Friday, April 6, 2018

வெள்ளச்சி

அன்றைக்கு இரவும் பண்ணிரெண்டு மணியாகிவிட்டது வீடு திரும்ப. தொழில்நுட்ப துறை சார்ந்த பணிகளுக்கு நேரம்காலம் இல்லை. நினைத்தால் வேலை. நினைத்தால் விடுமுறை. நினைத்தால் வேறுவேலை. சம்பளம் மட்டும் ஒரே பணியில் இருக்கும் இருவருக்குள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம். சரி அந்த பிரச்சினையை தொழிற்சங்கங்கள் வளரும் அன்று பேசுவோம். எனவே இரவு பண்ணிரெண்டு மணிக்கு அம்பத்தூர் இரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். பாதை அவ்வபோது இருட்டும் வெளிச்சமுமாக மாறிமாறி வரும். எப்போதாவது சில குறுக்குத் தெருக்களை உபயோகப்படுத்துவேன். அப்படி ஓரு குறுக்கு தெருவில்தான் என்னோடு அந்த பழுப்பு நிற தெருநாயும் பயணம் செய்ய ஆரம்பித்தது.

இது எப்போதாவது நிகழக்கூடியது. ஒரு தெருநாய் ஒரு தெருவைவிட்டு இன்னொரு தெருவிற்கு செல்ல முயற்சிக்கும் போது ஒரு மனிதனின் துணையை நாடும். ஒரு மனிதனின் கூடவே நடக்கும். அப்போதுதான் மற்ற தெருநாய்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியும். அந்த இரவுநேரத்தில் தனியாக நடந்து வந்த எனக்கு ஒரு நாய் என்னுடன் கூட நடந்து வந்தது கொஞ்சம் தைரியமாக இருந்தது. எனக்கு அது துணை அதற்கு நான் துணை. இரண்டு பேரும் ரோட்டின் இரண்டு பக்கவாட்டிலும் ஒப்பந்தம் செய்துகொண்டது போல் நடந்து வந்தோம். ஒரு தடவை ஓரிடத்தில் நின்றேன். அதுவும் நின்றது. மீண்டும் நடையை கட்டினோம். என் தெருமுனை வந்ததும் திரும்பினேன். இவ்வளவு தான் உன்னுடன் வரமுடியும் என்று சொன்னேன். ஆமாம் சொன்னேன். என்னிடமிருந்து பிரிந்து தனியே நடக்க ஆரம்பித்தது.

தெருநாய்களுடன் பேசும் பழக்கம் எனக்கு ஏதோ புதிதாக ஏற்பட்டது அல்ல. வெள்ளச்சியுடன் ஏற்கனேவே பேசியிருக்கிறேன். வெள்ளச்சியை நான் சந்தித்தபோது அது ஒரு வளர்ந்த தெரு நாய். முகேஷ், சுரேஷ், கார்த்தி சகோதரர்கள் எனக்கு நல்ல நண்பர்களான சமயத்தில் தான் எனக்கு வெள்ளச்சியின் அறிமுகம் கிட்டியிருக்கக்கூடும். இப்போதும் கூட என் மனக்கண் முன் சுரேஷ் வளர்ந்த வெள்ளச்சியின் மேல் அமர்ந்து சவாரி செய்ய முயற்சித்தது வந்து போகிறது. அவன்தான் அதற்கு வெள்ளச்சி என்ற பெயரும் வைத்தான்.

ஆனால் வெள்ளச்சி வெள்ளையானவள் அல்ல. வெளிர் பழுப்பும் ஆங்காங்கே வெள்ளைத்திட்டுக்களுமாக இருப்பாள். காதுகளை dog-eared பொசிஷனிலேயே வைத்திருப்பாள். யாருடைய முகத்தையாவது பார்த்தவண்ணமே அமர்ந்திருப்பாள். பார்த்து அப்படி எதை ரசிக்கிறாள் என அவளுக்குத்தான் தெரியும். யாரையும் கடித்ததாகவோ விரட்டியதாகவோ நினைவில் இல்லை. சிலநேரம் இரவு எட்டுமணிக்கு மேல் நான் நண்பர்களை பார்த்துவிட்டு திரும்புகையில் தெருமுனையிலிருந்து வீடு வரை துணைக்கு வருவாள். தெருவில் எப்படியும் யாராவது சோறு போட்டுவிடுவார்கள். சிலநாள் நம் வீட்டிலிருந்து தயிர்சாதம் கிடைக்கும்.

ஓரிடத்தில் எந்த நேரத்தில் உணவு கிடைத்ததோ அந்த நேரத்தை நினைவில் வைத்துக் கொண்டு மறுநாளும் அங்கு வந்து உணவுக்கு காத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பாள். அப்படி சிலசமயங்கள் என் வீட்டில் காத்திருக்கும் போது பேசியிருக்கிறேன். நிறையவெல்லாமில்லை. சும்மா இங்கேயே இரு. இல்லை நாளைக்கு வா. இன்னைக்கும் தயிர் சாதம்தான். இது போலத்தான். ஆனால் புரிந்து கொண்டு காத்திருப்பதையும் கிளம்புவதையும் அவள் முடிவு செய்து கொள்வாள்.

வெள்ளச்சி தெருநாய்தான் என்றாலும் அவள் இளைப்பாறுவதும் உறங்குவதும் கண்ட இடங்களில் அல்ல. அவள் உறங்குவது இளைப்பாறுவது எல்லாம் தெருமுனை பிள்ளையார் கோவில் வாசலில் தான். வேறு எங்கேயும் அவளை நீங்கள் தேடவேண்டியதில்லை. அந்த கோவில் வாசலில் இருக்கும் பெட்டிக்கடையே அவள் வாசஸ்தலம். எனக்கு தெரிந்து அவளது உணவுக்கான ஸ்பான்ஸர் பெரும்பாலும் அந்த பெட்டிக்கடை நடத்தியவர்கள் தான்.

மார்கழி மாதத்தில் மட்டும்(எல்லோரும் ஆர்வமாகிவிடுவீர்களே!) வெள்ளச்சியை சுற்றி ஒரே ஆண் கூட்டமாக இருக்கும். பெரிய கிராக்கி செய்த படியே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பாள். அப்புறம் பேறுகாலத்தில்(அவ்வளவு தான்! மேலே படியுங்கள்) மூன்று நான்கு குட்டிகளை ஈன்றெடுப்பாள். ஒருமுறை கார்த்தி சொன்னான் "அஞ்சு குட்டி போட்டுச்சு. ஒன்னை சாப்ட்ருச்சு". "அய்யோ பாவம் ஏன்டா சாப்ட்டுச்சு?"என்றேன். முகேஷ் "டேய் அதுதான்டா அதுக்கு மருந்து. அப்டி சாப்பிடலேன்னா பிரசவம் பண்ண நாய் செத்துரும்." என்றான். எனக்குத் தான் அவன் சொன்னது புரியவுமில்லை. பிடிக்கவுமில்லை. வெள்ளச்சியின் மீது லேசான கோபம் இருந்தது. மரணம் யாருக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளாத குழந்தை பருவம் இன்னொரு பிறந்த குழந்தை இறந்ததற்காக வருத்தப்பட்டது.

காலப்போக்கில் வளர்ந்து வேலைக்கு போய், காதல் கத்திரிக்காய் எல்லாம் பார்த்து சமூக அந்தஸ்த்துக்காக வாழ ஆரம்பித்து சிரித்து அழுது நடித்து உண்மையாய் இருந்து என்று வாழ்க்கையின் நீண்ட போராட்டத்தில் வெள்ளச்சியை மறந்துதான் விட்டேன் நண்பர் முருகேசன் தெருநாய் குறுக்கிட்டு பைக் விபத்துக்குள்ளாகும் வரை.  என்னை காண வந்த அன்று அவர் கால்களில் மருந்து வைத்து சுற்றியிருந்த வெள்ளை கட்டுக்களை பார்த்தபோது நினைத்துக்கொண்டேன் வெள்ளச்சி ஒருநாளும் யாருக்கும் தெரியாமல்கூட தீங்கிழைத்ததில்லை.

2 comments: