சின்ன வயதில் சாப்ளின் பற்றி கேள்வி பட்டதோடு சரி. இருபது நிமிட கதை எதிலாவது பார்த்திருப்பேன். நான் ஏழாம் வகுப்பில் சேர்ந்த அன்று விவேக் எனும் வகுப்புத் தோழன் பேச்சு வாக்கில் சொன்னான் "சாப்ளின் இறந்த பிறகு அவர் நடித்த படங்களை எல்லாம் சேர்த்து ஒரு படமாக வெளியிட்டிருக்கிறார்கள்". ஒருவேளை ஆவணப்படத்தை தான் அப்படி சொன்னானோ என்னவோ. அவரை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சேகரித்து வைத்திருந்தேன். ஒரு மாறுவேடப் போட்டியில் சாப்ளின் வேஷம் போட்ட சாப்ளினுக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது. ஹிட்லரை எதிர்த்து படம் செய்திருக்கிறார் சாப்ளின். இப்படி சில. நான் சாப்ளினின் முழுப் படங்களை பார்க்க ரொம்ப நாளாயிற்று.
நான் முதன்முதலாக பார்த்த சாப்ளினின் முழு திரைப்படம் மாடர்ன் டைம்ஸ். அதில் அந்த இயந்திரத்தின் உள்ளே பல்சக்கரத்தோடு சுற்றுவார். வெறும் உடலை வளைத்து காட்டி இருப்பார். இன்றைக்கு நீலத்திரை, கிராபிக்ஸ் கண்ணுக்கு புலப்படாத கயிறு இந்த உபகரணங்களோடு நடத்தி காட்டும் சாகசங்களைவிட கடினமான காட்சி அது.
சிட்டி லைட்ஸ் திரைப்படத்தின் கடைசி காட்சி. இவர் நாயகியை அவ்வளவு காதலுடன் பார்ப்பார். அவரோ இவரை ஒரு மனநிலை சரி இல்லாதவராய் பார்ப்பார். நான் அழ ஆரம்பித்து விடுவேன். அப்படியே நொடிப்பொழுதில் நாயகி இவர் கையை தொட்டு இவர்தான் தன் காதலன் என உணரும் நேரம் அது எனக்கு சந்தோஷ கண்ணீராக ஊத்திக் கொண்டிருக்கும்.
Gold rush திரைப்படத்தின் முதல் காட்சி. சாப்ளின் நடக்கிறார். பின்னே ஒரு கரடி நடக்கிறது. இரண்டு பேருமே எதையோ தேடிய படியே ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்யாமல் செல்வார்கள். ஒரு குகை திருப்பத்தில் கரடி அது வழியே சென்று விடும். இவர் தன் பாதையை தொடர்வார். என்ன ஒரு தைரியம்டா என்று தோன்றியது (the circus சிங்கம் காட்சியை விடவும் என்னை கவர்ந்த காட்சி தான்).
மேலே சொன்ன மூன்று காட்சிகளும் பேசும் அவசியம் இன்றி நடிப்பால் மட்டுமே வெளிப்படுத்தி இருப்பார். சினிமா பேச ஆரம்பித்த பிறகும் கூட சினிமாவில் மௌனமே மிக சக்தி வாய்ந்த மொழி என்று ஆணித்தரமாக நம்பியிருக்கிறார். (இன்னமும் அவர் பேசி நடித்த monsieur verdoux பார்க்கவில்லை). அவரைப்போல இன்னொரு நவரச நாயகனை ஆக்க்ஷன் ஹீரோவை சூப்பர் ஸ்டாரை பேசாமலே பொதுவுடமை பேசியவரை ஒருசேரக் காணமுடியவில்லை. ஆனால் தனித்தனியே காண்கிறேன். ஒப்பீடு செய்யும் போதெல்லாம் உங்களை மிஸ் பண்ணுகிறேன் என் பிரியமுள்ள சாப்ளின், ஹேப்பி பர்த்டே.
No comments:
Post a Comment