நானெல்லாம் புத்தகம் படிக்க உட்கார்ந்தாலே தூக்கம் வரும் என்று என்னிடம் கிண்டலாய் சொல்பவர்கள் உண்டு. அவர்கள் எவ்வளவு என் மனதை கவர்ந்த பெண்களாக இருந்தாலும் சரி இல்லை எவ்வளவு நான் மதித்து போற்றும் நபர்களாக இருந்தாலும் சரி என் பதில் இதுவாகத்தான் இருக்கும் “இப்படி சொல்றதுக்கு நீங்க வருத்தப்பட வேண்டாமா?” என் முக்கால்வாசி நண்பர்கள் புத்தகம் படிப்பது என்னவோ பெரும் சாதனை என்று நினைக்கிறார்கள் இல்லை தரக்குறைவாக அதை ஒரு நேர விரயமாக கருதுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை புத்தகம் என்பது காதலியுடன் நேரத்தை செலவிடுதல் போன்றது. நான் ஆண்பால் என்பதால் காதலி. என் ஆகச்சிறந்த அனுபவங்கள் புத்தகம் எனக்கு தந்தவை. நான் ஒரு புத்தகம் படித்து முடித்த பிறகு நான் எதிர்கொள்ளும் நபரை பார்க்கும்போது என்னுள் பெருமிதம் எகிறிக் குதிக்கும். ஒரு புத்தகத்தின் சாரத்தை அந்த உணர்வை இன்னொருத்தருக்கு தொற்ற வைக்க மனம் முயற்சித்துக் கொண்டே இருக்கும். பகிர்ந்தளிக்கும் குணம் எனக்கு தெரிந்து அன்னத்திலும் வாசிப்பிலும் தான் முடிகிறது. ஒரு வாசகனாக வாழ்தல் அழகு.
அம்மா என்னை நூலகம் அழைத்துப் போய் பழகிய பழக்கம் தான் இன்று புத்தகங்களை தேடி வாங்கி அடுக்கி அதனுடன் காதலாய் பேசும் பைத்தியத்தை எனக்கு பிடிக்க வைத்தது. நான் என் சக நண்பர்கள் பெற்றோர்கள் ஆகும்போது அவர்களுக்கு சொல்வது குழந்தைகளை படிக்கத் தூண்டிக்கொண்டே இருங்கள் என்பதை தான். முதலில் எதைஎதையோ படிக்க ஆரம்பித்து பின் இன்னதெல்லாம் படிக்க வேண்டும் என்று புரிந்து இது தான் என் சமூகம் இதற்கான அரசியல் இதுதான் என தெளிந்து அதற்கான புத்தகங்களோடு மாற்றத்திற்கு தயாராக நிற்பது ஒரு மாபெரும் தவம்.
எனக்கு தவராஜ் என்றொரு நண்பர் இருக்கிறார். அவர் வாசகன் இல்லை தான். ஆனால் என்னை பார்க்க வரும் ஒவ்வொரு சமயமும் தன் மகனுக்கு நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கும்படியும் குழந்தைகள் சினிமாக்கள் அறிமுகப்படுத்த சொல்லியும் கேட்டுகொண்டே இருப்பார். தன் மகனை சான்றோனாக்குதல் என்பதும் அவையத்து முந்தியிருப்பச் செயல் என்பதும் அவனுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்தலே என்பதை புரிந்து வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தந்தையர்களாலும் தாயார்களாலும் குழந்தைகளாலும் இந்த புத்தக சந்தை நிரம்பி வழியட்டும். பொங்கல் மற்றும் புத்தக திருவிழா நல்வாழ்த்துகள் என் எல்லா முகநூல் நண்பர்களுக்கும், இந்த பதிவை படிப்பவர்களுக்கும் மற்றும் முகநூலை வந்து பார்ப்பவர்களுக்கும்.
(சென்னை புத்தக சந்தைக்காக எழுதிய குறிப்பு)
No comments:
Post a Comment