Sunday, April 8, 2018

சிவப்பு தொப்பியணிந்த சிவப்பு பையன்


சரியாக வாய்க்காங்கரைத் தெருவுக்கு இணையாக செல்லும் சீர்காழி மெயின் ரோடு. அங்கே ச.மு.இ. உயர்நிலைப் பள்ளிக்கு பக்கத்தில் இருப்பான் அவன். சிகப்பாய் தொப்பி அணிந்துகொண்டு ஒரு இந்திய சராசரி பெண்ணின் உயரத்துக்கு ஓரடி கம்மியாக இருப்பான் அவன். கருப்பு வாயை எப்போதும் திறந்த படியே வைத்திருப்பான். அந்த வாயில்தான் நான் என் பெரியம்மாவிற்கு எழுதிய முதல் கடுதாசியை போட்டேன். பூட்டு போட்ட பெரிய வயிற்றில் அதை பத்திரமாய் வைத்துக்கொண்டான்.



ஊரில் ஒருசமயம் பலபேருக்கு போஸ்ட் ஆபீஸ் போவது ஒரு வேலையாக இருக்கும். அந்த போஸ்ட்ஆபீஸுக்கு சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்தும் வருவார்கள். எனக்கு தெரிந்து வங்கிக்கு இணையாக அங்கே கூட்டமிருக்கும். எதையாவது எழுதிய வண்ணம் இருப்பார்கள். Inland லெட்டர் இதை இங்க்லேண்டு லெட்டர் என்றே உச்சரித்துக் கொண்டிருந்தேன், புலிப்படம் போட்ட போஸ்ட்கார்ட் என்று எதிலாவது தங்கள் தகவல்களை பொறித்துக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இங்க்பேனா உபயோகிப்பார்கள். ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் எழுதினாலும் ஒரு மாதிரியான கூட்டெழுத்தை உபயோகிப்பார்கள். தமிழில் எழுதினால் நலம் நலமறிய ஆவல் என்கிற வரிகள் நிச்சயம் இருக்கும். ஆங்கிலத்தில் regarding என்கிற சொல்லைப் போல இப்பவும் என்கிற சொல்லை தமிழில் உபயோகிப்பார்கள்.

நான் மேலே சொன்ன எதையுமே பின்பற்றியதில்லை கடிதம் எழுதும்போது நலம் நலமறிய ஆவல் வரிகளைத் தவிர. இரண்டாம் வகுப்பிற்கு செல்லும்போது என்னமோ சென்னையிலிருக்கும் பெரியம்மாவிற்கு கடிதம் எழுதவேண்டும் என்ற பேராவல் பிறந்தது எனக்கு. இருபத்தைந்து பைசாவிற்கு ஒரு போஸ்ட்கார்ட் வாங்கி அதில் அடித்தல் திருத்தலோடு எழுதி இப்படிக்கு பாலாji என்று முடிக்கும் இடத்தில் மூன்று அடித்தல் திருத்தல் வேறு. அவ்வபோது அப்பா அம்மா கொடுக்கும் கடிதங்கள் பெரும்பாலும் மாமாவுக்கும் தாத்தாவுக்கும் எழுதுவதை நான்தான் சிவப்பு பையனிடம் சேர்ப்பேன். புது போஸ்ட்கார்டும் வாங்கி வருவேன்.

அப்படி வாங்கிய அன்று ஒருநாள் ஐம்பது வயது மதிக்கத்தக்க அவர் என்னிடம் தம்பி ஒரு லெட்டர் எழுதித் தர்றியா என்றார். நான் என் கையெழுத்து நல்லா இருக்காதே என்றேன். பரவாயில்லை எழுது என்றார். எழுத தயாரானேன். "மரியாதைக்குரிய மாப்பிள்ளை அவர்களுக்கு, என் பெண்ணை வீட்டைவிட்டு விரட்டியது நியாயமா? இந்த பாவம் உங்களை சும்மா விடுமா? என் பெண்ணின் கதி என்ன?" என்று நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனக்கு பழகாத சொற்களை கோர்த்துக்கொண்டே போனார். நானும் பல அடித்தல் திருத்தல்களோடு எழுதி அவர் சொன்ன முகவரிக்கு 50பைசா ஸ்டாம்ப் ஒட்டி அந்த தபால்பையனின் வாயில் வைத்துவிட்டு வந்தேன். பின்னாளில் அக்காவின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனஸ்தாபங்களின் போது அப்பா பட்ட துயரங்கள் அந்த போஸ்ட்கார்ட் எழுதச் சொன்ன மனிதரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது.

மூன்றாம் வகுப்பில் இருந்தே தமிழிலும் ஆங்கிலத்திலும் கடிதம் வரையக் கற்றுக்கொடுத்துவிடுவார்கள்.  கடிதம் எழுதுதல் என்ற வார்த்தையைவிட கடிதம் வரைதல் என்ற வார்த்தையே எப்போதும் பிடித்தமானது. வார்த்தைகளை கொண்டு வரையத்தான் செய்கிறோம். வரைந்த கடிதங்கள் செய்யும் அற்புதங்கள் கொஞ்சமில்லை. நிறையவே. ஜென்னியும் மார்க்ஸும் வரைந்து கொண்ட காதல் கடிதங்களும் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்களும் வரலாற்றில் கடிதங்கள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு சாட்சியங்கள்.  கி.ராவுக்கும் கு.அழகிரிசாமிக்கும் இடையிலான கடிதங்கள் சுவைக்க சுவைக்க தெவிட்டாதவை. இதை எல்லாம் படிக்க நேரமில்லை என்பவர்கள் குறைந்தபட்சம் கடித இலக்கியத்தின் துணைக்கொண்டு உருவாக்கப்பட்ட காவியம் காதல்கோட்டை படமாவது பாருங்கள். ஒரு பக்கம் அஜித் ஒரு பக்கம் தேவயானி நடுவே இங்கிலேண்டு லெட்டர் கொண்ட அந்த படத்தின் போஸ்ட்டரை  மறக்கவே முடியாது என்னால்.

ஒருவருக்கு இன்னொருவர் கடிதம் எழுதி அனுப்புகிறார் என்பதே பெருமைக்குரிய செயலாக இருந்தது. அதனாலேயே புதுவருடத்திற்கும் பொங்கலுக்கும் வாழ்த்து அட்டைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். எனக்கு சில நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்றாலும் நினைவில் இருப்பது D.கார்த்தி அனுப்பிய வாழ்த்து அட்டை தான். அதில் வெற்றி என்பது அலைகளை எதிர்த்து மிதவைப்பலகையில் பயணம் செய்வதை போல (surfing! surfing!) என்று எழுதியிருந்தது ஆங்கிலத்தில். பலவருடங்கள் அந்த அட்டையை பத்திரமாக வைத்திருந்தேன்.  சிலவருடங்களுக்கு பிறகு வாழ்த்து அட்டைகளை வாங்கிக் கொள்ள பச்சைதொப்பியனிந்த குட்டிப்பச்சை பையனை வைத்தார்கள். அவன் சிவப்பு பையனுக்கு உதவியாக பண்டிகை காலங்களில் மட்டும் இருப்பான்.

இன்றைக்கு மூன்று வரிகளுக்கு மேல் மின்னஞ்சல் செய்வது இல்லை. ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும் மூன்றுவரிக்கு மிகாமல் எழுதப்படும் என் கடிதங்கள் நொடியில் பயணம் செய்து கொண்டிருக்கிறது  மின்னனுத் துகள்களாக. வாழ்த்து அட்டைகளுக்கென்றே இணையதளத்தில் முகநூலும் இன்னபிற சமூகவலைத்தளங்களும் வேலை செய்கின்றன. தபால் பையனின் தேவைகள் குறைந்துவிட்டது. அவனுக்கு இனி யார் சோகத்தையும் மகிழ்ச்சியையும் நலத்தையும் சுகவீனத்தையும் பற்றி தன்னுள் பூட்டிவைத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவன் வயிறு தற்போது பட்டினியாகத்தான் கிடக்கும். அவன் வாய் பெரும்பாலும் காற்றைத்தான் உறிஞ்சிக் கொண்டிருக்கும். ஆனால் அடுத்தவர் சோகத்தையும் துக்கத்தையும் தன் வயிற்றில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதில் அவன் மனம் சற்று பாரமில்லாமல் இருக்கும் . ஒருவேளை அவன் இறுதி நாட்களுக்கு அது ஆறுதலாய் இருக்கக்கூடும்.

No comments:

Post a Comment