சின்னவயதில் வரலாறு படிக்கும்போது எனக்கு பகத்சிங் மீது எந்த ஈர்ப்பும் இல்லை. வரலாறு பாடத்தில் இரண்டு சம்பவங்களை குறிப்பிடுவார்கள் பகத்சிங் பற்றி சொல்லும்போது. நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது. இரண்டு தூக்கிலிடப்பட்டது. வேறொன்றும் பெரிதாக எங்கள் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். எங்கள் வரலாற்று ஆசிரியரில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் ரசிகர். இன்னொரு ஆசிரியை அந்த அளவுக்கு வரலாறு பாடம் மேல் ஈர்ப்பு கொண்டவர் இல்லை. எடுப்பதற்கு எளிதான பாடம் என்பதால் அந்த பாடம் எடுக்க ஒப்புகொண்டிருப்பார் என ஊகிக்கிறேன். பகத்சிங் பற்றி அதிகமாக நான் தெரிந்துகொண்டது இரகு மாமாவிடமிருந்து தான். அவர் அடிக்கடி சொல்வது “புரட்சி என்ற சொல்லை உபயோகப்படுத்தும்போதே இரண்டு பெயர்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிடுகின்றன. ஒருவர் சே இன்னொருவர் பகத்சிங்.”
பகத்சிங் பற்றிய நினைவுகள் எனக்கு குறைவாகவே இருக்கிறது. அதற்கு காரணம் எனக்கு ஞாபகசக்தி கொஞ்சம் குறைவு. இரண்டாவது காந்தியை பற்றி வரலாறு பேசும் அளவுக்கு பகத்சிங் பற்றி சொல்லவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை நான் முன்வைக்கிறேன். வரலாற்றுப்பாடத்தில் காந்தியை பற்றி பல இடங்களில் குறிப்பிடுவதை பார்க்க முடியும். அவரை முதல் உலகப்போர், தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் போராட்டம், இரண்டாம் உலகப்போர் என்று எல்லா போர்களுடனும் சுதந்திர போராட்டத்தை பற்றி படிக்கும் எல்லா இடங்களிலும் காந்தி இருப்பார். மேலும் ஆங்கிலம் தமிழ் பாடபுத்தகத்திலும் எதாவது ஒரு இடத்தில் அவரை ஒரு உதாரணமாகவாவது காட்டிவிடுவார்கள். அதில் இருபது சதவிகிதம் கூட பகத்சிங் பற்றி பேசியிருக்க மாட்டார்கள். இன்றைய பாடத்திட்டங்கள் எப்படி இருக்கிறதோ என்ற அச்சம் எனக்கு இன்னமும் அதிகமாகத்தான் இருக்கிறது.
தமிழில் பகத்சிங் பற்றி திரைப்படங்கள் எதுவும் வரவில்லை என நினைக்கிறேன். ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு காட்சியில் பகத்சிங்காக கர்ஜித்ததை தவிர. ஹிந்தியிலும் ஒரே ஒரு திரைப்படம்தான் பார்த்திருக்கிறேன் அது ரங்க் தே பசந்தி. சித்தார்த் எனும் நடிகனை பார்த்து நான் வியந்த திரைப்படம் அதுதான். ஒருவேளை சித்தார்த் அதில் பகத்சிங்காக நடித்தது மட்டுமே காரணாமாக இருக்கலாம். ஆதவன்தீட்சன்யாவின் சொல்லவேமுடியாத கதைகளின் கதை என்ற சிறுகதை தொகுப்பில் ரஞ்சித் என்றொரு சிறுகதை இருக்கிறது. ஒருவேளை பகத்சிங் பழகுவதற்கு அந்த கதையில் சொல்லப்பட்டதுபோல இருப்பார் எனில் அந்த கதையின் ஒவ்வொரு வரியிலும் அழுந்த முத்தமிட்டு பகத்சிங்கை ஆரத்தழுவ எழும் ஆவலை நான் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த முறையாவது பகத்சிங் படம் ஒன்றை வாங்கி வீட்டில் மாட்டிவிட வேண்டும். சிவவர்மா எழுதிய விடுதலை பாதையில் பகத் சிங் புத்தகம் வாங்கி விடவேண்டும். புத்தக அடுக்கில் பகத்சிங் பற்றி இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று பகத்சிங் நூற்றாண்டு விழாவில் பதினோரு வருடங்களுக்கு முன் வாங்கியது. சிறிய புத்தகங்கள் அதில் ஒன்று பகத்சிங் பற்றியது. இன்னொன்று அவர் எழுதிய “நான் நாத்திகன் ஏன்?” எப்போதாவது என்னுள் இந்த ஆன்மீகவாதிகள் ஏற்படுத்தும் குழப்பங்களில் இருந்து மீள நான் படித்துக் கொள்ளும் ஒரு புத்தகம். எனக்கு பகத்சிங் மீது ஒரு பெரிய ஈர்ப்பை உண்டாக்க ஒரு முக்கியமான காரணம் அந்த புத்தகம். காந்தி எழுதிய “The cult of the bomb” அதற்கு பகத்சிங் மற்றும் தோழர்கள் பதில் எழுதிய “The philosophy of the bomb” இரண்டையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு பலநாட்களாக இருக்கிறது.
வேறு எப்போதையும் விட இப்போது பொருள்முதல்வாதிகளும் பொதுவுடைமை கொள்கையின் மீது பிடிப்புள்ளவர்களும் பகத்சிங்கை மக்களுக்கு நினைவுறுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு அவர் போராட்ட வரலாறு அவர் பொதுவுடைமை கொள்கை மீது வைத்திருந்த அபாரமான நம்பிக்கை என நமக்கு ஆயிரம் காரணங்கள் இருப்பதாலும் அதைவிட ஆபத்தான ஒரு காரணம் சேர்ந்திருப்பதாக அஞ்சுகிறேன். அது இந்துத்துவ அரசியல் பகத்சிங்கை உரிமை கொண்டாட முயற்சிக்கிறது. என் பயம் அர்த்தமற்றதாக கூட இருக்கலாம். ஆனால் என் பயத்திற்கான காரணம் பகத்சிங்கிற்கு அவர்கள் கொடுக்கும் உருவம். ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன் பகத்சிங்கிற்கு டர்பன் கட்டி நெற்றித் திலகமிட்டிருந்தார்கள். இன்னொன்று உங்கள் எல்லோருக்கும் தெரிவது தான். ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் அது பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளாக பொய் பிரச்சாரம் செய்வது. இது வெறும் ஆரம்பம் தான். உங்களுக்கு என் அச்சத்தை பற்றி ஐயம் இருந்தால் இ.பா. சிந்தனின் மொழிபெயர்ப்பில் ஒரு புத்தகம் வெளிவரும் அதை படித்து தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதை தாண்டியும் இந்துத்வவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலை உடைப்பு அரசியலை அவர்கள் முன்னெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். திரிபுராவில் லெனின் சிலை உடைப்பு தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு, சாவித்ரி பாய் பூலே சிலை சேதம் என அதன்மூலம் சித்தாந்தங்களின் பங்களிப்பை தனிமனிதர்கள் மனதில் இருந்து அழித்துவிடக் கனவுகளும் காண்கிறார்கள். நாம் பெரியார் அம்பேத்கர் சிலைகளை பாதுகாப்பதோடு பகத்சிங் சிலைகளை நிறுவவேண்டும். ஒருவேளை பகத்சிங்கின் கொள்கைகளை நம் மக்கள் சுவீகரித்துக் கொள்ள அது முக்கிய காரணியாக பங்காற்றலாம். சே வின் புகழை அமெரிக்க அரசாங்கம் எவ்வளவு முயற்சித்தும் குன்றச் செய்ய முடியாததை போல நாம் பகத்சிங் புகழை இந்துத்வம் திருடிக்கொள்ளமுடியதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இரகுமாமாவின் வார்த்தைகளில் சொல்வதானால் “இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பகத்சிங்கும் சேவும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்” என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
இன்குலாப் சிந்தாபாத்.
(ஷாஹீத் ரஞ்சித் பகத்சிங்கின் நினைவு தினத்தை ஒட்டி எழுதப்பட்ட நினைவு குறிப்பு )
(ஷாஹீத் ரஞ்சித் பகத்சிங்கின் நினைவு தினத்தை ஒட்டி எழுதப்பட்ட நினைவு குறிப்பு )
No comments:
Post a Comment