எப்போதும் சீருடையில் இருக்கும் வரேவேற்பாளினி இன்று வண்ண சுடிதாரில் இருந்தாள். என்ன இன்றைக்கு உன் பிறந்த நாளா? என்று கேட்டேன். Women's day என்றாள். ஒரு புன்னகையுடன் happy working women's day என்றேன். Thank you என்ற அவளுடைய பதிலுக்கு உலகத்தையே பரிசாகத் தரலாம்.
அவளை சந்தித்துவிட்டு படி ஏறுகையில் தான் யோசித்தேன் எல்லா பெண்களும் working women தானே. பிறகென்ன happy working women's day? வெறுமே happy women's day என்றே சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லவதானால் அம்மாவுக்கு சொல்லி இருக்க வேண்டும். தோன்றவில்லை. கூடப்பிறந்த சகோதரிக்கு சொல்லி இருக்க வேண்டும். கூச்சமாக இருக்கிறது. உறவுகளில் இருக்கும் பெண்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். தயக்கமாக இருக்கிறது. தோழிகளுக்கு சொல்லி இருக்கலாம். மேலே குறிப்பிட்ட யாருக்கும் சொல்லாமல் அவர்களுக்கு சொல்ல மனம் வரவில்லை. சரி முகநூல் என்று ஒன்று இருக்கிறதே. அதில் சொல்லலாம் என்றால் நம் பதிவை எல்லாம் மதிக்கிற அளவுக்கு நம்ம பதிவு இல்லை. நாம் நண்பனான போதா காரணத்துக்கு நம் நட்பில் நாலு பேர் லைக் போடுவார்கள்.
சரி ஒருவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால் அவர் மகிழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டும். பங்கெடுக்க வேண்டும் என்றால் அணுக்கமாக இருக்க வேண்டும். அணுக்கமாக என்றால் அவர்கள் உலகம் என்ன என புரிந்திருக்க வேண்டும். எனக்கோ அம்மா வைக்கும் சாம்பாருக்கு துவரை போடுகிறாரா அவரை போடுகிறாரா என்று கூடத் தெரியாது. ஒரேஒரு முறை அம்மா சொல்ல சத்துணவு டீச்சராக வேலை பார்த்த அனுபவத்தை கேட்டிருக்கிறேன். அப்பா அம்மாவை வேலைக்கு அனுப்பாமல் இருக்க செய்த சூழ்ச்சி பற்றி அம்மா வருத்தத்துடன் பகிர்ந்த நாள் அது. மற்றபடி எனக்கு தெரிந்ததெல்லாம் women are from venus. இப்படி சொல்ல வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் உண்மையை மெல்லத்தான் வேண்டும்.
இரண்டு மூன்று புத்தகங்கள் படித்திருக்கிறேன். பெண்மை எனும் கற்பிதம், உலக வரலாற்றில் பெண்கள், குரலற்ற பொம்மைகள், பெண் எனும் பகடைக்காய். என்ன படித்தாலும் என்ன? அம்மா சொல்வது போலத்தான் கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளைக்கு? நாமாகத் திருந்த வேண்டும். .
எங்கோ யாரோ சொன்னதாக ஞாபகம் இந்தியாவில் உள்ள அத்தனை பெண்களும் இரண்டாந்தர குடிமக்களாகத் தான் நடத்தப் படுகிறார்கள் என்று. வைரமுத்துவை ஆதாரமிருக்கா என்று கேட்டதுபோல என்னை கேட்க வேண்டாம். என்னிடம் ஆதாரம் இல்லை. வெறும் ஞாபகம் தான். ஒரு வாரத்தில் ஏதாவது ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிறாள் என்று தானாக ஒரு புள்ளிவிவரக் கணக்கு போட்டிருக்கிறது என் மனது. ஆதாரத்திற்கு செய்தி சேனல்களை பார்க்கவும்.
ஏதோ ஒரு வகையில் எனக்கு தெரிந்த ஆண் நண்பர்கள் பெண்களை வசைபாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். தடுத்து கண்டிக்கும் தைரியம் இல்லாமல் இன்னமும் கூட அவர்களுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறேன். பலசமயங்களில் ஆண் எனும் உணர்வு கொடுக்கும் சுதந்திரம் மிகவும் ஆபத்தானதாகவும் வெட்கக்கேடாகவும் இருக்கிறது. இதில் கெட்ட வார்த்தை கலாச்சாரம் வேறு. பல சமயம் பெண்களை கொச்சை படுத்தும் வார்த்தைகள். உபயோகிப்பதை நிறுத்தினாலும் மனதில் பதிந்ததை அழிக்க முடியுமா? அடுத்த தலைமுறைக்குள்ளாவது அவை வழக்கொழிந்து போகவேண்டும்.
இப்போது இதெல்லாம் போதாது என இன்னொரு பிரச்சினை. கீழே வாழ்த்திய அந்த பெயர் தெரியாத வரேவேற்பாளினியை இத்தனை சிந்தனைக்கு பிறகு இனி நேருக்கு நேர் முகம் பார்த்து வெட்கமின்றி பயமின்றி சிரிப்பது எப்படி?
No comments:
Post a Comment