மதியம் மூன்று மணி. நான் படுத்திருக்கும் கட்டில் அருகில் ஒரு ஜன்னல் உண்டு. அதன்வழியே மஞ்சள் ஒளி மிக உக்கிரமாய் இறங்கி கொண்டிருக்கிறது. ஏனோ அது ஜெயகாந்தனின் நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் கதையை ஞாபகப்படுத்தியபடி இருக்கிறது. கோடை வெயில் எப்போதுமே ஒரு வெறுமையை உணர்த்திக் கொண்டே இருக்கும் விநோதமான தனிமை வெளிச்சம். எவ்வளவு மகிழ்ச்சி வாழ்வில் எண்ணுவதற்கு இருக்கும்போதும் கோடையின் வெறுமைக்கென்று என் வாழ்வில் தனி இடம் உண்டு. அது ஒரு காலப்பயணத்திற்கான சாதனம்.
முழு ஆண்டுத்தேர்வின் கடைசிநாள் தரும் adrenaline rush இருக்கிறதே அதற்கு முன் இருமுகன் inhaler எல்லாம் பிச்சை வாங்கவேண்டும். மனம் சந்தோஷம் பயம் எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு உணர்வை தைரியத்தை தரும். ஒருமுறை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சைக்கிள் ஹேண்ட்பாரில் கைவைக்காமல் ஓட்டிவந்தேன். இன்னொருமுறை வீட்டிற்கு வந்து தனியாக ஊஞ்சலில் ஆடிய வேகத்திற்கு வேறொருவராக இருந்தால் குடலே வெளியே வந்துவிடும். இதெல்லாம் ஒரு தைரியமா என்பவர்களுக்கு எனக்கும் தெனாலியை போல பல போபியாக்கள் உண்டு.
கோடை விடுமுறையின் முதல்நாள் மட்டும் பத்துமணி வரை தூங்கிப் பழகுவேன். அன்று மட்டும் எவ்வளவு நேரத் தூக்கம் என்றாலும் வீட்டில் திட்டுவிழவே விழாது. அப்புறம் மெதுவாக நம் பழைய பழக்கங்கள் மெல்ல எட்டிப்பார்க்கும் எட்டு மணிக்கு மேல் தூக்கம் வராது. அதன் பிறகு நேரத்தை கடத்த நமக்கு பல விஷயங்கள் கைகொடுக்கும். முக்கியமாக தெருவில் கிரிக்கெட் அப்புறம் LMC கிரவுண்ட். அது இல்லாமல் கதை புத்தகங்கள் அப்புறம் விடுமுறைக்கு தவறாமல் மாமாவின் வீட்டிற்கு விசிட் செய்யும் விஜி அக்கா உமா அக்கா ஆர்த்தி மற்றும் ஆனந்த். அப்புறம் விக்னேஷின் உறவில் விவேக் பாலு காளி. இவர்களை என் எல்லா கோடை விடுமுறையிலும் பார்த்து விடுவோம் நாங்கள்(நான் மது, அவன் தங்கை ஆர்த்தி மற்றும் ஶ்ரீராம்).
ஆர்த்தியும் ஆனந்தும் வரும் நாட்கள் மிகச்சிறப்பான நாட்கள். அப்போதுதான் இராதா அண்ணா சுதன் வீட்டில் இருந்து விசிஆர் எடுத்து வந்து போடுவார். ஆங்கில சண்டை படங்களை நான் பார்த்து பழகிக் கொண்டது அப்போது தான். ஆகச்சிறந்த திரைப்படமான speed திரைப்படம் இராதாஅண்ணாவின் உபயத்தாலேயே பார்க்க முடிந்தது. இன்று நான் பார்க்கும் உலக சினிமாக்கள் அனைத்திற்கும் இராதா அண்ணா வாடகைக்கு எடுத்து வந்து போடும் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணம் ஆகும். சினிமா மீதான என் காதலுக்கு அவரும் ஒரு காரணம். முக்கியமாக அவர் சொன்ன courage of fire திரைக்கதை. சரவணன் கதை சொல்லும் ஒவ்வொரு முறையும் இராதா அண்ணா மனதில் வந்து போவார்.
அதே போல எல்லா கோடைவிடுமுறையிலும் எனக்கும் மதுவுக்கும் சண்டை வந்து விடும். ஒன்று அவன் adamant ஆக இருப்பான் இல்லை நான் புத்தி மட்டான ஆத்திரக்காரனாக இருப்பேன். எப்படியும் ஒரு சண்டையும் பின்னர் பத்துநாட்களுக்குள் சேர்ந்து கொள்வதும் கோடை ஸ்பெஷல்ஸில் ஒன்று. அதே போல வருடத்தில் ஒருமுறை மெட்றாஸ் போகும் வாய்ப்பு கோடை விடுமுறையில் மட்டுமே வாய்க்கும். எண்ணிப் பார்த்தால் அறுபது நாட்கள் தான் என்றாலும் அது கொடுக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி வாழ்க்கை தான்.
இன்றைக்கு சினிமாவும் புத்தகமும் என் வாழ்க்கையை நிறைத்திருக்கின்றன. நினைத்த படங்களை என்னால் பார்க்க முடியும். இராதா அண்ணா விடுமுறைக்கு வந்து விசிஆர் போட வேண்டும் என்றில்லை. நினைத்தவுடன் எனக்கு பிடித்தமான நண்பர்களுடன் அரட்டை விளையாட்டு என ஆனந்தமாக இருக்க முடியும். எந்த ஊரிலிருந்தும் யாரையும் எதிர்ப்பார்த்து இருக்கவில்லை தான். தேவை என்றால் எந்த ஊருக்கும் போய் வரலாம் தான். நிறைய நேரங்களும் இருக்கின்றன செலவிட. ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் கோடை விடுமுறை எனும் வசந்தத்தை நான் குறிப்பிட்ட இவர்கள் எல்லாம் எனக்கு என்ன உறவு என்று நீங்கள் குழம்பிக் கொண்டிருக்கிற இவர்களோடு கொண்டாடாமல் கடக்கும் வெறுமையைத்தான் அந்த ஜன்னல் வெயில் என்னுள் நிறைத்துக் கொண்டிருக்கிறது மிக அதிகமாக.
No comments:
Post a Comment