Thursday, April 5, 2018

கடந்து போனவர்கள்


ரமேஷும் அவன் நண்பர்களும் அந்த பாழடைந்த மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். எல்லோருமே சற்று அதிகமான போதையிலேயே இருந்தனர்.  மண்டபம் சுற்றிலும் வயக்காட்டு இருட்டு. உள்ளே கும்மிருட்டு. திடிரென ஒரு மனிதன் மண்டபத்தின் உள்ளிருந்து வெளியே வந்தான். கூட்டமாக இருந்த இவர்கள் யாருய்யா நீ என்றனர் அதிகாரமாய். அவனோ கொஞ்சம் திடுக்கிட்டு தயங்கியபடி ஒன்னுமில்ல தம்பி வெளிக்கு இருக்க வந்தேன். வேற ஒன்னுமில்ல என்றபடியே அவசரமாக ஓடிவிட்டான். சில நிமிடங்கள் கழித்து அடித்த பீருக்கு ஒரு நண்பனுக்கு அவசரமாக இயற்கை உபாதை வர அவன் இருட்டு மண்டபத்தின் உள்ளே சிறுநீர் கழிக்கச் சென்றான். சென்றவன் திரும்பி அலறியடித்தபடி பேய் டா என்று ஓடிவந்தான். இவர்கள் என்ன என்ன என அவனை சமாதானப்படுத்திவிட்டு உள்ளே சென்று பார்த்தனர்.




"பார்த்தா... இங்கே கொஞ்ச நாளா கருப்பு ட்ரெஸ்ல ஒன்னு சுத்திகிட்டு இருந்துச்சுல்ல பைத்தியம் அதுதான். அதத்தான் அந்தாள் அவ்ளோ நேரம் போட்டுட்டிருந்திருக்கான்". இரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தான் இரமேஷ். அப்புறம் என்றேன். அப்பறமென்ன.. அது ஒருமாதிரி ஒப்பாரி வெச்சுகிட்டிருந்தது. நான் முடிச்சுப்புட்டான்ல போபோன்னு வெரட்டிவிட்டோம். லூசுக்... பைத்தியத்தை போய் செஞ்சிருக்கான் பாரு என்று சிரித்தான். எல்லோருமே ஒருமுறை சிரித்துக் கொண்டோம். விளிம்புநிலை மனிதர்கள் பாலியல்ரீதியாக ஒடுக்கப்படுவது கொடுமை அதிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வன்புணர்வு செய்யப்படும் கொடுமையை அன்று அப்படித்தான் எடுத்துக் கொண்டது மனது. ஈ படம் சற்று முன்னதாக வந்திருக்கலாம். அந்த பெண்ணின் நிலை அவ்வளவு எளிதில் கடந்து போகக்கூடியது அல்ல என படத்தில் நாயகன் பிறந்த கதையை சொல்லும்போது நினைத்துக் கொண்டேன்.

தெருவில் ஒருவர் வெறும் கண்ணங்கரேலென்று ஒரு லுங்கி மட்டும் கட்டியிருப்பார். தாடியும் மீசையும் நிறைய தலைமயிருமாக சுற்றிக் கொண்டிருப்பார். தெருவில் அவரை எல்லா சிறுவர்களும் பி.காம் என்றழைத்தனர். யாரையாவது வைது கொண்டே இருப்பார். அது நம்மை அல்ல என்றும் நமக்குத் தெரியும். மேலும் அவர் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டியதேயில்லை. அக்காவை பார்த்தால் டீச்சரம்மா காசு கொடு என்பார். வீட்டில் சோறு கொடுத்தால் அதை தெரு முனையில் ஓரமாக வைத்துவிட்டு போய்விடுவார். எப்போதும் கரையான வாயில் பீடி இருக்கும்.

கொஞ்ச வருடங்கள் கழித்து மதுதான் அவர் பெயரை திலக்ராஜ் என்று சொன்னான். அவர் படித்தது பி.காம். இல்லை பி.ஏ என்றான். கொஞ்ச நாளைக்கு எங்களுக்குள் கிண்டலாக திலக்ராஜ் என்றழைத்துக் கொண்டோம்.  அது அவர் உண்மையான பெயரா என்று தெரியவில்லை. அவர் யாரென்று தெரியாமல் சக மனிதன் மீதான அக்கறை இல்லாமல் பதினெட்டு வருடங்கள் அந்த தெருவில் வாழ்ந்திருக்கிறேன். சிலவருடங்கள் கழித்து பெரியவனாக அந்த தெருவை வலம் வந்தபோது திலக்ராஜ் அங்கில்லை.

எப்போதும் அமைதியான அந்த அகலப்பாதையிலேயே எனக்கு பள்ளிக்கூடம் செல்வதில் விருப்பமிருந்தது. வேகமாக தனியே நடைப்போட்டுக் கொண்டிருந்தேன். ரோட்டின் ஓரத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக ஒரு உடல் படுத்துக் கிடந்தது. உடம்பில் பல இடங்களில் சதையை கரண்டி வைத்து எடுத்தது போல் காயம் பெரிதபெரிதாக. எந்த சலனமுமின்றி அவள் என்னை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். நான் இன்னும் வேகமாக நடையை கட்டினேன். அவளை எனக்கு தெரியும். உமா பைத்தியம். பல வருடங்களுக்கு முன் அக்காக்கள் அவளிடம் வம்பளந்து கொண்டிருந்தார்கள். அப்போதும் மனப்பிறழ்வில் இருந்தாள் என்றாலும் நன்றாக பூ, பொட்டுவைத்து நல்ல மாதிரியாகத்தான் இருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இரண்டு நாள் கழித்து சுரேஷும் கார்த்தியும் வந்து உமா பைத்தியம் செத்துப்போச்சு என்றார்கள். எல்லோரும் ச்சூள் கொட்டிவிட்டு அடுத்த நாளை எதிர்கொள்ளப் போய்விட்டோம்.  பின்னொரு நாள் ஆர்குட் வலைதளத்தில் ஒரு நண்பர் உமாபைத்தியத்தை பற்றி அஞ்சலி குறிப்பெழுதினார். எனக்கு அந்த பெண்ணின் வெறித்த கண்களையும் அதை கடந்து போன அந்த நிமிடத்தையும் மன்னிக்க முடியாமல் போனது. பல வருடங்கள் கழித்து முரளி என்னை சவுக்கால் சாடும் விதமாக தன் இளைப்பாறல் தொகுதியில் மாநகரம் என்று ஒரு கவிதை எழுதினார்.  அதில்

மழையையும் தாண்டி
மரணம் துப்பிய எச்சில்
மாநகரத்தின் முகத்தில் வழிகின்றது
அது முன்னிலும் வேகமாய் இயங்குகிறது
அன்பற்றதாக.

என்று முடித்திருந்தார். மாநகர மனிதனுக்கு மட்டுமல்ல நகரத்தில் வாழ்ந்த என்னையும் என் கையாலாகத்தனத்தையும் இந்த கவிதை  ஜென்மம் முழுக்க காறி உமிழ்ந்து கொண்டே இருக்கட்டும்.

No comments:

Post a Comment