Sunday, April 22, 2018

My Hero சாப்ளின்

சின்ன வயதில் சாப்ளின் பற்றி கேள்வி பட்டதோடு சரி. இருபது நிமிட கதை எதிலாவது பார்த்திருப்பேன். நான் ஏழாம் வகுப்பில் சேர்ந்த அன்று விவேக் எனும் வகுப்புத் தோழன் பேச்சு வாக்கில் சொன்னான் "சாப்ளின் இறந்த பிறகு அவர் நடித்த படங்களை எல்லாம் சேர்த்து ஒரு படமாக வெளியிட்டிருக்கிறார்கள்". ஒருவேளை ஆவணப்படத்தை தான் அப்படி சொன்னானோ என்னவோ. அவரை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சேகரித்து வைத்திருந்தேன். ஒரு மாறுவேடப் போட்டியில் சாப்ளின் வேஷம் போட்ட சாப்ளினுக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது. ஹிட்லரை எதிர்த்து படம் செய்திருக்கிறார் சாப்ளின். இப்படி சில. நான் சாப்ளினின் முழுப் படங்களை பார்க்க ரொம்ப நாளாயிற்று.
  


நான் முதன்முதலாக பார்த்த சாப்ளினின் முழு திரைப்படம் மாடர்ன் டைம்ஸ். அதில் அந்த இயந்திரத்தின் உள்ளே பல்சக்கரத்தோடு சுற்றுவார். வெறும் உடலை வளைத்து காட்டி இருப்பார். இன்றைக்கு நீலத்திரை,  கிராபிக்ஸ் கண்ணுக்கு புலப்படாத கயிறு இந்த உபகரணங்களோடு நடத்தி காட்டும் சாகசங்களைவிட கடினமான காட்சி அது. 

சிட்டி லைட்ஸ் திரைப்படத்தின் கடைசி காட்சி. இவர் நாயகியை அவ்வளவு காதலுடன் பார்ப்பார். அவரோ இவரை ஒரு மனநிலை சரி இல்லாதவராய் பார்ப்பார். நான் அழ ஆரம்பித்து விடுவேன். அப்படியே நொடிப்பொழுதில் நாயகி இவர் கையை தொட்டு இவர்தான் தன் காதலன் என உணரும் நேரம் அது எனக்கு சந்தோஷ கண்ணீராக ஊத்திக் கொண்டிருக்கும்.

Gold rush திரைப்படத்தின் முதல் காட்சி. சாப்ளின் நடக்கிறார். பின்னே ஒரு கரடி நடக்கிறது. இரண்டு பேருமே எதையோ தேடிய படியே ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்யாமல் செல்வார்கள். ஒரு குகை திருப்பத்தில் கரடி அது வழியே சென்று விடும். இவர் தன் பாதையை தொடர்வார். என்ன ஒரு தைரியம்டா என்று தோன்றியது (the circus சிங்கம் காட்சியை விடவும் என்னை கவர்ந்த காட்சி தான்).

‌மேலே சொன்ன மூன்று காட்சிகளும் பேசும் அவசியம் இன்றி நடிப்பால் மட்டுமே வெளிப்படுத்தி இருப்பார். சினிமா பேச ஆரம்பித்த பிறகும் கூட சினிமாவில் மௌனமே மிக சக்தி வாய்ந்த மொழி என்று ஆணித்தரமாக நம்பியிருக்கிறார். (இன்னமும் அவர் பேசி நடித்த monsieur verdoux பார்க்கவில்லை).  அவரைப்போல இன்னொரு நவரச நாயகனை ஆக்க்ஷன் ஹீரோவை சூப்பர் ஸ்டாரை   பேசாமலே பொதுவுடமை பேசியவரை ஒருசேரக் காணமுடியவில்லை. ஆனால் தனித்தனியே காண்கிறேன். ஒப்பீடு செய்யும் போதெல்லாம் உங்களை மிஸ் பண்ணுகிறேன் என் பிரியமுள்ள சாப்ளின், ஹேப்பி பர்த்டே.

Sunday, April 8, 2018

சிவப்பு தொப்பியணிந்த சிவப்பு பையன்


சரியாக வாய்க்காங்கரைத் தெருவுக்கு இணையாக செல்லும் சீர்காழி மெயின் ரோடு. அங்கே ச.மு.இ. உயர்நிலைப் பள்ளிக்கு பக்கத்தில் இருப்பான் அவன். சிகப்பாய் தொப்பி அணிந்துகொண்டு ஒரு இந்திய சராசரி பெண்ணின் உயரத்துக்கு ஓரடி கம்மியாக இருப்பான் அவன். கருப்பு வாயை எப்போதும் திறந்த படியே வைத்திருப்பான். அந்த வாயில்தான் நான் என் பெரியம்மாவிற்கு எழுதிய முதல் கடுதாசியை போட்டேன். பூட்டு போட்ட பெரிய வயிற்றில் அதை பத்திரமாய் வைத்துக்கொண்டான்.



ஊரில் ஒருசமயம் பலபேருக்கு போஸ்ட் ஆபீஸ் போவது ஒரு வேலையாக இருக்கும். அந்த போஸ்ட்ஆபீஸுக்கு சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்தும் வருவார்கள். எனக்கு தெரிந்து வங்கிக்கு இணையாக அங்கே கூட்டமிருக்கும். எதையாவது எழுதிய வண்ணம் இருப்பார்கள். Inland லெட்டர் இதை இங்க்லேண்டு லெட்டர் என்றே உச்சரித்துக் கொண்டிருந்தேன், புலிப்படம் போட்ட போஸ்ட்கார்ட் என்று எதிலாவது தங்கள் தகவல்களை பொறித்துக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இங்க்பேனா உபயோகிப்பார்கள். ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் எழுதினாலும் ஒரு மாதிரியான கூட்டெழுத்தை உபயோகிப்பார்கள். தமிழில் எழுதினால் நலம் நலமறிய ஆவல் என்கிற வரிகள் நிச்சயம் இருக்கும். ஆங்கிலத்தில் regarding என்கிற சொல்லைப் போல இப்பவும் என்கிற சொல்லை தமிழில் உபயோகிப்பார்கள்.

நான் மேலே சொன்ன எதையுமே பின்பற்றியதில்லை கடிதம் எழுதும்போது நலம் நலமறிய ஆவல் வரிகளைத் தவிர. இரண்டாம் வகுப்பிற்கு செல்லும்போது என்னமோ சென்னையிலிருக்கும் பெரியம்மாவிற்கு கடிதம் எழுதவேண்டும் என்ற பேராவல் பிறந்தது எனக்கு. இருபத்தைந்து பைசாவிற்கு ஒரு போஸ்ட்கார்ட் வாங்கி அதில் அடித்தல் திருத்தலோடு எழுதி இப்படிக்கு பாலாji என்று முடிக்கும் இடத்தில் மூன்று அடித்தல் திருத்தல் வேறு. அவ்வபோது அப்பா அம்மா கொடுக்கும் கடிதங்கள் பெரும்பாலும் மாமாவுக்கும் தாத்தாவுக்கும் எழுதுவதை நான்தான் சிவப்பு பையனிடம் சேர்ப்பேன். புது போஸ்ட்கார்டும் வாங்கி வருவேன்.

அப்படி வாங்கிய அன்று ஒருநாள் ஐம்பது வயது மதிக்கத்தக்க அவர் என்னிடம் தம்பி ஒரு லெட்டர் எழுதித் தர்றியா என்றார். நான் என் கையெழுத்து நல்லா இருக்காதே என்றேன். பரவாயில்லை எழுது என்றார். எழுத தயாரானேன். "மரியாதைக்குரிய மாப்பிள்ளை அவர்களுக்கு, என் பெண்ணை வீட்டைவிட்டு விரட்டியது நியாயமா? இந்த பாவம் உங்களை சும்மா விடுமா? என் பெண்ணின் கதி என்ன?" என்று நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனக்கு பழகாத சொற்களை கோர்த்துக்கொண்டே போனார். நானும் பல அடித்தல் திருத்தல்களோடு எழுதி அவர் சொன்ன முகவரிக்கு 50பைசா ஸ்டாம்ப் ஒட்டி அந்த தபால்பையனின் வாயில் வைத்துவிட்டு வந்தேன். பின்னாளில் அக்காவின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனஸ்தாபங்களின் போது அப்பா பட்ட துயரங்கள் அந்த போஸ்ட்கார்ட் எழுதச் சொன்ன மனிதரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது.

மூன்றாம் வகுப்பில் இருந்தே தமிழிலும் ஆங்கிலத்திலும் கடிதம் வரையக் கற்றுக்கொடுத்துவிடுவார்கள்.  கடிதம் எழுதுதல் என்ற வார்த்தையைவிட கடிதம் வரைதல் என்ற வார்த்தையே எப்போதும் பிடித்தமானது. வார்த்தைகளை கொண்டு வரையத்தான் செய்கிறோம். வரைந்த கடிதங்கள் செய்யும் அற்புதங்கள் கொஞ்சமில்லை. நிறையவே. ஜென்னியும் மார்க்ஸும் வரைந்து கொண்ட காதல் கடிதங்களும் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்களும் வரலாற்றில் கடிதங்கள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு சாட்சியங்கள்.  கி.ராவுக்கும் கு.அழகிரிசாமிக்கும் இடையிலான கடிதங்கள் சுவைக்க சுவைக்க தெவிட்டாதவை. இதை எல்லாம் படிக்க நேரமில்லை என்பவர்கள் குறைந்தபட்சம் கடித இலக்கியத்தின் துணைக்கொண்டு உருவாக்கப்பட்ட காவியம் காதல்கோட்டை படமாவது பாருங்கள். ஒரு பக்கம் அஜித் ஒரு பக்கம் தேவயானி நடுவே இங்கிலேண்டு லெட்டர் கொண்ட அந்த படத்தின் போஸ்ட்டரை  மறக்கவே முடியாது என்னால்.

ஒருவருக்கு இன்னொருவர் கடிதம் எழுதி அனுப்புகிறார் என்பதே பெருமைக்குரிய செயலாக இருந்தது. அதனாலேயே புதுவருடத்திற்கும் பொங்கலுக்கும் வாழ்த்து அட்டைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். எனக்கு சில நண்பர்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்றாலும் நினைவில் இருப்பது D.கார்த்தி அனுப்பிய வாழ்த்து அட்டை தான். அதில் வெற்றி என்பது அலைகளை எதிர்த்து மிதவைப்பலகையில் பயணம் செய்வதை போல (surfing! surfing!) என்று எழுதியிருந்தது ஆங்கிலத்தில். பலவருடங்கள் அந்த அட்டையை பத்திரமாக வைத்திருந்தேன்.  சிலவருடங்களுக்கு பிறகு வாழ்த்து அட்டைகளை வாங்கிக் கொள்ள பச்சைதொப்பியனிந்த குட்டிப்பச்சை பையனை வைத்தார்கள். அவன் சிவப்பு பையனுக்கு உதவியாக பண்டிகை காலங்களில் மட்டும் இருப்பான்.

இன்றைக்கு மூன்று வரிகளுக்கு மேல் மின்னஞ்சல் செய்வது இல்லை. ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும் மூன்றுவரிக்கு மிகாமல் எழுதப்படும் என் கடிதங்கள் நொடியில் பயணம் செய்து கொண்டிருக்கிறது  மின்னனுத் துகள்களாக. வாழ்த்து அட்டைகளுக்கென்றே இணையதளத்தில் முகநூலும் இன்னபிற சமூகவலைத்தளங்களும் வேலை செய்கின்றன. தபால் பையனின் தேவைகள் குறைந்துவிட்டது. அவனுக்கு இனி யார் சோகத்தையும் மகிழ்ச்சியையும் நலத்தையும் சுகவீனத்தையும் பற்றி தன்னுள் பூட்டிவைத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவன் வயிறு தற்போது பட்டினியாகத்தான் கிடக்கும். அவன் வாய் பெரும்பாலும் காற்றைத்தான் உறிஞ்சிக் கொண்டிருக்கும். ஆனால் அடுத்தவர் சோகத்தையும் துக்கத்தையும் தன் வயிற்றில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதில் அவன் மனம் சற்று பாரமில்லாமல் இருக்கும் . ஒருவேளை அவன் இறுதி நாட்களுக்கு அது ஆறுதலாய் இருக்கக்கூடும்.

Friday, April 6, 2018

வெள்ளச்சி

அன்றைக்கு இரவும் பண்ணிரெண்டு மணியாகிவிட்டது வீடு திரும்ப. தொழில்நுட்ப துறை சார்ந்த பணிகளுக்கு நேரம்காலம் இல்லை. நினைத்தால் வேலை. நினைத்தால் விடுமுறை. நினைத்தால் வேறுவேலை. சம்பளம் மட்டும் ஒரே பணியில் இருக்கும் இருவருக்குள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம். சரி அந்த பிரச்சினையை தொழிற்சங்கங்கள் வளரும் அன்று பேசுவோம். எனவே இரவு பண்ணிரெண்டு மணிக்கு அம்பத்தூர் இரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். பாதை அவ்வபோது இருட்டும் வெளிச்சமுமாக மாறிமாறி வரும். எப்போதாவது சில குறுக்குத் தெருக்களை உபயோகப்படுத்துவேன். அப்படி ஓரு குறுக்கு தெருவில்தான் என்னோடு அந்த பழுப்பு நிற தெருநாயும் பயணம் செய்ய ஆரம்பித்தது.

இது எப்போதாவது நிகழக்கூடியது. ஒரு தெருநாய் ஒரு தெருவைவிட்டு இன்னொரு தெருவிற்கு செல்ல முயற்சிக்கும் போது ஒரு மனிதனின் துணையை நாடும். ஒரு மனிதனின் கூடவே நடக்கும். அப்போதுதான் மற்ற தெருநாய்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியும். அந்த இரவுநேரத்தில் தனியாக நடந்து வந்த எனக்கு ஒரு நாய் என்னுடன் கூட நடந்து வந்தது கொஞ்சம் தைரியமாக இருந்தது. எனக்கு அது துணை அதற்கு நான் துணை. இரண்டு பேரும் ரோட்டின் இரண்டு பக்கவாட்டிலும் ஒப்பந்தம் செய்துகொண்டது போல் நடந்து வந்தோம். ஒரு தடவை ஓரிடத்தில் நின்றேன். அதுவும் நின்றது. மீண்டும் நடையை கட்டினோம். என் தெருமுனை வந்ததும் திரும்பினேன். இவ்வளவு தான் உன்னுடன் வரமுடியும் என்று சொன்னேன். ஆமாம் சொன்னேன். என்னிடமிருந்து பிரிந்து தனியே நடக்க ஆரம்பித்தது.

தெருநாய்களுடன் பேசும் பழக்கம் எனக்கு ஏதோ புதிதாக ஏற்பட்டது அல்ல. வெள்ளச்சியுடன் ஏற்கனேவே பேசியிருக்கிறேன். வெள்ளச்சியை நான் சந்தித்தபோது அது ஒரு வளர்ந்த தெரு நாய். முகேஷ், சுரேஷ், கார்த்தி சகோதரர்கள் எனக்கு நல்ல நண்பர்களான சமயத்தில் தான் எனக்கு வெள்ளச்சியின் அறிமுகம் கிட்டியிருக்கக்கூடும். இப்போதும் கூட என் மனக்கண் முன் சுரேஷ் வளர்ந்த வெள்ளச்சியின் மேல் அமர்ந்து சவாரி செய்ய முயற்சித்தது வந்து போகிறது. அவன்தான் அதற்கு வெள்ளச்சி என்ற பெயரும் வைத்தான்.

ஆனால் வெள்ளச்சி வெள்ளையானவள் அல்ல. வெளிர் பழுப்பும் ஆங்காங்கே வெள்ளைத்திட்டுக்களுமாக இருப்பாள். காதுகளை dog-eared பொசிஷனிலேயே வைத்திருப்பாள். யாருடைய முகத்தையாவது பார்த்தவண்ணமே அமர்ந்திருப்பாள். பார்த்து அப்படி எதை ரசிக்கிறாள் என அவளுக்குத்தான் தெரியும். யாரையும் கடித்ததாகவோ விரட்டியதாகவோ நினைவில் இல்லை. சிலநேரம் இரவு எட்டுமணிக்கு மேல் நான் நண்பர்களை பார்த்துவிட்டு திரும்புகையில் தெருமுனையிலிருந்து வீடு வரை துணைக்கு வருவாள். தெருவில் எப்படியும் யாராவது சோறு போட்டுவிடுவார்கள். சிலநாள் நம் வீட்டிலிருந்து தயிர்சாதம் கிடைக்கும்.

ஓரிடத்தில் எந்த நேரத்தில் உணவு கிடைத்ததோ அந்த நேரத்தை நினைவில் வைத்துக் கொண்டு மறுநாளும் அங்கு வந்து உணவுக்கு காத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பாள். அப்படி சிலசமயங்கள் என் வீட்டில் காத்திருக்கும் போது பேசியிருக்கிறேன். நிறையவெல்லாமில்லை. சும்மா இங்கேயே இரு. இல்லை நாளைக்கு வா. இன்னைக்கும் தயிர் சாதம்தான். இது போலத்தான். ஆனால் புரிந்து கொண்டு காத்திருப்பதையும் கிளம்புவதையும் அவள் முடிவு செய்து கொள்வாள்.

வெள்ளச்சி தெருநாய்தான் என்றாலும் அவள் இளைப்பாறுவதும் உறங்குவதும் கண்ட இடங்களில் அல்ல. அவள் உறங்குவது இளைப்பாறுவது எல்லாம் தெருமுனை பிள்ளையார் கோவில் வாசலில் தான். வேறு எங்கேயும் அவளை நீங்கள் தேடவேண்டியதில்லை. அந்த கோவில் வாசலில் இருக்கும் பெட்டிக்கடையே அவள் வாசஸ்தலம். எனக்கு தெரிந்து அவளது உணவுக்கான ஸ்பான்ஸர் பெரும்பாலும் அந்த பெட்டிக்கடை நடத்தியவர்கள் தான்.

மார்கழி மாதத்தில் மட்டும்(எல்லோரும் ஆர்வமாகிவிடுவீர்களே!) வெள்ளச்சியை சுற்றி ஒரே ஆண் கூட்டமாக இருக்கும். பெரிய கிராக்கி செய்த படியே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பாள். அப்புறம் பேறுகாலத்தில்(அவ்வளவு தான்! மேலே படியுங்கள்) மூன்று நான்கு குட்டிகளை ஈன்றெடுப்பாள். ஒருமுறை கார்த்தி சொன்னான் "அஞ்சு குட்டி போட்டுச்சு. ஒன்னை சாப்ட்ருச்சு". "அய்யோ பாவம் ஏன்டா சாப்ட்டுச்சு?"என்றேன். முகேஷ் "டேய் அதுதான்டா அதுக்கு மருந்து. அப்டி சாப்பிடலேன்னா பிரசவம் பண்ண நாய் செத்துரும்." என்றான். எனக்குத் தான் அவன் சொன்னது புரியவுமில்லை. பிடிக்கவுமில்லை. வெள்ளச்சியின் மீது லேசான கோபம் இருந்தது. மரணம் யாருக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளாத குழந்தை பருவம் இன்னொரு பிறந்த குழந்தை இறந்ததற்காக வருத்தப்பட்டது.

காலப்போக்கில் வளர்ந்து வேலைக்கு போய், காதல் கத்திரிக்காய் எல்லாம் பார்த்து சமூக அந்தஸ்த்துக்காக வாழ ஆரம்பித்து சிரித்து அழுது நடித்து உண்மையாய் இருந்து என்று வாழ்க்கையின் நீண்ட போராட்டத்தில் வெள்ளச்சியை மறந்துதான் விட்டேன் நண்பர் முருகேசன் தெருநாய் குறுக்கிட்டு பைக் விபத்துக்குள்ளாகும் வரை.  என்னை காண வந்த அன்று அவர் கால்களில் மருந்து வைத்து சுற்றியிருந்த வெள்ளை கட்டுக்களை பார்த்தபோது நினைத்துக்கொண்டேன் வெள்ளச்சி ஒருநாளும் யாருக்கும் தெரியாமல்கூட தீங்கிழைத்ததில்லை.

Thursday, April 5, 2018

கடந்து போனவர்கள்


ரமேஷும் அவன் நண்பர்களும் அந்த பாழடைந்த மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். எல்லோருமே சற்று அதிகமான போதையிலேயே இருந்தனர்.  மண்டபம் சுற்றிலும் வயக்காட்டு இருட்டு. உள்ளே கும்மிருட்டு. திடிரென ஒரு மனிதன் மண்டபத்தின் உள்ளிருந்து வெளியே வந்தான். கூட்டமாக இருந்த இவர்கள் யாருய்யா நீ என்றனர் அதிகாரமாய். அவனோ கொஞ்சம் திடுக்கிட்டு தயங்கியபடி ஒன்னுமில்ல தம்பி வெளிக்கு இருக்க வந்தேன். வேற ஒன்னுமில்ல என்றபடியே அவசரமாக ஓடிவிட்டான். சில நிமிடங்கள் கழித்து அடித்த பீருக்கு ஒரு நண்பனுக்கு அவசரமாக இயற்கை உபாதை வர அவன் இருட்டு மண்டபத்தின் உள்ளே சிறுநீர் கழிக்கச் சென்றான். சென்றவன் திரும்பி அலறியடித்தபடி பேய் டா என்று ஓடிவந்தான். இவர்கள் என்ன என்ன என அவனை சமாதானப்படுத்திவிட்டு உள்ளே சென்று பார்த்தனர்.




"பார்த்தா... இங்கே கொஞ்ச நாளா கருப்பு ட்ரெஸ்ல ஒன்னு சுத்திகிட்டு இருந்துச்சுல்ல பைத்தியம் அதுதான். அதத்தான் அந்தாள் அவ்ளோ நேரம் போட்டுட்டிருந்திருக்கான்". இரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தான் இரமேஷ். அப்புறம் என்றேன். அப்பறமென்ன.. அது ஒருமாதிரி ஒப்பாரி வெச்சுகிட்டிருந்தது. நான் முடிச்சுப்புட்டான்ல போபோன்னு வெரட்டிவிட்டோம். லூசுக்... பைத்தியத்தை போய் செஞ்சிருக்கான் பாரு என்று சிரித்தான். எல்லோருமே ஒருமுறை சிரித்துக் கொண்டோம். விளிம்புநிலை மனிதர்கள் பாலியல்ரீதியாக ஒடுக்கப்படுவது கொடுமை அதிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வன்புணர்வு செய்யப்படும் கொடுமையை அன்று அப்படித்தான் எடுத்துக் கொண்டது மனது. ஈ படம் சற்று முன்னதாக வந்திருக்கலாம். அந்த பெண்ணின் நிலை அவ்வளவு எளிதில் கடந்து போகக்கூடியது அல்ல என படத்தில் நாயகன் பிறந்த கதையை சொல்லும்போது நினைத்துக் கொண்டேன்.

தெருவில் ஒருவர் வெறும் கண்ணங்கரேலென்று ஒரு லுங்கி மட்டும் கட்டியிருப்பார். தாடியும் மீசையும் நிறைய தலைமயிருமாக சுற்றிக் கொண்டிருப்பார். தெருவில் அவரை எல்லா சிறுவர்களும் பி.காம் என்றழைத்தனர். யாரையாவது வைது கொண்டே இருப்பார். அது நம்மை அல்ல என்றும் நமக்குத் தெரியும். மேலும் அவர் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டியதேயில்லை. அக்காவை பார்த்தால் டீச்சரம்மா காசு கொடு என்பார். வீட்டில் சோறு கொடுத்தால் அதை தெரு முனையில் ஓரமாக வைத்துவிட்டு போய்விடுவார். எப்போதும் கரையான வாயில் பீடி இருக்கும்.

கொஞ்ச வருடங்கள் கழித்து மதுதான் அவர் பெயரை திலக்ராஜ் என்று சொன்னான். அவர் படித்தது பி.காம். இல்லை பி.ஏ என்றான். கொஞ்ச நாளைக்கு எங்களுக்குள் கிண்டலாக திலக்ராஜ் என்றழைத்துக் கொண்டோம்.  அது அவர் உண்மையான பெயரா என்று தெரியவில்லை. அவர் யாரென்று தெரியாமல் சக மனிதன் மீதான அக்கறை இல்லாமல் பதினெட்டு வருடங்கள் அந்த தெருவில் வாழ்ந்திருக்கிறேன். சிலவருடங்கள் கழித்து பெரியவனாக அந்த தெருவை வலம் வந்தபோது திலக்ராஜ் அங்கில்லை.

எப்போதும் அமைதியான அந்த அகலப்பாதையிலேயே எனக்கு பள்ளிக்கூடம் செல்வதில் விருப்பமிருந்தது. வேகமாக தனியே நடைப்போட்டுக் கொண்டிருந்தேன். ரோட்டின் ஓரத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக ஒரு உடல் படுத்துக் கிடந்தது. உடம்பில் பல இடங்களில் சதையை கரண்டி வைத்து எடுத்தது போல் காயம் பெரிதபெரிதாக. எந்த சலனமுமின்றி அவள் என்னை வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். நான் இன்னும் வேகமாக நடையை கட்டினேன். அவளை எனக்கு தெரியும். உமா பைத்தியம். பல வருடங்களுக்கு முன் அக்காக்கள் அவளிடம் வம்பளந்து கொண்டிருந்தார்கள். அப்போதும் மனப்பிறழ்வில் இருந்தாள் என்றாலும் நன்றாக பூ, பொட்டுவைத்து நல்ல மாதிரியாகத்தான் இருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இரண்டு நாள் கழித்து சுரேஷும் கார்த்தியும் வந்து உமா பைத்தியம் செத்துப்போச்சு என்றார்கள். எல்லோரும் ச்சூள் கொட்டிவிட்டு அடுத்த நாளை எதிர்கொள்ளப் போய்விட்டோம்.  பின்னொரு நாள் ஆர்குட் வலைதளத்தில் ஒரு நண்பர் உமாபைத்தியத்தை பற்றி அஞ்சலி குறிப்பெழுதினார். எனக்கு அந்த பெண்ணின் வெறித்த கண்களையும் அதை கடந்து போன அந்த நிமிடத்தையும் மன்னிக்க முடியாமல் போனது. பல வருடங்கள் கழித்து முரளி என்னை சவுக்கால் சாடும் விதமாக தன் இளைப்பாறல் தொகுதியில் மாநகரம் என்று ஒரு கவிதை எழுதினார்.  அதில்

மழையையும் தாண்டி
மரணம் துப்பிய எச்சில்
மாநகரத்தின் முகத்தில் வழிகின்றது
அது முன்னிலும் வேகமாய் இயங்குகிறது
அன்பற்றதாக.

என்று முடித்திருந்தார். மாநகர மனிதனுக்கு மட்டுமல்ல நகரத்தில் வாழ்ந்த என்னையும் என் கையாலாகத்தனத்தையும் இந்த கவிதை  ஜென்மம் முழுக்க காறி உமிழ்ந்து கொண்டே இருக்கட்டும்.

Wednesday, April 4, 2018

அது சிகரெட் பிடிக்கிறது!

உண்மையிலேயே ஒரு சமவெளி நாகரிகத்திற்கு உதாரணமாக வாய்க்காங்கரைத் தெருவை சொல்லலாம். ஒரு கால்வாயின் கரை ஓரத்தில் அமைந்திருக்கும் வீடுகள்.  உண்மையில் தோட்டங்கள் அதன் பின் வீடு. வீடுகளின் முன்புறம் தெரு. அந்த தெருவின் பெயரை மாற்ற ஒரு ஜெயின் முயற்சி செய்தபோது அதை இன அழிப்பு நடவடிக்கை போல புரிந்து கொண்டு வீறுகொண்டு எதிர்த்த இளைஞர்களை கொண்டது அந்த வாய்க்காங்கரைத் தெரு. ஆனால் அவர்கள் யாரென்று சத்தியமாக எனக்கு தெரியாது.

தெரு முழுக்க பிராமணக் குடும்பம் இல்லை. பலதரப்பட்ட வகுப்பினரும் இருந்தனர். கொஞ்சம் வசதிகள் அதிகமிருந்த பிராமணர்கள் இருந்தார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பிராமணர்களும் இருந்தார்கள். வறுமைக்கோட்டுக்கு கீழே ஜாதி என்ன வேண்டியிருக்கிறது ம... என்கிறீர்களா அவர்களிடம் சொல்லிப்பாருங்கள். எக்ஸ்ட்ரா ரெண்டு ம... என்ற திட்டு உங்களுக்குத்தான் சேர்த்து கிடைக்கும். மற்றபடி பட்டியலின வகுப்பை சேர்ந்த யாரும் அங்கே இருந்ததாக ஞாபகமில்லை. அதற்கு ஈசானித் தெரு என்ற ஒன்று இருந்ததாக ஞாபகம் அதைதாண்டி அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

தெருவில் ஒருநாள் காலை வேளையில் வெள்ளை வெளேர் என்று இரண்டு பேர் நடந்து போய் கொண்டிருந்தனர். ஒருவர் ஆண். இன்றைக்கு கேட்டால் சட்டென்று வர்ணித்து விடுவேன் blonde ஆறடி உயரம். ஷார்ட்ஸ் அப்புறம் பேக்பேக் மாட்டியிருந்தார் என்று. கூடவந்த பெண்ணை இன்னும் நன்றாகவே வர்ணிப்பேன் ஆனால் அது இப்போது தேவையில்லை.


ஒரு இரண்டு வாரங்கள் இருந்திருப்பார்கள் எங்கள் தெருவில். அவர்கள் தங்கியிருந்த வீடு ஒரு பணக்கார பிராமணருடையது. அங்கே அவர்கள் வியாபார நிமித்தமாக வந்திருந்தார்கள். அந்த ஆண் அவ்வபோது தெருவில் சுதனுடன் shuttle விளையாடுவதை பார்த்திருக்கிறேன். அந்த பெண்ணை நான் வெளியே பார்த்ததே இல்லை.

என் அக்கா ட்யூஷன் எடுத்துக் கொண்டிருந்தார் நிறைய குழந்தைகளுக்கு. மதுவும் வந்து படித்துக் கொண்டிருந்தான். மதுவுடன் காயத்ரி என்ற பெண் படித்துக் கொண்டிருந்தாள். ரொம்பவும் வித்யாசமாக "இங்க வாவேன்" என்று விளிக்கும் பெண். அம்மா ரேவதி என்றும் அவர் அரசாங்க ஆஸ்பத்திரி செவிலி என்றும் ஞாபகம். எல்லோரும் மொட்டைமாடியில் ட்யூஷன் படித்துக் கொண்டிருந்தோம்.

திடிரென எங்களுக்குள் சலசலப்பு, நமுட்டு சிரிப்பு எல்லாம். நான் மதுவை என்ன என்பது போல் பார்க்க அந்த பக்கமாக கைகாட்டினார்கள். அங்கே இரண்டுவீட்டு மாடிகள் தாண்டி தெரிந்த மாடியில் அந்த வெள்ளைக்கார பெண் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள். கையில் ஒரு புத்தகம்.  நாங்கள் எல்லாம் ஹஸ்கி வாய்ஸில் என்னடா அது ஜட்டியோட உக்காந்திருக்கு, அய்யே சிகரட்டு குடிக்குது பாரேன் என்று பேசிக்கொண்டோம். தன்னை யாரோ பார்க்கிறார்கள் என்ற எந்த உணர்வும் இன்றி படித்துக் கொண்டிருந்தது எங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் வேடிக்கை அசிங்கம் எல்லாமாகவும் இருந்தது. அவளை ஓரிடத்தில் கூட அது என்ற சொல்லைத்தாண்டி உயர்திணையில் குறிப்பிடவே இல்லை.

அன்றைக்கு முப்பது வயது மதிக்கத்தக்க அவளைவிட இருபத்திரெண்டு வயது சிறியவனான நான் கிணற்றடியில் ஜட்டியோடு குளிக்க வெட்கப்பட்டு பாத்ரூமை தேடி ஓடிக்கொண்டிருந்தேன். இப்போது எப்படி என சந்தேகம் வேண்டாம். அட்டாச்ட் பாத்ரூம் தான். பின்னாளில் அதாவது வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு பாண்டிச்சேரி ஆரோவில் பீச்சில் அந்த பெண் உடைக்கு டூ-பீஸ் என்று பெயர் என அறிந்து கொண்டேன். நிறைய வெளிநாட்டுப் பெண்களை அந்த உடையில் பார்த்தும் இருக்கிறேன். அதற்கு சில வருடங்களுக்கு முன்பே ஆங்கில படங்களிலும் தற்போதைய தமிழ் படங்களிலும் பார்க்கிறேன். இப்போது பெண்கள் புகைப்பதையும் குடிப்பதையும்  ரொம்ப சகஜமாக எதிர்கொள்கிறேன். பார்க்கும் கண்களிலும் ஏற்கும் சிந்தனையிலும் தான் மாற்றம் வேண்டுமேயன்றி எதிர்ப்பாலினத்தை தரக்குறைவாய் எண்ணுவதில் கூடாது என்கிற அறிவை அன்றைக்கு நான் வசித்த சமவெளி நாகரிகத்தில் அறிந்து கொள்ளவில்லை. தவிர அன்று அதை அறியும் வயதும் அல்ல. ஆனால் எனக்கே எனக்கென்று எப்போதும் ஒரு க்யூரியாசிட்டி உண்டு. அதுதான் அப்போதும் இப்போதும் அந்த பெண்ணிடம் நான் அறிந்து கொள்ள விரும்புவதை எழுத தூண்டுகிறது. அது அந்த டூ-பீஸ் வெள்ளைக்காரப் பெண் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் பெயர் என்னவாயிருக்கும்?

Tuesday, April 3, 2018

கோடை என்றோர் வசந்தம்


மதியம் மூன்று மணி. நான் படுத்திருக்கும் கட்டில் அருகில் ஒரு ஜன்னல் உண்டு. அதன்வழியே மஞ்சள் ஒளி மிக உக்கிரமாய் இறங்கி கொண்டிருக்கிறது. ஏனோ அது ஜெயகாந்தனின் நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் கதையை ஞாபகப்படுத்தியபடி இருக்கிறது. கோடை வெயில் எப்போதுமே ஒரு வெறுமையை உணர்த்திக் கொண்டே இருக்கும் விநோதமான தனிமை வெளிச்சம். எவ்வளவு மகிழ்ச்சி வாழ்வில் எண்ணுவதற்கு இருக்கும்போதும் கோடையின் வெறுமைக்கென்று என் வாழ்வில் தனி இடம் உண்டு. அது ஒரு காலப்பயணத்திற்கான சாதனம்.



முழு ஆண்டுத்தேர்வின் கடைசிநாள் தரும்  adrenaline rush இருக்கிறதே அதற்கு முன் இருமுகன் inhaler எல்லாம் பிச்சை வாங்கவேண்டும். மனம் சந்தோஷம் பயம் எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு உணர்வை தைரியத்தை தரும். ஒருமுறை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சைக்கிள் ஹேண்ட்பாரில் கைவைக்காமல் ஓட்டிவந்தேன். இன்னொருமுறை வீட்டிற்கு வந்து தனியாக ஊஞ்சலில் ஆடிய வேகத்திற்கு வேறொருவராக இருந்தால் குடலே வெளியே வந்துவிடும். இதெல்லாம் ஒரு தைரியமா என்பவர்களுக்கு எனக்கும் தெனாலியை போல பல போபியாக்கள் உண்டு.

கோடை விடுமுறையின் முதல்நாள் மட்டும் பத்துமணி வரை தூங்கிப் பழகுவேன். அன்று மட்டும் எவ்வளவு நேரத் தூக்கம் என்றாலும் வீட்டில் திட்டுவிழவே விழாது. அப்புறம் மெதுவாக நம் பழைய பழக்கங்கள் மெல்ல எட்டிப்பார்க்கும் எட்டு மணிக்கு மேல் தூக்கம் வராது. அதன் பிறகு நேரத்தை கடத்த நமக்கு பல விஷயங்கள் கைகொடுக்கும். முக்கியமாக  தெருவில் கிரிக்கெட் அப்புறம் LMC கிரவுண்ட். அது இல்லாமல் கதை புத்தகங்கள் அப்புறம் விடுமுறைக்கு தவறாமல் மாமாவின் வீட்டிற்கு விசிட் செய்யும் விஜி அக்கா உமா அக்கா ஆர்த்தி மற்றும் ஆனந்த். அப்புறம் விக்னேஷின் உறவில் விவேக் பாலு காளி. இவர்களை என் எல்லா கோடை விடுமுறையிலும் பார்த்து விடுவோம் நாங்கள்(நான் மது, அவன் தங்கை ஆர்த்தி மற்றும் ஶ்ரீராம்).

ஆர்த்தியும் ஆனந்தும் வரும் நாட்கள் மிகச்சிறப்பான நாட்கள். அப்போதுதான் இராதா அண்ணா சுதன் வீட்டில் இருந்து விசிஆர் எடுத்து வந்து போடுவார். ஆங்கில சண்டை படங்களை நான் பார்த்து பழகிக் கொண்டது அப்போது தான். ஆகச்சிறந்த திரைப்படமான speed திரைப்படம் இராதாஅண்ணாவின் உபயத்தாலேயே பார்க்க முடிந்தது. இன்று நான் பார்க்கும் உலக சினிமாக்கள் அனைத்திற்கும் இராதா அண்ணா வாடகைக்கு எடுத்து வந்து போடும் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணம் ஆகும். சினிமா மீதான என் காதலுக்கு அவரும் ஒரு காரணம். முக்கியமாக அவர் சொன்ன courage of fire திரைக்கதை. சரவணன் கதை சொல்லும் ஒவ்வொரு முறையும் இராதா அண்ணா மனதில் வந்து போவார்.

அதே போல எல்லா கோடைவிடுமுறையிலும் எனக்கும் மதுவுக்கும் சண்டை வந்து விடும். ஒன்று அவன் adamant ஆக இருப்பான் இல்லை நான் புத்தி மட்டான ஆத்திரக்காரனாக இருப்பேன். எப்படியும் ஒரு சண்டையும் பின்னர் பத்துநாட்களுக்குள் சேர்ந்து கொள்வதும் கோடை ஸ்பெஷல்ஸில் ஒன்று. அதே போல வருடத்தில் ஒருமுறை மெட்றாஸ் போகும் வாய்ப்பு கோடை விடுமுறையில் மட்டுமே வாய்க்கும். எண்ணிப் பார்த்தால் அறுபது நாட்கள் தான் என்றாலும் அது கொடுக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனி வாழ்க்கை தான்.

இன்றைக்கு சினிமாவும் புத்தகமும் என் வாழ்க்கையை நிறைத்திருக்கின்றன. நினைத்த படங்களை என்னால் பார்க்க முடியும். இராதா அண்ணா விடுமுறைக்கு வந்து விசிஆர் போட வேண்டும் என்றில்லை. நினைத்தவுடன் எனக்கு பிடித்தமான நண்பர்களுடன் அரட்டை விளையாட்டு என ஆனந்தமாக இருக்க முடியும். எந்த ஊரிலிருந்தும் யாரையும் எதிர்ப்பார்த்து இருக்கவில்லை தான். தேவை என்றால் எந்த ஊருக்கும் போய் வரலாம் தான். நிறைய நேரங்களும் இருக்கின்றன செலவிட. ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் கோடை விடுமுறை எனும் வசந்தத்தை நான் குறிப்பிட்ட  இவர்கள் எல்லாம் எனக்கு என்ன உறவு என்று நீங்கள் குழம்பிக் கொண்டிருக்கிற இவர்களோடு கொண்டாடாமல் கடக்கும் வெறுமையைத்தான் அந்த ஜன்னல் வெயில் என்னுள் நிறைத்துக் கொண்டிருக்கிறது மிக அதிகமாக.


Sunday, April 1, 2018

கக்கூஸ் - குற்றவுணர்வின் துவக்கமும் அச்சமும்

“இந்த பயங்கர நிலையில் இருத்தப்பட்டுங்கூட மனித உணர்ச்சி இப்படி இழிவுபடுத்தப்பட்டுங்கூட யாரும் ஆத்திரப்படாதது குறித்து அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது”.

புத்துயிர்ப்பு நாவலில் இருந்து லேவ் தால்ஸ்தாய் எழுதிய இந்த வரிகளில் ஆச்சரியப்பட்டதும் வருத்தப்பட்டதும் நிஜமாய் நான் இல்லை மதிப்பிற்குரிய தோழர் திவ்யா அவர்கள்.நானெல்லாம் இதை பற்றி கண்டும் காணாமல் வாழ்வதற்காக வெட்கப்படவேண்டும். படத்தின் முதல் காட்சியில் “கள்ள மௌனத்திற்கு” என்று சமர்ப்பிக்கப் படுகிறது. உண்மையில் அது கள்ள மௌனம் மட்டுமல்ல ஒரு பிடிவாதமான மௌனமும் கூட. “இப்படியெல்லாம் கூட பேர் வைப்பாங்களா?” என்று கேட்கிறார் என் சித்தி. பிடிவாதமான மௌனத்தின் மூலமாக இது போன்ற அவலங்களை ஒதுக்கி மறந்து கடக்க முயற்சிக்கும் என்னை போன்றோரின் கிண்டலான கேள்வி அது.




இந்த சமூகத்தில் ஒரு சாரார் மலம் அள்ளுவதை, அதுவும் வெறும் கையால் ஆம் வெறும் கையால் அள்ளும் அவலத்தை இத்தனை நாட்களாக நேரில் நான் பார்த்துவிடக்கூடாது என அஞ்சிய அந்த தொழிலை செய்வோரின் வாழ்வை ஆவணப்படுத்தியிருக்கிறது கக்கூஸ் ஆவணப்படம். அவர்கள் அள்ளுவதை காட்சியாய் பார்க்கும்போதே எனக்குள் குமட்டல் எடுத்துவிட்டது. அவர்கள் வாழ்வையே அந்த மலக்குழிக்குள் தள்ளியிருக்கிறோம்.  இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனாய் இதற்கு நான் வெட்கப்படுகிறேன். இதை மாற்ற இத்தனை நாள் யோசிக்க கூட இயலாத என் கையாலாகாத்தனத்திற்கு யாதொரு தண்டனையும் தகும்.

இந்த சமூகமும் அரசும் ஒரு சாராரை இப்படி வாழ வைப்பதை தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை நிரூபிப்பது போல அவர்களுக்கு உதவுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தையும் விலை அதிகம் என அரசு நிராகரிக்கிறது. எந்த மாவட்டத்திலும் இந்த அவலம் நிற்க வில்லை. ரோட்டோரமாயினும் சரி, பொது கழிப்பிடமானாலும் சரி எதுவாயினும் துப்புரவு தொழிலாளியே கையுறை கூட இல்லாமல் சரியான எந்த உபகரணமும் இல்லாமல் அதை சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. மனிதக்கழிவு மாத்திரம் அல்ல இறந்து போன நாய் பூனை எலி  ஏன் அநாதை பிணமாயினும் அவர்கள் தான் அதை எடுத்து போட்டு சுத்தம் செய்கிறார்கள். எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஒரு இறந்து போன மனிதரை வெறும் கையால் தூக்கி கொண்டு போனதை சொல்கிறார் ஒரு துப்புரவு தொழிலாளி. HIV +ve மிக மிக மிக குறைந்த அளவுள்ள ஒரு மனிதருக்கு சிகிச்சை செய்ய எவ்வளவு பாதுகாப்பு உபகரணங்களோடு போவார்கள் என பார்த்திருக்கிறேன். அவ்வளவு ஏன் சாதாரண நோயாளியின் ஒரு துளி ரத்தமாயினும் இல்லை அவர்களை தொடுவதாயினும் கையுறை, ஸ்ட்டர்லியம் இல்லாமல் அணுக மாட்டார்கள். ஆனால் நம் துப்புரவு தொழில் நண்பர்கள் பெண் தோழர்கள் இங்கே வெறும் கையால் வேலை செய்வதை கண்டும் காணமல் செல்கிறேன் நான். நகராட்சித்துறை, தனியார் ஒப்பந்தக்காரர்கள், நீதித்துறை, எதுவும் அவர்களுக்கு சாதகமாய் இல்லை. மலக்குழி மரணங்களை பற்றிப் பேசும்போது திவ்யா அவர்கள் அதை மலக்குழி கொலைகள் என குறிப்பிட சொன்னார். இது அரசு செய்யும் கொலை என்றார். அரசு மக்களுக்காக மக்களை கொண்டு மக்களால் நடத்தப்படும் ஜனநாயகம் எனில் இந்த மக்களில் ஒருவனான நானும் ஒரு கொலை குற்றவாளியே.

ஒருமுறை மக்கள் கவிஞர் சுகிர்தராணி ஒரு உரையில் குறிப்பிடும்போது தமிழில் மன்னிப்பு கோரும் இலக்கியம் ஒன்று இல்லை என்ற சொன்னார். இந்த பதிவு இலக்கியமல்ல. ஆனால் இந்த நாட்டை சுத்தம் செய்ய  நாம் பலி கொடுத்துக் கொண்டிருக்கும் துப்புரவாளர்களிடம், அரசு செய்யும் இந்த கொலைகளுக்கு உடந்தையாய் இருந்ததற்காக அவர்கள் குடும்பத்திற்கும் எழுத்தின் மூலமாக என் மன்னிப்பை கோருகிறேன்.