பெரிய கரப்பானை விட சிறிய மீனே மேல் என்று வேடிக்கையாக சொல்வார் லெனின்
நாங்கள் சின்ன மீன்கள் என்று சிரிப்பார்கள் ஊழியர்கள்.
அளவில் சிறியது பயனில் பெரியது என்று பாராட்டுவார் லெனின்
--லெனினுக்கு மரணமில்லை புத்தகத்திலிருந்து....
எனக்கு தெரிந்த லெனின்:
ஸ்மோல்னி குளிர்கால அரண்மனை நோக்கி கிளர்ந்தெழுந்த நவம்பர் மாத அக்டோபர் புரட்சியின் நூறாவது வருடத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் உலகெங்கும் பரவிய எனதருமை காம்ரேட்களுக்கும் சோவியத்தை நிறுவ தங்கள் இன்னுயிரையும் அயராத உழைப்பையும் அளித்து 73 வருடங்கள் அதை காப்பாற்றிய காம்ரேட்களுக்கும் எனது வணக்கங்களை சமர்ப்பித்து இக்கட்டுரையை துவக்குகிறேன்.
எனக்கு லெனின் எங்கள் பள்ளி புத்தகத்தில் அறிமுகமானார். அவரோடு ஸ்டாலினும் இரும்புத்திரை நாடும் அறிமுகமானது. எங்கள் வரலாற்று ஆசிரியர்களுக்கு லெனினை விட, ஸ்டாலினை விட சர்ச்சிலும், காந்தியை விட சந்திரபோசும் படேலும் பெரிய ஹீரோக்களாக தெரிந்தார்கள். அதனாலேயே லெனினை நான் தெரிந்துகொள்ள மிக அதிக காலம் பிடித்தது. இடைப்பட்ட ஒரு நாளில் ஏதோ ஒரு புத்தகத்தில் ஒரு முறை லெனின் சொன்னதாக, ஓரளவு என் ஞாபக அடுக்குகளில் இருந்ததை பதிவிடுகிறேன். ட்சாரின் அரியாசனம் போல அது. புரட்சிக்கு பிறகாய் இருக்கலாம் அதில் அதிகம் உயரமில்லாத லெனின் உட்கார்ந்தார். அவருடைய தோழர் சொல்கிறார் “உங்கள் கால்கள் தரையில் படக் கூட இல்லை.” லெனின் இப்படி பதிலளித்தார் என நினைக்கிறேன் “ஆம். ஆனால் என் தலை வானத்தை நோக்கி நிமிர்ந்திருக்கிறது.”
அந்த கம்பீரத்தை அவர் ஸ்மோல்னி அரண்மனை நோக்கி நடக்கும் ஓவியத்தில் பார்த்தேன். அவர் 24 அக்டோபர் மாலை எழுதிய கடிதம் அந்த ஓவியத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வரும். அது “இன்றே செயல் பட வேண்டும். தற்காலிக அரசாங்கத்தை கவிழ்க்கவேண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். நாம் உறுதியான நடவடிக்கை எடுக்கா விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது! நாளை நேரம் கடந்து போய்விடும் இன்றுதான் கடைசித் தருணம்.”
நமக்குள் ஹீரோக்களை பற்றிய பொது அபிப்ராயம் உள்ளது. அவர்கள் மிடுக்காகவும், தோரணையாகவும், நேர்த்தியான உடை அணிந்தவர்களாகவும் அண்ணார்ந்து பார்க்கப்பட வேண்டியவர்களாகவும் நாம் பிம்பத்தை வளர்த்துக் கொண்டுவிடுகிறோம். ஆனால் நிஜம் அப்படியல்ல என்பதற்கு லெனின் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அதை அமெரிக்க நிருபர் ரைஸ் வில்லியம்ஸ் வார்த்தைகளில் கூறுவதானால் “நாங்கள் உருவகப்படுத்தி வைத்திருந்ததற்கு அனேகாமாக எதிரிடையாக இருந்தார். வாட்டசாட்டமாகவும் மிடுக்குடனும் தோற்றம் அளிப்பதற்கு பதில் அவர் குட்டையாக கட்டுக்குட்டென்று இருந்தார். அவருடைய தாடியும் தலைமயிரும் முராடாக கலைந்து கிடந்தன”.
வில்லியம்சுடன் வந்த ஒரு நிருபர் கூறி இருக்கிறார் இப்படி “மிகவும் பெரிய வேலைக்கு மிகவும் சிறிய மனிதர்” சுருக்கமாக அவர்கள் யாருக்கும் லெனின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் அவை அனைத்தையும் தகர்த்தெறிந்தார் லெனின். அவரது உரைகளும் விவாதங்களும் புள்ளிவிவரங்களோடு இருந்தன. அவருடைய நிர்வாகம் நிதானமான உறுதியான சோவியத்திற்கு வழி வகுத்தது.
மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கம்யுனிச சித்தாந்தத்தை பரிசோதனைக்கு உட்படுத்தி அதை வெற்றி பெறச் செய்ததினால் வரலாறு மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் என்று பதிவு செய்து கொண்டது என என் மாமா இரகு எனக்கு சொன்னார். சோவியத் மிக உறுதியாக கட்டமைக்கப்பட அவரது அரசியல் உரைகளும், அவர் தன் சொந்த வாழ்விலும், நிர்வாகத்திலும் கடைபிடித்து வந்த கம்யுனிச கொள்கைகளும் உறுதுணையாய் இருந்தது எனச் சொன்னால் அது மிகையில்லை.எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருக்கும் கேக் கிடையாது என்ற கொள்கை அங்கே கடைபிடிக்கப் பட்டதை உதாரணமாக சொல்லலாம். ரேஷன் உணவுகளை மட்டுமே உட்கொண்டதையும் எல்லா தொழிலாளிக்கும் கொடுக்கும் 600 ரூபிள் சம்பளமே தனக்கும் என்று நிர்ணயம் செய்துகொண்டதையும் அவர் எவ்வளவு தூரம் மக்களுக்கு அண்மையில் இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும். (இன்று நாட்டிலேயே இல்லாமல் வெறும் சமூக வலைதளங்களில் மென்பொருட்களின் தயவோடு மக்கள் தொடர்பில் இருப்பதாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களே நமக்கு வாய்த்திருக்கிறார்கள்).
லெனின் சென்ற பாதையில் சோவியத் மக்கள் பின்னே நின்றனர். நிலம் உழுபவனுக்கு, தொழிற்சாலை தொழிலாளிக்கு என லெனின் தெளிவான குறிக்கோளுடன் இருந்தார். அதை மக்களுக்கு புரியும்படியான உரைகளிலும் கடிதங்களிலும் வலியுறுத்தி வந்தார். அவர் அரசு பற்றி நிகழ்த்திய ஒரு உரை பற்றி என்னளவில் புரிந்து கொண்டதை இங்கே பதிவு செய்கிறேன்.
அரசு பற்றி லெனின்:
அரசு என்பது என்ன என்ற தெளிவான உரையுடன் தொடங்கும் லெனின் அரசு ஒரு ஒழுங்குமுறை செய்யப்பட்ட வன்முறை கருவி என்கிறார், ஆதிப் பொதுவுடைமை சமுகத்தில் அரசென்று ஒன்று இல்லை. அரசின் தோற்றம் வர்க்கப்பிரிவினை இவை இரண்டும் ஒன்றாக தோன்றி இருக்கவேண்டும். சிறுபான்மையான ஒரு வர்க்கம் உழைப்பை சுரண்டி மூலதனத்தையும் அதில் கிடைக்கும் லாபங்களையும் அனுபவிக்கிறது. உழைப்பை கொடுப்பதற்கு தேவையான பலத்தை கொடுக்க மட்டுமே உன்ன உணவும் நீரும் உடையும் இருப்பிடத்தையும் இன்னொரு வர்க்கம் பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறது. உழைக்கும் வர்க்கம் அந்த நிலையிலிருந்து தாண்டிச் சென்றுவிடாதபடி கட்டுக்குள் வைத்திருக்க சுரண்டும் வர்க்கம் உபயோகிக்கும் ஒரு இயந்திரம், ஒரு கருவியே அரசு.
தீர்க்க தரிசனம் போன்ற இந்த உரை அடிமை, பண்ணையடிமை சமூகங்கள் தாண்டி பல ஆயிரம் வருடங்கள் கழித்தும் இன்றைய கோர்போரடே உலகத்தோடு மிக அழகாய் பொருந்துகிறது. இங்கே ஜனநாயக முறைப்படி அந்த வன்முறைக் கருவியை யார் கையாளவேண்டும் என்று தேர்வு செய்வது மட்டுமே இன்று எனது உரிமையை இருக்கிறது. அதுவும் நிபந்தனைக்கு உட்பட்டுவிடுகிறது. சில நேரங்களில் இன உரிமை கூட கள்ளத்தனமாய் மறுக்கப்படுகிறது. MNCயில் வாக்களிக்க பலரை விடுமுறை என்றபோதும் அனுமதிக்கவில்லை. அரசும் அதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது.
தோழர் லெனின் சொல்வது போல நாம் அரசை ஒரே நாளிலோ ஒரே வருடத்திலோ கூட அப்படியே புரிந்து கொண்டுவிட முடியாது. மீண்டும் மீண்டும் ஆராய வேண்டிய பொருள் அது. அவர் சொன்னதுபோல அது சாதியோடும் மதத்தோடும் போட்டு குழப்பிக் கொண்டு அனுகக்கூடாது. அரசை புரிந்து கொள்ள நாம் அடிமை பண்ணைஅடிமை சமூகத்தில் எப்படிப்பட்ட அரசுகள் நடத்தப்பட்டன என்றும் ஆதிப் பொதுவுடைமை சமூகத்தில் எப்படி அரசில்லாமல் ஒரு சமூகம் நடந்தது என்றும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பிறகு இன்றைய முதலாளித்துவ ஆதிக்கத்தில் நம்மை ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் குழப்பி பிரித்து ஆளும் கருவியாக அரசு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
அரசை பொறுத்தவரை உழைக்கும் இந்து உழைக்கும் முஸ்லிம் உழைக்கும் கிறிஸ்தவன் யாராக இருந்தாலும் இவர்கள் கிளர்ந்தெழுந்தால் கலகக்காரர்களே. அரசு முதலாளிகளை பாதுகாக்க மட்டுமே. முதலாளியாய் இருக்கும் எந்த மனிதனுக்கும் சேவகம் புரிவதே உழைப்பளியாய் இருக்கும் மனிதனின் கடமை என போதிக்கும் அரசு ஏதோ தெய்வீகம் வாய்ந்த ஒன்றாக மக்களை கருத செய்கிறார்கள் என்பதை தோழர் லெனின் விளக்கி இருக்கிறார்.
அந்த தெய்வத்திற்கு எதிராக கிளர்ந்தெழும்போது இன்றைய சூழல் நம்மை தேசியத்திற்கும் இறையாண்மைக்கும் எதிரானவன் என பட்டம் தரப்படுகிறது. அரசுக்கு எதிராக பேசுவதால் அரசின் கைத்தடிகளால் நாம் ஒடுக்கப்படுகிறோம். போலிஸ் ஜெயில் ராணுவம் என நம்மை ஒடுக்கும் ஆயுதங்களை பட்டியலிடுகிறார் லெனின். முடியரசு குடியரசு இரண்டிலும் இதுவே நிலை. ஆயினும் முடியரசிளிருந்து குடியரசு சற்று வேறுபடுகிறது. நமக்காக நாம் சிந்திக்க நமக்கு ஒரு வெளி கிடைத்திருக்கிறது. அதிகாரவர்க்கம் குண்டாந்தடி எடுப்பதற்கு முன் நம்மை நைச்சியப்படுத்துகிறது. தன சுயரூபத்தை வெளிப்படுத்தும் முன் நம்மை ஏமாற்றும் உத்திகளை முயன்று பார்க்கிறது. ஊடகம் மூலமாக சலுகைகள் மூலமாக, மதரீதியான பிணைப்பின் மூலமாக தன ஆக்டோபஸ் கரங்களை கொண்டு முதலில் தொழிலாளர் வர்க்கத்தின் கண்களை மூடப் பார்க்கிறது. விசுவாசமாய் இருத்தல் , பயந்து இருத்தல் போன்ற உத்திகளை ஆயிரம் ஆண்டுகளாய் போதித்து வந்த அது இப்போது எல்லோரையும் முதலாளிகள் ஆக்குவதாக போலியான ஓர் உத்தியை கையில் எடுத்திருக்கிறது. உதாரணமாக ஒவ்வோர் குடிமகனின் பெயரிலும் கருப்புப்பணம் 15 லட்சம் வைப்பு நிதியில் போடுவதாக பொய் பரப்பிய தற்போதைய ஆட்சியை சொல்லலாம். கருப்பு பணம் இந்நாட்டின் முதலாளிகளுடையது என்பதையும் அந்த முதலாளிகளை காக்கவே இந்த அரசு என்பதையும் இப்போதாவது நம் அருமை குடிமகன்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதுவும் முதலாளிகளிடம் கடனாக கொடுத்த பணமே வராதபோது கருப்பு பணம் மீட்பது எப்படி என்ற சந்தேகம் இந்நேரம் நம் குடிமக்களுக்கு வந்திருக்க வேண்டும்.
இதிலிருந்து கம்யுனிச அரசு எவ்வகையில் மாறுபடும் என்ற கேள்வி எழக்கூடும். ஏன் அவர்கள் ராணுவம் வைத்திருக்க மாட்டார்களா? ஜெயில் சிறைச்சாலைகள் இருக்காதா? என்ற கேள்விகள் கண்டிப்பாய் இருக்கும். லெனின் சொல்வது போல மூலதனத்தின் ஆதிக்கத்தை தூக்கி எறிய வேண்டிய ஒரு வர்க்கத்திடம் இந்த இயந்திரம் ஒப்படைக்கப் பட்டால் அரசு என்பது சமத்துவத்தை ஆதாரமாக கொண்டது எனும் பழைய தப்பெண்ணங்கள் மறுக்கப்படும். அந்த இயந்திரத்தை பாட்டாளி வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் கையில் எடுக்கும். போலி வாக்குறுதிகளை அளிக்காத கம்யுனிச அரசு தெளிவான செயல் திட்டங்களுடன் இருக்கும். தொழிலாளிகளை பாதுகாத்து முதலாளிகளின் தனியுடைமைகளை பொதுவுடைமை ஆக்கும். தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு ஓர் சீரான சமூகமாக இயங்கும் வரையில் உபயோகப்படுத்தப்படும் அரசு எனும் கருவி.
சுரண்டலுக்கு வேண்டிய வாய்ப்பு உலகில் எவ்விடத்திலும் இல்லாமல் போகும்போது நிலா சொந்தக்கரர்களும் ஆளை சொந்தக்கரர்களும் எங்குமே இல்லை எனும்போது, சிலர் வயிறாற சாப்பிட மற்றவர் பட்டினி கிடக்கும் நிலை இல்லாத போது இதற்க்கெல்லாம் வாய்ப்பில்லை என ஆகும்போது சுருக்கமாக என்றைக்கு தனியுடைமை ஒழிந்து இருக்கிறதெல்லாம் பொதுவாய் ஆகிறதோ அன்று கம்யுனிசத்தோடு ஒட்டி இருக்கும் அரசு எனும் இயந்திரம் குப்பையில் எறியப்படும். கம்யுனிசம் சமூகமாக மலரும்.
முடிவாக:
உலகின் வருங்காலம் பற்றி லெனின் தொகுத்து உரைத்ததை சுருக்கி இங்கே பதிவிடுகிறேன்(அதற்கு எனக்கு உரிமையில்லை எனினும் கட்டுரையை முடிக்க அனுமதியும் மன்னிப்பும் கோருகிறேன்)
“ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிசத்தை நோக்கி தனக்கே உரிய வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிருபிப்பதாக தோன்றுகிறது. பற்பல தற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும்.”
இந்தியாவில் கம்யுனிசபூதம் கால் பதித்து 100 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் 9 ஆண்டுகள் இருக்கின்றன. 100 வருடங்களுக்கு முன் ரஷியாவில் சோஷலிசத்தை நிறுவியதை காட்டிலும் இப்போது இங்கே எளிதாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் அங்கே முன்பு காணப்படாத அமைப்பு சட்டங்கள் ஸ்தாபனங்கள், எல்லா வகையான அறிவுத் துணைக்கருவிகள் ஆகியன இன்று நமக்கு கிடைத்திருக்கின்றன. முதலாளித்துவம் corporateஆக உருவெடுத்து இருந்தாலும் மக்களுக்கு இடதுசாரிகள் மீதான நம்பிக்கை இன்னும் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. 1905லிருந்து என வைத்துகொள்வோமே, அதிலிருந்து 12 வருட தயாரிப்புகளும் ஒரு நாளின் கிளர்சிசியும் ஒரு பொதுவுடைமை அரசை நிறுவி 73 வருடங்கள் உறுதியாய் வைத்திருந்திருக்கிறது. நமக்கு 9 வருடங்கள் இருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தை திரட்ட்டவும் அப்படி ஒரு அரசை நிறுவவும் அதை சமூகமாக மாற்றவும்.
அப்படி ஒரு சமூகத்தை நோக்கி நடைபோட என்று ஒரு பெரும்பான்மை தொழிலாளர் வர்க்கம் முனைந்து, இந்தியாவில் சோஷலிச வெற்றியை ருசிக்க ஆரம்பிக்கிறோமோ அன்று ஓர் உடலாக ரஷியாவிலும் உலகின் பல லட்சம் தொழிலாளர்களின் ஆத்மாவாகவும் வாழும் உங்களை சந்திக்க என்னை தயார் படுத்திக்கொள்வேன் தோழர் லெனின்.
No comments:
Post a Comment