கவேண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். நாம் உறுதியான நடவடிக்கை எடுக்கா விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது! நாளை நேரம் கடந்து போய்விடும்  இன்றுதான் கடைசித் தருணம்.”

நமக்குள் ஹீரோக்களை பற்றிய பொது அபிப்ராயம் உள்ளது. அவர்கள் மிடுக்காகவும், தோரணையாகவும், நேர்த்தியான உடை அணிந்தவர்களாகவும்  அண்ணார்ந்து பார்க்கப்பட வேண்டியவர்களாகவும் நாம் பிம்பத்தை வளர்த்துக் கொண்டுவிடுகிறோம். ஆனால் நிஜம் அப்படியல்ல என்பதற்கு லெனின் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அதை அமெரிக்க நிருபர் ரைஸ் வில்லியம்ஸ் வார்த்தைகளில் கூறுவதானால் “நாங்கள் உருவகப்படுத்தி வைத்திருந்ததற்கு அனேகாமாக எதிரிடையாக இருந்தார். வாட்டசாட்டமாகவும் மிடுக்குடனும் தோற்றம் அளிப்பதற்கு பதில் அவர் குட்டையாக கட்டுக்குட்டென்று இருந்தார். அவருடைய தாடியும் தலைமயிரும் முராடாக கலைந்து கிடந்தன”.
வில்லியம்சுடன் வந்த ஒரு நிருபர் கூறி இருக்கிறார் இப்படி “மிகவும் பெரிய வேலைக்கு மிகவும் சிறிய மனிதர்” சுருக்கமாக அவர்கள் யாருக்கும் லெனின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் அவை அனைத்தையும் தகர்த்தெறிந்தார் லெனின். அவரது உரைகளும் விவாதங்களும் புள்ளிவிவரங்களோடு இருந்தன. அவருடைய நிர்வாகம் நிதானமான உறுதியான சோவியத்திற்கு வழி வகுத்தது.  
மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கம்யுனிச சித்தாந்தத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி அதை வெற்றி பெறச் செய்ததினால் வரலாறு மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் என்று பதிவு செய்து கொண்டது என என் மாமா இரகு எனக்கு சொன்னார். சோவியத் மிக உறுதியாக  கட்டமைக்கப்பட அவரது அரசியல் உரைகளும், அவர் தன் சொந்த வாழ்விலும், நிர்வாகத்திலும் கடைபிடித்து வந்த கம்யுனிச கொள்கைகளும் உறுதுணையாய் இருந்தது எனச் சொன்னால் அது மிகையில்லை.எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருக்கும் கேக் கிடையாது என்ற கொள்கை அங்கே கடைபிடிக்கப் பட்டதை உதாரணமாக சொல்லலாம். ரேஷன் உணவுகளை மட்டுமே உட்கொண்டதையும் எல்லா தொழிலாளிக்கும் கொடுக்கும் 600 ரூபிள் சம்பளமே தனக்கும் என்று நிர்ணயம் செய்துகொண்டதையும் அவர் எவ்வளவு தூரம் மக்களுக்கு அண்மையில் இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும். (இன்று நாட்டிலேயே இல்லாமல் வெறும் சமூக வலைதளங்களில் மென்பொருட்களின் தயவோடு மக்கள் தொடர்பில் இருப்பதாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களே நமக்கு வாய்த்திருக்கிறார்கள்).
லெனின் சென்ற பாதையில் சோவியத் மக்கள் பின்னே நின்றனர். நிலம் உழுபவனுக்கு, தொழிற்சாலை தொழிலாளிக்கு என லெனின் தெளிவான குறிக்கோளுடன் இருந்தார். அதை மக்களுக்கு புரியும்படியான உரைகளிலும் கடிதங்களிலும் வலியுறுத்தி வந்தார். அவர் அரசு பற்றி நிகழ்த்திய ஒரு உரை பற்றி என்னளவில் புரிந்து கொண்டதை இங்கே பதிவு செய்கிறேன்.
அரசு பற்றி லெனின்:
அரசு என்பது என்ன என்ற தெளிவான உரையுடன் தொடங்கும் லெனின் அரசு ஒரு ஒழுங்குமுறை செய்யப்பட்ட வன்முறை கருவி என்கிறார், ஆதிப் பொதுவுடைமை சமுகத்தில் அரசென்று ஒன்று இல்லை. அரசின் தோற்றம் வர்க்கப்பிரிவினை இவை இரண்டும் ஒன்றாக தோன்றி இருக்கவேண்டும். சிறுபான்மையான ஒரு வர்க்கம் உழைப்பை சுரண்டி மூலதனத்தையும் அதில் கிடைக்கும் லாபங்களையும் அனுபவிக்கிறது. உழைப்பை கொடுப்பதற்கு தேவையான பலத்தை கொடுக்க மட்டுமே உன்ன உணவும் நீரும் உடையும் இருப்பிடத்தையும் இன்னொரு வர்க்கம் பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறது. உழைக்கும் வர்க்கம் அந்த நிலையிலிருந்து தாண்டிச் சென்றுவிடாதபடி கட்டுக்குள் வைத்திருக்க சுரண்டும் வர்க்கம் உபயோகிக்கும் ஒரு இயந்திரம், ஒரு கருவியே அரசு.

தீர்க்க தரிசனம் போன்ற இந்த உரை அடிமை, பண்ணையடிமை சமூகங்கள் தாண்டி பல ஆயிரம் வருடங்கள் கழித்தும் இன்றைய கோர்போரடே உலகத்தோடு மிக அழகாய் பொருந்துகிறது. இங்கே ஜனநாயக முறைப்படி அந்த வன்முறைக் கருவியை யார் கையாளவேண்டும் என்று தேர்வு செய்வது மட்டுமே இன்று எனது உரிமையை இருக்கிறது. அதுவும் நிபந்தனைக்கு உட்பட்டுவிடுகிறது. சில நேரங்களில் இன உரிமை கூட கள்ளத்தனமாய் மறுக்கப்படுகிறது. MNCயில் வாக்களிக்க பலரை விடுமுறை என்றபோதும் அனுமதிக்கவில்லை. அரசும் அதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது.

தோழர் லெனின் சொல்வது போல நாம் அரசை ஒரே நாளிலோ ஒரே வருடத்திலோ கூட அப்படியே புரிந்து கொண்டுவிட முடியாது. மீண்டும் மீண்டும் ஆராய வேண்டிய பொருள் அது. அவர் சொன்னதுபோல அது சாதியோடும் மதத்தோடும் போட்டு குழப்பிக் கொண்டு அனுகக்கூடாது. அரசை புரிந்து கொள்ள நாம் அடிமை பண்ணைஅடிமை சமூகத்தில் எப்படிப்பட்ட அரசுகள் நடத்தப்பட்டன என்றும் ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் எப்படி அரசில்லாமல் ஒரு சமூகம் நடந்தது என்றும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பிறகு இன்றைய முதலாளித்துவ ஆதிக்கத்தில் நம்மை ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் குழப்பி பிரித்து ஆளும் கருவியாக அரசு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசை பொறுத்தவரை உழைக்கும் இந்து உழைக்கும் முஸ்லிம் உழைக்கும் கிறிஸ்தவன் யாராக இருந்தாலும் இவர்கள் கிளர்ந்தெழுந்தால் கலகக்காரர்களே. அரசு முதலாளிகளை பாதுகாக்க மட்டுமே. முதலாளியாய் இருக்கும் எந்த மனிதனுக்கும் சேவகம் புரிவதே உழைப்பளியாய் இருக்கும் மனிதனின் கடமை என போதிக்கும் அரசு ஏதோ தெய்வீகம் வாய்ந்த ஒன்றாக மக்களை கருத செய்கிறார்கள் என்பதை தோழர் லெனின் விளக்கி இருக்கிறார்.

அந்த தெய்வத்திற்கு எதிராக கிளர்ந்தெழும்போது இன்றைய சூழல் நம்மை தேசியத்திற்கும் இறையாண்மைக்கும் எதிரானவன் என பட்டம் தரப்படுகிறது. அரசுக்கு எதிராக பேசுவதால் அரசின் கைத்தடிகளால் நாம் ஒடுக்கப்படுகிறோம். போலிஸ் ஜெயில் ராணுவம் என நம்மை ஒடுக்கும் ஆயுதங்களை பட்டியலிடுகிறார் லெனின். முடியரசு குடியரசு இரண்டிலும் இதுவே நிலை. ஆயினும் முடியரசிளிருந்து குடியரசு சற்று வேறுபடுகிறது. நமக்காக நாம் சிந்திக்க நமக்கு ஒரு வெளி கிடைத்திருக்கிறது. அதிகாரவர்க்கம் குண்டாந்தடி எடுப்பதற்கு முன் நம்மை நைச்சியப்படுத்துகிறது. தன சுயரூபத்தை வெளிப்படுத்தும் முன் நம்மை ஏமாற்றும் உத்திகளை முயன்று பார்க்கிறது. ஊடகம் மூலமாக சலுகைகள் மூலமாக, மதரீதியான பிணைப்பின் மூலமாக தன ஆக்டோபஸ் கரங்களை கொண்டு முதலில் தொழிலாளர் வர்க்கத்தின் கண்களை மூடப் பார்க்கிறது. விசுவாசமாய் இருத்தல் , பயந்து இருத்தல் போன்ற உத்திகளை ஆயிரம் ஆண்டுகளாய் போதித்து வந்த அது இப்போது எல்லோரையும் முதலாளிகள் ஆக்குவதாக போலியான ஓர் உத்தியை கையில் எடுத்திருக்கிறது. உதாரணமாக ஒவ்வோர் குடிமகனின் பெயரிலும் கருப்புப்பணம் 15 லட்சம் வைப்பு நிதியில் போடுவதாக பொய் பரப்பிய தற்போதைய ஆட்சியை சொல்லலாம். கருப்பு பணம் இந்நாட்டின் முதலாளிகளுடையது என்பதையும் அந்த முதலாளிகளை காக்கவே இந்த அரசு என்பதையும் இப்போதாவது நம் அருமை குடிமகன்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதுவும் முதலாளிகளிடம் கடனாக கொடுத்த பணமே வராதபோது கருப்பு பணம் மீட்பது எப்படி என்ற சந்தேகம் இந்நேரம் நம் குடிமக்களுக்கு வந்திருக்க வேண்டும்.
இதிலிருந்து கம்யுனிச அரசு எவ்வகையில் மாறுபடும் என்ற கேள்வி எழக்கூடும். ஏன் அவர்கள் ராணுவம் வைத்திருக்க மாட்டார்களா? ஜெயில் சிறைச்சாலைகள் இருக்காதா? என்ற கேள்விகள் கண்டிப்பாய் இருக்கும். லெனின் சொல்வது போல மூலதனத்தின் ஆதிக்கத்தை தூக்கி எறிய வேண்டிய ஒரு வர்க்கத்திடம் இந்த இயந்திரம் ஒப்படைக்கப் பட்டால்  அரசு என்பது சமத்துவத்தை ஆதாரமாக கொண்டது எனும் பழைய தப்பெண்ணங்கள் மறுக்கப்படும். அந்த இயந்திரத்தை பாட்டாளி வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் கையில் எடுக்கும். போலி வாக்குறுதிகளை அளிக்காத கம்யுனிச அரசு தெளிவான செயல் திட்டங்களுடன் இருக்கும். தொழிலாளிகளை பாதுகாத்து முதலாளிகளின் தனியுடைமைகளை பொதுவுடைமை ஆக்கும். தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு ஓர் சீரான சமூகமாக இயங்கும் வரையில் உபயோகப்படுத்தப்படும் அரசு எனும் கருவி.
சுரண்டலுக்கு வேண்டிய வாய்ப்பு உலகில் எவ்விடத்திலும் இல்லாமல் போகும்போது நிலா சொந்தக்கரர்களும் ஆளை சொந்தக்கரர்களும் எங்குமே இல்லை எனும்போது, சிலர் வயிறாற சாப்பிட மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை இல்லாத போது இதற்க்கெல்லாம் வாய்ப்பில்லை என ஆகும்போது சுருக்கமாக என்றைக்கு தனியுடைமை ஒழிந்து இருக்கிறதெல்லாம் பொதுவாய் ஆகிறதோ அன்று கம்யுனிசத்தோடு ஒட்டி இருக்கும் அரசு எனும் இயந்திரம் குப்பையில் எறியப்படும். கம்யுனிசம் சமூகமாக மலரும்.

முடிவாக:
உலகின் வருங்காலம் பற்றி லெனின் தொகுத்து உரைத்ததை சுருக்கி இங்கே பதிவிடுகிறேன்(அதற்கு எனக்கு உரிமையில்லை எனினும் கட்டுரையை முடிக்க அனுமதியும் மன்னிப்பும் கோருகிறேன்)
“ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிசத்தை நோக்கி தனக்கே உரிய வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிருபிப்பதாக தோன்றுகிறது. பற்பல தற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும்.”

இந்தியாவில் கம்யுனிசபூதம் கால் பதித்து 100 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 9 ஆண்டுகள் இருக்கின்றன. 100 வருடங்களுக்கு முன் ரஷியாவில் சோஷலிசத்தை நிறுவியதை காட்டிலும் இப்போது இங்கே எளிதாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் அங்கே முன்பு காணப்படாத அமைப்பு சட்டங்கள் ஸ்தாபனங்கள், எல்லா வகையான அறிவுத் துணைக்கருவிகள் ஆகியன இன்று நமக்கு கிடைத்திருக்கின்றன. முதலாளித்துவம் corporateஆக உருவெடுத்து இருந்தாலும் மக்களுக்கு இடதுசாரிகள் மீதான நம்பிக்கை இன்னும் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. 1905லிருந்து என வைத்துகொள்வோமே, அதிலிருந்து 12 வருட தயாரிப்புகளும் ஒரு நாளின் கிளர்சிசியும் ஒரு பொதுவுடைமை அரசை நிறுவி 73 வருடங்கள் உறுதியாய் வைத்திருந்திருக்கிறது. நமக்கு 9 வருடங்கள் இருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தை திரட்ட்டவும் அப்படி ஒரு அரசை நிறுவவும் அதை சமூகமாக மாற்றவும்.

அப்படி ஒரு சமூகத்தை நோக்கி நடைபோட என்று ஒரு பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கம் முனைந்து, இந்தியாவில் சோஷலிச வெற்றியை ருசிக்க ஆரம்பிக்கிறோமோ அன்று ஓர் உடலாக ரஷியாவிலும் உலகின் பல லட்சம் தொழிலாளர்களின் ஆத்மாவாகவும் வாழும் உங்களை சந்திக்க என்னை தயார் படுத்திக்கொள்வேன் தோழர் லெனின்.

வெக்கை என் பார்வையில்

மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்கு அரசியலில் நேர்மறையிலோ எதிர்மறையிலோ கணிசமான விகிதத்தில் பங்கு உண்டு என்பார் என் மாமா. புரியாமல் விழித்த அன்று  சொன்னார். அதோ அந்த வாழைப்பழ கடைக்காரருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு ஆனால் அவருக்கு அது தெரிந்திருக்காது. நீ படிப்பதில், பேசுவதில், ஏன் நீ யோசிக்கும் எந்த ஒரு  செயலிலும் அரசியலில்லாமல் அதன் பின்புலமின்றி இல்லை என்றார். இதை நான் இங்கே சொல்ல ஒரு காரணமுண்டு.
சிதம்பரம் என்னும் பதினைந்து வயது சிறுவனின் பழி தீர்த்தலும் அதன் காராணமும் அதன் விளைவும் ஏன் அதன் முற்றுமே கூட அரசியல் வியாபித்த ஒன்றுதான். ஒரு நிலவுடமை  பிரச்சினை, முதலாளித்துவம் ஆதிக்கம், வர்க்கப் பிரிவினை, அதன் ஜனநாயக வழிப் போராட்டமும், அதன் தோல்வியும், ஒரு ஆயுதமேந்திய தனிநபர்/குழுப் போராட்டம்(அது ஒரு வகையில் பழிதீர்க்கும் படலமெனினும்.). அதன் பிறகான அஞ்ஞாத வாசம், சட்ட சிக்கல், நீதிமன்றம் பணத்தின் பொம்மை என்று கதை நெடுக அரசியலின்றி வேறில்லை. தீர்வென்ன  என்று ஆசிரியரிடம் கேட்க முடியாது. கதை சொல்வது எளிது. பிரச்சினையை பிரச்சினையாக, அதன் மூலம் வரை எடுத்துரைத்துவிட முடியும் நம்மால். ஆனால் அதற்கு தீர்வென்பது வாசகன் கையில் தான் போலும். வேணுமெனில் ஒரு வாசகனாய் நான் இப்படி சொல்லிக்கொள்கிறேன். இவற்றிற்கெல்லாம் தீர்வென்று ஒன்று கிடையாது. ஒரு பிரச்சினைக்கு தீர்வு  இன்னொரு பிரச்சினையாகத்தான் இருக்க முடியும் என்ற விதியை இங்கே பொருத்திக் கொள்கிறேன்.





மேலே சொல்லப்பட்ட பத்தியில் கதை முடிந்து போகிறது சுலபமாய். ஒரு வெள்ளை துணியில் பட்ட சாயம் போல. அது நிஜத்தில் நடந்த சம்பவமாய் இருக்கலாம். அதை அழகான நுணுக்கமான ஓவியமாய் மாற்ற ஆசிரியர் எவ்வளவு  முயற்சித்திருப்பார் என்ற யோசனை கூட என்னால் சாத்தியப்படாத ஒன்று. சிறு வயதில் நாமும் பல வகையில் வாழ்ந்திருப்போம். குழந்தை விளை\யாட்டுகள் விளையாடி இருப்போம். அதே சமயத்தில் பெரிய பிரச்சினைகளை சமாளித்திருப்போம். விளையாட்டும், வன்மமும் எந்த மனிதனின் வாழ்விலும் பால்யத்திலிருந்து பிரிக்க இயலாத ஒன்று. எவரும் என் வாழ்வு  கடினமான வாழவே முடியாத ஒன்று என்று பீற்றிக் கொள்ள முடியாது. ஏனெனில் எல்லோரும் வாழ்ந்த வாழ்வைத்தான் நாமும் வாழ்கிறோம் சற்று வித்தியாசங்கள் இருக்கும். அவ்வளவுதான். ஒருவேளை என் பேரனிடமோ அல்லது பேத்தியிடமோ என் மகளோ மகனோ சொல்லக்கூடும் இப்படி "நாங்களெல்லாம் அந்த காலத்தில ஆடாத வீடியோ கேமா? அப்பல்லாம் அப்படி விளையாடிருக்கோம்" என்று. நாம் இன்று சொல்கிறோமே நான் பம்பரம், கிட்டிப்பில், எல்லாம் விளையாடி இருக்கிறேன் என்று. அது போல.


ஒரு உதாரணம் என் ஊரில் நடந்தது. அவன் பெயர் யானைக் கார்த்தி. ஒரு மட்டை பந்து விளையாட்டின் போது அவனுக்கும் என் நண்பனுக்கும் தகராறு வர அதில் அவன் என்  நண்பனின் அண்ணனை தரக்குறைவாய் பேசிட அது ஒரு நண்பர்கள் சண்டையிலிருந்து விரிந்து அரிவாள் எடுத்து குடும்ப சண்டையாய் பின் ஒரு ஜாதி சண்டையாய் போய் காவல் துறை தலையீட்டில் முடிந்தது. வெகுநாள் அதன் வஞ்சம் அவர்களுக்குள் புகைந்திருந்தது. இப்படி விளையாட்டுகளும் வன்முறையும் மாறலாம். அனால் ஆடும் மனநிலையும் வன்மமும்  நமக்கு அப்படியே இருக்கிறது தலைமுறை தலைமுறையாய் என்பதை இக்கதை எனக்கு அடித்துச் சொல்கிறது. அது மாறப்போவதில்லை. முயற்சித்துப் பார்க்கலாம்.


இக்கதையில் சிதம்பரமும் அவன் அண்ணனும் பல விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். காடு மலை என சுற்றித்திரிகிரார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கையிலேயே விளையாட்டு,  அன்றாட ஜீவனம், சண்டை, திருட்டு, கொலை, மருத்துவம் என்று இயைந்திருக்கிறது. வடக்கூரானும் அவன் மச்சினன் ஜின்னிங் பாக்டரி முதலாளியும் அந்த ஊரை வளைத்துப் போட்டுக்கொண்டே வர அதை தன்னளவில் எதிர்த்து நிற்கிறார்கள் சிதம்பரத்தின் அப்பாவும் மாமாவும். எதிர்ப்பது என்பது எதிரிகள் இருவரும் களத்தில் இன்றி நடத்தும் பனிப்போர் போல.  அந்த பனிபோரில் வஞ்சிக்கப்பட்டு பலியாகிறான் சிதம்பரத்தின் அண்ணன். (அவன் இயல்புகள் யாவுமே கவனிக்கப்பட வேண்டியவை. நம்மிடமும் அப்படி ஒரு மனிதரின் தாக்கமிருக்கும்). இப்போது போர் களத்தில் திட்டவட்டமாகி போகிறது. சிதம்பரம் குடும்பத்தில் உறவுகளில் எல்லோருமே வடக்கூரானின் எதிரி என்றாகிப் போகிறது. யார் பழி தீர்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் எல்லோருக்கும் முந்திக்கொள்கிறான் சிதம்பரம். அரிவாள் ஒன்று செய்து கொள்கிறான். குண்டு செய்யக் கற்றுக் கொள்கிறான். ஒரு திங்கட்கிழமை  சாயந்திரம் வடக்கூரானின் கையை வெட்டுவது என்று முடிவு செய்கிறான். ஆனால் இருட்டில் விலாவில் பதம் விழுந்து வடக்கூரான் இறந்து போகிறான்.


இங்கே பழி முடிந்து போகிறது.  பிறகு தான் இயல்பு வாழ்வின் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. அங்கே ஒரு ஓட்டம் ஆரம்பமாகிறது. நினைவுகளில் பல வந்து போகின்றது. அம்மா, அப்பாவியான அத்தை, மாமா, எல்லாவற்றுக்கும் மேலாக தன அப்பா என எல்லாரும் பாதிக்கப்படுகிறார்கள். தன் தந்தையே இப்படி ஒரு அஞ்ஞாத வாசத்தில் அகதியாய் ஒரு கிராமம் விட்டு இந்த கிராமத்தில் வாழ வந்தவர்  என்பதும் இப்போது ஏறக்குறைய தன நிலையும் அப்படித்தான் என்பதும் புரிகிறது. நீதிமன்றம் சென்று வழக்காடிப் பார்ப்பது என்று முடிவு செய்ய, வழக்கை நடத்த பணம் தேவை, அதை தயார் செய்ய நேரம் தேவை, அன்றாட சோற்றுக்கு பணம் தேவை, ஓரிடத்திலும் தங்க முடியாமல் ஓட பணம் தேவை என்று நல்லவன், கெட்டவன், குற்றம் செய்தவன் செய்யாதவன் எல்லாருக்கும் தேவையான பணம் இங்கே சிதம்பரத்துக்கும் அவன் தந்தைக்கும் தேவையாகிப் போகிறது. அதை சம்பாத்தித்துக் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராக  முடிவெடுக்கிறார்கள். அங்கே கொலையை தான் செய்யாததாக சொல்லப்போவதாக முடிவெடுக்கிறார்கள். ஒரு பழி முடிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. அதன பிறகான வாழ்க்கையை பற்றிய யோசனை உண்டு. அந்த வாழ்வில் சொல்ல முடியாத சோகங்கள் இருக்கும், ஒரு காதல் இருக்கும். ஒரு தங்கையின், தாயின் அரவனைப்பிருக்கும், ஒரு மாமனின் வழிகாட்டல் இருக்கும். அவையெல்லாம் எப்போதும் வேண்டும். ஒரு மனிதன் வாழ்ந்து இறந்து போகும் வரை வேண்டும். அதற்க்கேனும் அவர்கள் வழக்காடித்தான் ஆகவேண்டும். அதை இழுத்தடிக்க  முயற்சித்து தான் ஆகவேண்டும். எனவே அவர்கள் போராடித்தான் ஆகவேண்டும். நீதிமன்றம் குற்றமாய் பார்த்து அவர்களை தண்டிக்க முயற்சித்தாலும் அவர்கள் தன்னளைவில் இந்த போராட்டத்தை நடத்தித்தான் ஆகவேண்டும், வெட்டப்பட்ட பிறகும் துடிக்கும் உறுப்பு போல.


அதை தவறென்று சிதம்பரமோ, அவன் தந்தையோ, வாசகனோ சொல்ல முடியாது. இதன்  விளைவு இப்படியெல்லாம் என்பது தெரியும். தெரிய வேண்டும். நம் வாழ்விலும் சிதம்பரம் இருப்பார்கள். யோசித்துப் பாருங்கள். நீதிமன்றம், சிறை, காவல்துறை என்று ஒருபக்கம்  வாழ்ந்துகொண்டே தாய், தந்தை குடும்பம் நண்பர்கள் என்றும் வாழ்வார்கள். இதை அவலம் என்று சொல்வதா வாழ்க்கை என்று சொல்வதா தெரியவில்லை. ஆனால் எப்போதும் நம் தாத்தாவிடமிருந்து அப்பாவுக்கும், அப்பாவிடமிருந்து நமக்கும், நம்மிடமிருந்து நம் மகனுக்கும்/மகளுக்கும் ஏதோ ஒன்றை மீதம் வைக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அது யாதென்பதுதான் நம் கையில் இல்லை. அது நம்மை சிதைக்கும், நசுக்கும்,  ஆட்டுவிக்கும், ஒருவேளை முயற்சித்தால் மாறிப்போகும் பொருளாதாரத்தின், அரசியலின் கைகளில் இருக்கலாம்.

Sunday, March 25, 2018

நான் இந்துத்வன் இல்லை

சீர்காழியில் அது 2002 ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலை. புற்றடி மாரியம்மன் கோவில் தெரு சற்று விசாலமாய் அதே சமயம் கொஞ்சம் இருட்டாக இருக்கும். அந்த வீதி வழியே நடந்து போய் கொண்டிருந்தேன். எனக்கு முன்னே வேட்டி சட்டையில் போய் கொண்டிருந்த பையனை அப்போது தான் கவனித்தேன். நண்பன் மதுஎப்போதும் ஷார்ட்ஸ் அணியும் மது வித்யாசமாக வேட்டி கட்டியிருந்தான். அருகில் சென்று பார்த்தால் கை கால் நெற்றியில் எல்லாம் திருநீறு. “என்னடா இன்னைக்கு சந்த்யாவந்தனம் பண்ணினியா? நீ அதெல்லாம் செய்ய மாட்டியே" என்றேன். இவன் ஆரம்பித்தால் பின் என்னையும் திரும்ப ஆரம்பிக்க சொல்லிவிடுவார்கள் வீட்டில். ஏற்கனவே நடராஜன் மாமாவிற்கு பயந்து பயந்து தப்பித்துக் கொண்டிருக்கிறேன் நான் (அவர் பெயரை இங்கு எழுதுவது கூட உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தானே தவிர ஒரு நாளும் அவர் பெயரை உச்சரித்ததில்லை மனதளவில் கூட. மாமா என்று மனம் நினைத்தவுடன் அவர் முகம்தான் முதலில் நினைவில் வரும்). சரி மதுவின் கதைக்கு வருவோம். இவனை கேட்டால் இவன் அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் பஜ்ரங்கதள்ளில் சேரப்போகிறேன் என்றான்

பஜ்ரங்கதள் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு முக்கால் மணிநேரம் விளக்கினான். இந்து முஸ்லிம் சண்டை, பாபர் மசூதி பிரச்சினைக்கு தீர்வு என்று எதையெதையோ சொன்னான். பம்பாய் திரைப்படம் பார்த்த பிறகும்கூட எனக்கு அந்த பிரச்சினை சரியாக புரியவில்லை. அது வேறு கதை.  எனக்கு புரிந்ததெல்லாம் பஜ்ரங்கதள்  பிராமணர்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் வருவார்கள் போலிருக்கிறது என்ற அளவிலேயே புரிந்து கொண்டேன். அதற்கு மேல் எனக்கு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. நான் கேட்டேன்எப்படிடா அதுல சேருவது?” எனக்கு தனிப்பட்ட முறையில் அன்று நிறைய எதிரிகள் இருந்தார்கள். சரி நமக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கட்டுமே என்றுதான் கேட்டுவைத்தேன். அதற்கு அவன் நிறைய கட்டுப்பாடுகள் சொன்னான். முக்கியமாக நினைவில் இருப்பது அடிக்கடி வேட்டி கட்டவேண்டும் என்பது. என்னதான் பாரம்பரிய உடை என்றாலும் எனக்கு வேட்டி கட்டுவதில் இருந்த அசௌகரியமே எனக்கு பஜ்ரங்கதள் மீதிருந்த ஈடுபாட்டை வெட்டிவிட்டது. அன்றோடு அவனிடம் அந்த பேச்சை விடுத்தேன்.


பின்னர் நாளிதழ்களின் எல்லாவற்றிலும் அதுபோன்ற இயக்கங்கள் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டங்கள் படித்து அதன் மீதான எச்சரிக்கை உணர்வும் பின்னாளில் எதிர்ப்பு உணர்வுமே வளர்ந்தது. போதாதென்று இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் வேறு ஒரு கையெடுத்து கும்பிடுபவர் படத்தை போட்டு என் மனதை கலங்கச் செய்திருந்தது. நல்லகாலமாக மார்க்ஸ் காப்பாற்றினார் என்னை.  உண்மையாகத்தான் சொல்கிறேன் காப்பாற்றத்தான் பட்டிருக்கிறேன். நீங்கள் இ.பா. சிந்தன் அவர்களின் மொழிப்பெயர்ப்பில் வெளியாகவிருக்கும் புத்தகம் “இந்துத்வாவின் நிழல் ராணுவங்கள்” அவசியம் படித்துப்பாருங்கள். எவ்வளவு பெரிய வலையை அவர்கள் வீசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். செய்து வைத்த கொஞ்சநஞ்ச சமூகசீர்திருத்தங்களையும் அழித்து ஒரு நாட்டை மீண்டும் பலவருடங்கள் பின்னுக்கு தள்ள அவர்கள் எவ்வளவு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியும். நான் படித்த பள்ளிகளில் ஒரு உறுதிமொழி எடுக்க சொல்வார்கள். அது இந்தியர் அனைவரும் எனது சகோதர சகோதரிகள் என்று. அதை இவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இல்லை இவர்கள் தான் முடிவெடுப்பார்கள் யார் இந்தியர்கள் என்று.

என்னுடன் வேலை பார்த்த சுரேஷ் அடிக்கடி சொல்வான்நாங்கள் (அதாவது பா..) ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் அவர்கள் மதத்தை அவர்கள் வீட்டிலேயே வைத்துவிட்டு வரவேண்டும். ஏனென்றால் இது இந்துக்கள் நாடு என்பான்”. அதற்கு நான் சொன்ன மறுமொழி இங்கே வேண்டாம். ஆனால் அவன் சொன்னது 2012ல். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும் என்னிடம் தொலைப்பேசியில் கொக்கரித்தான். இந்த தேசத்தின் மக்களை எண்ணி கொதித்ததை தவிர அன்று நான் வேறு எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்று இந்த புத்தகம் எனக்கு ஒரு மிகப்பெரிய படிப்பினையை தந்திருக்கிறது. இப்போது  சுரேஷின் மீது எனக்கு பரிதாபம் அதிகரிக்கிறது. எப்படியெல்லாம் இந்த தேசத்தை மதத்தின் பெயரால் ஆட்டுவிக்கிறார்கள்.   என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு கடவுளை நம்புகிறீர்கள் என்பதாலும் அதற்கு குறிப்பிட்ட ஒரு மதத்தில் இருப்பதாலும் எப்படியெல்லாம் மார்கெட்டிங் செய்கிறார்கள். ஆசிரமம் அமைத்து அக்கிரமம் செய்தல், இளைஞர்களை கூலி அடியாட்களாக மாற்றி வன்முறையை கட்டவிழ்த்தல், இன்னொரு மதத்தை சேர்ந்தவர்களை அழிக்க யாத்திரை செய்தல், இன்னும் குண்டுவைக்க தூண்டுதல் கொலைசெய்ய தூண்டுதல் என முழுக்க முழுக்க அவர்கள் இதை நாடு முழுவதும் செய்யத்தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள் அவசரமே காட்டாமல் கிட்டத்தட்ட ஒரு நாற்பது வருடங்களாக பரவியிருக்கிறார்கள் இதுபோல. புத்தகம் இதை தாண்டி இன்னும் இரண்டு விஷயங்களை பேசுகிறது. அது ரானுவப்பள்ளி என்கிற பெயரில் இந்து தீவிரவாதத்தை வளர்த்தல் சீக்கிய மதத்தை சிறிய மதம் என்றும் அதை இந்து மதத்தினுள் அடக்கம்தான் என்றும் அதை நம்பவைக்க அவர்கள் நகர்த்தும் காய்களும் இருக்கிறதே. அடடா  இன்னமும் இந்த நாடு மக்களுக்கு விழிப்பு தட்டவில்லை என்றால் பன்மையில் ஒருமை என்கிற இந்திய தேசிய ஒருமைப்பாடு கேலிக்கூத்தாகிவிடும்.

பிற்பாடு என் தாய்மாமாவிடம்(இவர் உறவு) ஒருநாள் கேட்டேன். மாமா பஜ்ரங்கதள்னா என்ன? “அது ஒன்னுமில்லடா பஜ்ரங்னா குரங்குன்னு அர்த்தம். வானரப்படைஎன்றார். அந்த பஜ்ரங்கதள் மீதிருந்த மரியாதை போச்சு. இப்போது ஞாபகப்படுத்திப் பார்த்தால் அன்றைக்கு பிறகு நானும் மதுவை அந்த தோற்றத்தில் பார்க்கவில்லை. ஆனால் மது என்னை போல வேட்டி கட்டவேண்டுமே என்பதற்காக அந்த இயக்கத்தை கைவிட்டிருக்க மாட்டான். எனக்கு தெரிந்து அவன் மிகமிக புத்திசாலி. நிச்சயமாக பல இளைஞர்களைப் போல அந்த இயக்கத்தின் கேடுகளை வெகு சீக்கிரமே புரிந்திருப்பான். ஏனெனில் பின்னாளில் அவனே எனக்கு முன் கடவுள் மறுப்பாளன் ஆனான். சாதி மறுப்பு திருமணமும் செய்துகொண்டான். நல்லவேளையாக இந்த புத்தகத்தை அவனுக்கு பரிசாக அளிக்கவேண்டிய நிர்பந்தத்தை காலம் எனக்கு தரவில்லை.

(தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியாகவிருக்கும் "இந்துத்வாவின் நிழல் ராணுவங்கள் புத்தகத்தை படித்ததில் எழுந்த நினைவு குறிப்புகள்)

Saturday, March 24, 2018

உணவும் உணர்வும்



எண்சாண் உடம்பிற்கு அரைசாண் வயிரே பிராதானம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் நாம் யாரும் வயிற்றுக்கு போதும் என்று மட்டும் சாப்பிடுவதில்லை. பசி ருசியறியாது என்று சொல்லிக்கொண்டே உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று இன்னொரு சொல்லாடல் வைத்திருக்கிறோம். அதாவது ருசியில்லா பண்டம் நம் வயிறு ஏற்றாலும் நம் நாக்கு ஏற்பதில்லை. நரம்பில்லா நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசிவிடும் ருசியில்லா உணவென்றால். போனவாரம் என் நண்பர் தேனீ விசாகன் அவரை உணவகம் ஒன்றிற்கு அழைத்து சென்று சொன்னேன் இங்கே உள்ள பெரும்பாலான உணவுகள் வெளியே கிடைக்காது. சைவ உணவுகளில் அபூர்வமான சில உணவுகள் இங்கே உண்டு என்றேன். அதற்கு அவர் “ப்ராமணன் திங்க பிறந்தவன்” என்றார். அம்மாவிடம் சொன்னேன், அதற்கு அம்மா “ஆமாண்டா தின்னு கெட்டான் பிராமணன்னும் சொல்றதுண்டு” என்றார். எனக்கு தோன்றிற்று எல்லா மனிதனும் திங்க பொறந்தவந்தான். தின்னு கெட்டவன் தான். எல்லாருமே சாப்பாட்டு ராமன் தான், சாப்பாட்டு பிராமணன் தான்.




ருசியா சாப்பிடறது என நினைத்தவுடன் எனக்கு ஞாபகம் வருவது ராமராஜன் தான். அதற்கு பிறகுதான் கல்யாண சமையல் சாதம் பாட்டு, ராஜ்கிரண் எலும்பு கடித்தல் எல்லாம். கிட்டத்தட்ட நாம் பொறாமை கொள்ளும் அளவு ருசித்திருப்பார் ராமராஜன் அந்த படத்தில்(அத்தை சுட்ட அப்பளம்!!!). இப்படி ருசியை மட்டுமே நோக்காகி கொண்டு தேடி சாப்பிடும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு கடையாய் தேடி அங்குள்ள உணவை ருசி பார்த்து அடடா என சொல்லிச்சொல்லி சாப்பிடும் மனிதர்கள் உண்டு. இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும் உணவை தேடி உண்பவனாகிப் போனேன். எல்லா மனிதர்களும் வேலை முடித்து வரும்போது அல்வா, சேவு வடை என எதையாவது வாங்கிகொண்டு செல்லும் வழக்கம் இருந்தது. நாலுபேர் சாப்பிட்டு அதை எட்டுபேருக்கு சொல்லி அது நூறாகி ஊராகி பின் நாடு முழுவதும் கூட பிரசித்தி பெற்றுவிடுகிறது. மேலை நாடுகளில் Food Critics உண்டு. அவர்கள் எழுதும் விமர்சனங்கள் சிலசமயம் ஒரு உணவகத்தையே இழுத்து மூடுமளவு சென்றுவிடும். சில நொடிந்த உணவகங்களை மேலே மேலே உயர்த்திவிடும். இதோடு நில்லாமல் health department முறைவைத்து ஆய்வு செய்யும் உணவகத்தின் சுத்தம் உணவின் தரம் அனைத்தையும் ஆராயும். இங்கும் அவையெல்லாம் உண்டு என்றபோதும் அதை பெரியளவில் யாரும் கண்டுகொள்ளமல் இருக்கிறார்கள்.

ஆனாலும் நமக்கும் இப்போது சில பழக்கங்கள் கைவந்திருக்கின்றன. உணவை விமர்சனம் செய்தல் அதை பற்றி பேசுதல் என. சமூகவளைதளம் அதற்கு ஒரு மிகப்பெரிய இடத்தை கொடுத்திருக்கிறது. நமக்கு ஒரு உணவு பற்றி அதன் தரம் தெரிய வேண்டுமா? அதை சொல்லும் முகநூல் விமர்சகர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிறு ஆறுதல் இங்கே. அவர்கள் எண்ண ஓட்டங்களை நாம் நேரில் பார்க்க முடியும்போது பெரும்பாலும் கண்டுபிடித்துவிடாலாம். அது பொய்யா மெய்யா என்று. சினிமா விமர்சனம் போலன்றி இதில் முகமே காட்டிகொடுத்துவிடும் உணவு ருசியை. எழுதுகிறார்கள் எனில் ரொம்ப நேரம் விஷயத்தை சொல்லாமல் சிலாகிக்க முடியாது. சுருக்கமாக அவர்கள் எழுதும்போதும் பேசும்போதும் நமக்கு நாவில் எச்சில் ஊறவேண்டும். இந்த இடத்தில் டேவிட் சாரை அறிமுகம் செய்வது சாலப் பொருத்தமாக இருக்கும். அவர் உலகில் உள்ள ஏறக்குறைய பல நாடுகளுக்கு சென்று உணவுகளை ருசி பார்த்திருக்கிறார். உள்ளூர் நத்தை குழம்பில் ஆரம்பித்து நெருப்புக்கோழி, பாம்பு, முதலை கறி என எல்லாவற்றையும் ருசி பார்த்தவர். அவர் சொல்வதை கேட்கும்போது என்னமோ நாமும் அவருடன் ஆந்த இடத்தில் அமர்ந்து ருசிக்க தவறிவிட்டோமே என்றிருக்கும். அது நிச்சயமாய் போலித்தனமாய் இருக்காது. சொல்லும்போதே நமக்கு பசிக்க ஆரம்பித்துவிடும்.

எங்கோ காடுகளில் பச்சை மாமிசமும் இலை தழைகளும் உண்டோம். பிறகு அதையே ஆடையாக்கினோம். உண்பதிலிருந்து உடுப்பது வரை நெருப்பு கொண்டு வாட்டி பக்குவப் படுத்தினோம். நிலத்தை கீறி விதை விதைத்து விவசாய விஞ்ஞானம் செய்தோம். இறைச்சியை பதப்படுத்தி உப்பிட்டு தீயில்ட்டு பின் விளைந்ததையும் இறந்ததையும் ஒன்றாய் கலந்து சாப்பிட ஆரம்பித்து பின் அதில் சர்க்கரை, சத்து, புரதம் என ஆராய்ந்து ஏறக்குறைய உணவை ஒரு மாபெரும் தொழிற்கூடப் பயிற்சியாக்கி இருக்கிறோம். யாருக்கும் ரொட்டி இல்லை என்றால் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொன்ன சர்வாதிகாரத்திலிருந்து எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருக்கும் கேக் கிடையாது என சொன்ன பொதுவுடைமை வரை உணவின் பின்னே ஒரு மாபெரும் அரசியலை உருவாக்கியிருக்கிறோம். அன்னமிடுவதையும் உண்பதையுமே ஒரு கௌரவம் சம்பந்தப் பட்டதாக கூட மாற்றியிருக்கிறோம்.

இறுதியாக இன்று நாம் விதம் விதமாக சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதை விமர்சனமும் செய்கிறோம். நம் உணர்வில் கலந்துவிட்ட ஒவ்வொரு உணவும் அதன் ருசியும் நம் ரத்தத்தில் கலந்து நாம் இறக்கும்வரை ஞாபகம் வைக்கப்படிருக்கிறது ஏறக்குறைய ஒரே ஒரு உணவை தவிர. அது தாய்ப்பால். இதை படிக்கும் யாருக்கேனும் முரண்பாடிருக்கலாம் ஆனால் எனக்கு ஞாபகமில்லை சத்தியமாக.


(நண்பரும் அண்ணனுமான இயக்குனர் சரவண கார்மேகம் அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலில் விளைந்த குறிப்புகள்)