முதன்முதலில் நான் அவரை பார்த்தது என் இருபத்தி இரண்டு வயதில். முரளி ஒரு கூகிள் படத்தில் அவரை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அடுத்தவர் கணினியை எட்டிப் பார்க்கும கெட்டப் பழக்கம் நிறையவே இருந்தது. இரண்டு மூன்று முறை கிண்டல் செய்தும் பிரயோஜனம் இல்லை. நான் திருந்தவில்லை. முரளியிடம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று பரவசமாக சொன்னேன். அதற்கு முரளி "சே"வை முதலில் பார்க்கும் எல்லோருக்கும் தோன்றும் உணர்வு அதுதான் என்றார். நட்சத்திரம் பொறித்த தொப்பியில் ஒரு தீர்க்கமான பார்வையோடு இருந்த அந்த ஸ்கெட்ச் படம் என் மனதில் வந்துவந்து போனது.
ஆர்க்குட்டுக்கும் முகநூலுக்கும் இடையில் வலைப்பூ காலம் ஒன்றிருந்தது நம் மார்கழியை போல. நிறைய எழுத்துக்களை வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டது அப்போது தான். அப்படி பாமரனின் வலைப்பூவை தொடர்ந்து வாசிக்கும் போது "சே"வை பற்றிய சின்ன அறிமுக வரலாறு இருந்தது. அதில் எனக்கு ஞாபகம் இருக்கும் பல வரிகளில் ஒன்று "ஹில்டாவை மறுமணம் செய்து கொள்ளச்சொல். உன் கை நடுங்குகிறது. நெற்றிக்கு குறி பார்." சத்தியமாக அந்த தைரியம் எனக்கு வரவே வராது. சமீபத்தில் கூட ஆஸ்பத்திரியில் மூச்சுத் தினறத்தினற மரணம் தழுவிவிடுமோ என்ற பயம் தான் இருந்தது எனக்கு. ஒரு மனிதன் துப்பாக்கிக்கு சவால் விட்டிருக்கிறான். அதுவும் எந்த நாட்டு மக்களுக்காகவோ. அவனை நான் படித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அந்த சிங்கப்பூர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் நான் வாங்கிய ஒரே தமிழ் புத்தகம் "சே - வேண்டும் விடுதலை" மருதன் எழுதியது. க்யூப வரலாறும் "சே"வின் வாழ்வை பற்றியும் அதிரடி கதை போல தெரிந்து கொண்டேன். என் லினக்ஸ் கணினிக்கு கிரான்மா என பெயர் வைத்தேன். மோட்டார் சைக்கிள் டெய்ரீஸ் படத்தை பார்த்தேன். எர்னஸ்டோ, காதல், பயணம், கம்யூனிஸ்ட், துப்பாக்கி விபத்து, பிடலுடனான தர்க்கம், ஆஸ்த்துமா, தொழுநோயாளிகளுக்கான மருத்துவச்சேவை, அந்த டாக்டர் நண்பர், ஹில்டா, சின்சினா, அலெய்டா என ஒவ்வொரு துளியாக "சே"வை நினைவில் சேகரித்தேன். அவர் பிடலுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து வார்த்தைகளை உருவி போட்டு பல கடிதமும் கட்டுரையும் ஊக்கம் தரும் பேச்சுக்களையும் செய்திருக்கிறேன். நீங்கள் முறைக்கிறீர்கள் ஆனால் நம் "சே" அதற்க்காகவெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டார்.
"சே" இந்த காலத்திற்கு மட்டும் அல்ல எதிர்காலத்திற்கும் தேவையான அமரன். இந்த உலகில் உள்ள அத்தனை மத மகான்களும் மேற்க்கொண்ட பயணத்திலிருந்து "சே"வின் பயணம் வித்தியாசமானது. எல்லோரும் கடவுளை தேடி புறப்பட்டனர். புத்தன் கூட துன்பத்தின் காரணமறிய பயணத்தை துவக்கினான். தன் மருத்துவமும் நோயுற்ற வாழ்வும் தன் கண்முன்னே பயமுறுத்திக்கொண்டிருக்க, எங்கேயோ அழுது கொண்டிருக்கும் மனிதத்தின் விழிநீர் துடைக்க புறப்பட்டவர் "சே". ஒரு சின்ன அமௌன்ட் வாழ்வில் தொடர்ந்து கிடைத்தால் போதும் கவலையின்றி வாழலாம் என சுயநலமாக யோசிக்கிறேன் அவருக்கு ஐம்பது வருடங்கள் கழித்துப் பிறந்த நான். ஒரு நாட்டின் உயர் பதவியை விட இன்னொரு நாட்டின் விடுதலைக்கு துணை நிற்பதே தன் கடமை என வாழ்ந்து முடித்திருக்கிறார் அவர். க்யூபாவை விட்டு வெளியேறியதை பற்றி மாமாவுடன் விவாதித்தபோது மாமா சொன்னார் புரட்சியை அப்படி எல்லாம் ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால் மானுடவிடுதலையின் மீதான தீவிரமே அவரை அப்படி செய்ய தூண்டி இருக்கிறது என்றார்.
"சே"வை பற்றி கணக்கிலடங்காமல் எழுதவும் பேசவும் பரவசப்படவும் முடியும் என்னால். ஆனால் "சே"வை போல என் சொற்களுக்கு சக்தி அதிகம் இல்லை. ஆகவே நிறைவு செய்யும் கட்டாயத்தோடு மேலும் ஒரு வரி. சென்ற வருட நீயா நானா நிகழ்வில் விருந்தினராக பங்கெடுத்த கரு.பழநியப்பன் "மனிதன் உலகத்தின் குடிமகன் ஆவதுதான் முக்கியம்" என்றார். என் மனதில் தோன்றியது, மானுட விடுதலையின் மீது தீராக்காதல் கொண்ட ஒரு மனிதனே அவ்வாறாக முடியும் என்றெண்ணினேன். மனதில் இலட்சித்தி எத்தனையாவது முறையோ "சே" வந்து போனார். ஆம் சே நீங்கள் தான் citizen of the world.
No comments:
Post a Comment