நேற்று தான் பேனா தொலைந்து போனது புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். அதிலே நான் ஊருக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன் அங்கு யாருமில்லை என்று ஒரு கதை. படித்ததிலிருந்து எனக்கு ஊர் ஞாபகம் எல்லாம் இல்லை. ஊரோடு எனக்கு பெரிய உறவெல்லாம் இல்லை. அங்கே இருக்கும் திரையரங்குகளோடு சில ஞாபகங்கள் உண்டு.
சீர்காழியில் நான் இருந்த காலகட்டத்தில் மொத்தம் நான்கு திரையரங்குகள். இருந்தன. சிவகுமார், osm, துர்க்கா, ராஜா தியேட்டர்கள். இதில் சிவகுமார் தியேட்டருக்கு ஸ்டார் என்ற பெயரும் ராஜாவிற்கு ஜூப்பிடர் என்ற பெயரும் பழைய பெயர்கள். எப்போது இந்த பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ராஜா தியேட்டரை மட்டும் நான்கு பேர் முதல்போட்டு வாங்கி அதற்கு பாலாஜி திரையரங்கம் எனப் பெயர் வைத்து ஓட்டினார்கள். அந்த பெயர் மாற்றம் செய்த பிறகுதான் அங்கே புதிய திரைப்படங்களும் தமிழ் திரைப்படங்களும் காட்ட ஆரம்பித்தார்கள். அதுவரை ராஜா தியேட்டரில் "இங்கிலீஷ்" படங்கள் தான். போர்ன் என்ற வார்த்தை எல்லாம் அந்நியப்பட்டிருக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்கிற அடையாள எழுத்து மட்டுமே புரிகின்ற 'A' படங்கள்.
எனது ஏழாவது பரீட்சை ஆண்டு விடுமுறையில் ஒருநாள் மதியம் என் வீட்டற்கு மது வந்து வாசல் காலிங்பெல்லை அழுத்தினான். வாசலுக்கும் வீட்டுக்கும் 100 அடி தூரத்துக்கும் மேல். போய் என்னடா என்றால் சண்டை படம் ஒன்று போட்டிருக்கிறார்கள் ராஜா தியேட்டரில் வா போகலாம் என்றான். தனியாவா? என்றேன். இல்லடா நீ நான் அப்புறம் இதோ விஜயேந்திரன் மூனு பேரும் என்றான். இதுவரை தனியே சென்றதில்லையே என அப்பாவிடம் தயங்கிதயங்கி கேட்டேன். அப்பா ஏதோ யோசனையில் எந்த தியேட்டர் என்று கேட்டுவிட்டு சரிபோயிட்டு வா என்று பத்துரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பினார்.
கூடவே சேட்டு நண்பர்களும் வந்தார்களா என்பது நினைவில் இல்லை. வழியெங்கும் அந்த படத்தின் போஸ்ட்டரை தேடியபடியே சென்றேன். மெயின்ரோடு தாண்டி ஓரிடத்தில் ஒட்டப்பட்டிருந்தது. படத்தின் பெயர் jetli in The Legend. கிட்டத்தில் பார்த்தபோது கீழே U என்று பார்த்து மனது அப்பாடா என்றிருந்தது. அப்பா என்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.
எல்லோரிடமும் பணம் வாங்கி டிக்கெட் கௌண்ட்டரில் டிக்கெட் எடுத்தான் மது. இதில் விஜெயேந்திரனுக்கு மட்டும் நான் மூன்று ரூபாயும் மது நான்கு ரூபாயும் காசு போட்டோம் ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் ஏழு ரூபாய். வீட்டில் சொல்லாமல் நண்பனுக்கு செய்த முதல் செலவு. யோசனை உபயம் குருநாதன் மது.
விளம்பரம் நியூஸ் எல்லாம் போட்டு படம் ஆரம்பித்தபோது மனதில் இனம் புரியாத சந்தோஷம் தனியாக வந்திருக்கிறோம் என்று. படத்தில் பேசியவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பேசினார்கள். ஆனால் படத்தில் எல்லோரும் அக்ரஹாரத்து பையன்களை போல முன் மண்டையை சிரைத்திருந்தார்கள். பெண்களை போல பின்னே ஜடை பின்னியிருத்தார்கள். பெண்களோ கொண்டையிட்டிருந்தார்கள். எல்லோரும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக திரைக்கு அங்குமிங்கும் தாவிக்கொண்டிருந்தார்கள். இன்னார்தான் ஹீரோ என்று கண்டறிவதற்குள்ளாகவே இடைவேளை போட்டுவிட்டார்கள்.
இடைவேளை என்றால் ஆங்கிலப்படத்தின் அந்த ரீலை அப்படியே நிறுத்திவிடுவது. இப்போது போலல்லாம் அப்படியே pause ஆகாது. பட்டென்று கட் ஆகிவிடும். நிறுத்திவிட்டு படத்துக்கு சம்பந்தமில்லாத வேறொரு காட்சி. வெற்று வானமும் கடலும் நிறைந்த திரையில் படகில் ஒரு பெண் தோன்றினாள். தன் கவுனை கழற்றி வெற்றுடலில் அவள் முழு உடலையும் காட்ட நான் கண்ணை பொத்திக்கொண்டேன்.
ஓரக்கண்களால் நண்பர்களை பார்த்தேன். ஏறக்குறைய எல்லாருமே கண்ணை மூடியது மாதிரிதான் இருந்தது. ஆனால் சிரித்துக் கொண்டே இருத்தோம். அப்புறம் அந்த டிரையிலர் முடிந்து இடைவேளை விட்டு தியேட்டர் கதவு திறந்தவுடன் மது செலவில் முறுக்கு வாங்கி சாப்பிட்டு மீதிப்படம் பார்த்து அரைகுரையாக நாங்களே திரைக்கதை சொல்லிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அப்பாவிடம் விஜயேந்திரனுக்கு செலவு செய்ததை தயங்கியபடி சொன்னேன். பரவாயில்லை ஆனால் இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றார்.
அப்பாவிடம் அந்த டிரெயிலர் விஷயத்தை சொல்லலாமா என்று யோசித்தேன். இல்லை வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டேன். பத்தாவது படிக்கையில் வீட்டில் ஏதோ பேச்சுவாக்கில் அது A படம் என்று டைட்டானிக் படம் பற்றி பேசும்போது சொல்லி உதைவாங்கியபோது இரண்டு வருடங்கள் முன்பே நம் புத்திசாலித்தனம் வளர்ந்ததற்கு ஹார்லிக்ஸ்தான் காரணம் என்பதையும் அதை சாப்பிடுவதை நிறுத்தியது எவ்வளவு தவறு என்பதையும் புரிந்து கொண்டேன்.
பிற்பாடு மலீனா திரைப்படத்தில் பார்க்கும் போதும், அப்புறம் பாலக்குமாரனின் நாவலில் வரும் ஒரு விடலைப்பையன் ஆண்மை உணர்வு தாளாமல் அவதிப்படும் போதும் எனக்கு அந்த டிரையிலர் ஞாபகம் வந்தது. இவ்வளவு ஞாபகங்களை சேகரித்தும் கூட என் ஆண்மை விழிப்படைந்தது அந்த டிரைலர் பார்த்த அன்று தானா என்பது மட்டும் நிச்சயமாக தெரியவில்லை. பையன்களுக்கு புரிகிற வயதிலா பூப்பெய்கிறார்கள்? பெண்களுக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியாது. பையன்களிடம் இதை முறையாக பேசுவதற்கு என்ன வெளி இருக்கிறது குடும்ப அமைப்பில் என்று தெரியவில்லை. சரி நடந்து பல வருடங்கள் ஆன விஷயம். இப்போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அந்த வருத்தத்தையும் படத்தின் பெயரையும் பதிவு செய்யத்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். படத்தின் பெயரா..? பதிவின் தலைப்பை இன்னொருமுறை முனுமுனுத்துக் கொள்ளவும்.
Boost ku Maaritan...
ReplyDelete