ஏற்கெனவே பாலம் இதழில் மனசு அவர்களின் யானை சிறுகதை வந்துவிட்டதாலும், லக்ஷ்மி சரவணக்குமாரின் யானை என்ற சிறுகதை தொகுப்பு இருப்பதாலும் இந்த பதிவின் தலைப்பை இப்படி வைக்க வேண்டியதாயிற்று. மேலே சொன்னதில் மனசு அவர்களின் யானை கதையை படித்திருக்கிறேன். அது ஒரு வியட்நாம் தேசத்துக் கதை.
நான் சொல்ல வந்தது நான் பார்த்த யானையை பற்றி. கோயில் யானை. ஒவ்வொரு முறை புதுவைக்கு செல்லும் போதும் மறவாமல் மணக்குளவிநாயகர் கோயிலுக்கு செல்வேன். அங்கிருக்கும் யானை குள்ளமாக இருக்கும். நான்கு கால்களிலும் வெள்ளியில் கொலுசு போட்டிருக்கும். ஆண் யானையா இல்லையா என்பதை படம் பார்த்து முடிவு செய்து கொள்ளவும். கால் ஒன்றில் இரும்பு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அதன் கீழ் அமர்ந்திருக்கும் பாகன் தன் கையில் வைத்திருக்கும் அங்குசத்தை வைத்து தட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலும் கருநீலச்சட்டை போட்டே அவரை பார்த்த ஞாபகம். அந்த யானையையும் அதன் பாகனையும் நினைக்கும் போதெல்லாம் என்னை கவராத ஜெயமோகனின் எழுத்துக்களில் என்னைக் கவர்ந்த வரிகள் கூடவே வரும் அது "கொலைவேழத்தின் பெருங்கருணையை அறிந்தவன் ஒருவன் மட்டுமே. அதன் கீழ் வாழும் எளிய பாகன் தான்"
ஆனால் எங்கள் ஊரில் இருந்த பெரியகோயில் யானையின் பாகன் சட்டை அணிந்து பார்த்ததில்லை. யானை மேய்ப்பவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அதேபோல அந்த யானையின் கீழ் பாகன் உறங்கியும் பார்த்ததில்லை. ஒரேயொருமுறை மட்டும் சாயுங்காலத்தில் அந்த பாகன் ரொம்ப வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவர் கூட வரும் பையன் யானையை மிரட்டி கூப்பிட்டுக் கொண்டிருந்தான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதே மது காதில் வந்து கிசுகிசுப்பாய் "அந்தாள் தண்ணியடிச்சிருக்கான்" என்றான்.
அந்த பெண்யானை வாரம் ஒருமுறை குளிப்பதற்கு எங்கள் தெருவில் புகுந்து தான் திருக்கோலக்கா கோவில் குளத்திற்கு செல்லும். இல்லை வாய்க்காலுக்கு போகுமாயிருக்கும். ஒருமுறை வாய்க்காலில் குளித்ததை பார்த்திருக்கிறேன். குளித்துவிட்டு திரும்ப எங்கள் தெருவழியாகவே பட்டை எல்லாம் அடித்துக் கொண்டு ஜம்மென்று போகும். கடைவீதி வழியாக பலரை ஆசிர்வதித்து வாழைப்பழம் தேங்காய் காசுகள் என கல்லா கட்டிக்கொண்டு போகும்.
பெரியகோயில் யானை இறந்து போனதை அப்பாதான் வந்து சொன்னார். அன்று தான் அதன் பெயர் ஜெயந்தி என்றே தெரியும் எனக்கு. அதன் இறப்பு செய்தியை செய்தித்தாளிலும் போட்டார்கள். அன்று மாலை நானும் மதுவும் கிளம்பினோம். நடந்து தான் போனோம். கோயில் உள்ளே அதன் கொட்டடிக்கு சென்றோம். எத்தனையோ இரவுகள் அந்த கொட்டடியின் இருட்டை பார்த்து பயந்திருக்கிறேன். தனியே பிராகாரத்தை சுற்றும்போது சிலசமயம் யானை செய்யும் சலசலப்புக்கு அஞ்சி பயந்து ஓடியிருக்கிறேன். இன்று அந்த கொட்டடிக்கு வெளியிலிருந்து நல்ல நூறுவாட்ஸ் வெளிச்சத்திற்கு நடுவே யானை கிடத்தப்பட்டிருப்பதை பார்த்தேன். நான் பார்த்த யானை அல்ல அது. உடல் வற்றி தலை சிறிதாகி ஏதோ ஒரு பொருளாகக் கிடந்தது. மது "நீ வருத்தப்பட ஆரம்பிச்சா உன்னை சமாதான படுத்த முடியாது" என என்னை உள்ளே செல்லவிடாமல் தடுத்து விட்டான். பிறகு வெளியேவந்து "பாவம்டா அந்த யானை. ஆனா அந்த பாகன் பாரு இனிமே என் பொழப்புக்கு என்ன செய்வேன் ஏதாவது காசு போட்டு போங்கன்ட்றான்" என்றான் கோபமாக. ஒரு கட்டம்வரைதான் இறந்தவர்களுக்காக அழமுடியும் என்றோ பாகன் வறுமையையோ நாங்கள் புரிந்திருக்க வாய்ப்புமில்லை வயதுமில்லை. மறுநாள் அப்பா அதன் ஈமச்சடங்கிற்கு சென்று வந்தார். எரியூட்டினார்கள் என்று நினைவு.
நான் இதுகுறித்து எழுதியதை பற்றி சரவணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன் இளமைக்காலத்திய நினைவுகளையும் தான் படித்த யானை கதைகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார். குறிப்பாக யானை சவாரி செய்ததை சொன்னார். நான் என் வாழ்வில் யானை சவாரி செய்ததே இல்லை. யானை அருகே சென்று ஒரிருமுறை ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதுவும் வைத்தீஸ்வரன் கோயில் யானையிடம் மட்டும். யானை கதைகளை நிரம்ப படித்திருந்தாலும் யானையை பற்றிய தகவல்கள் அதிகமாக தெரிந்திருந்தாலும் ஒருமுறை யானை பற்றி மாமா சொன்னதை இங்கே சொல்லி முடிப்பது சரியாக இருக்கும். "யானை பாத்திருக்கியா? அதுக்கு மதம் பிடிச்சா காடே தாங்காது. தொம்சம் பண்ணிரும். சிங்கம்புலி எல்லாம் காணாப்போயிரும். ஆனா அவ்ளோ பெரிய யானையை மனுசன் தான் வயித்துக்காக கடைக்கடையா பிச்சை எடுக்கவுட்ருவான். நம்ம எல்லாருமே ஒருவகையில அந்த யானை தான்".

No comments:
Post a Comment