எண்சாண் உடம்பிற்கு அரைசாண் வயிரே பிராதானம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன்.
ஆனால் நாம் யாரும் வயிற்றுக்கு போதும் என்று மட்டும் சாப்பிடுவதில்லை. பசி
ருசியறியாது என்று சொல்லிக்கொண்டே உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று இன்னொரு
சொல்லாடல் வைத்திருக்கிறோம். அதாவது ருசியில்லா பண்டம் நம் வயிறு ஏற்றாலும் நம்
நாக்கு ஏற்பதில்லை. நரம்பில்லா நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசிவிடும் ருசியில்லா
உணவென்றால். போனவாரம் என் நண்பர் தேனீ விசாகன் அவரை உணவகம் ஒன்றிற்கு அழைத்து
சென்று சொன்னேன் இங்கே உள்ள பெரும்பாலான உணவுகள் வெளியே கிடைக்காது. சைவ உணவுகளில்
அபூர்வமான சில உணவுகள் இங்கே உண்டு என்றேன். அதற்கு அவர் “ப்ராமணன் திங்க
பிறந்தவன்” என்றார். அம்மாவிடம் சொன்னேன், அதற்கு அம்மா “ஆமாண்டா தின்னு கெட்டான்
பிராமணன்னும் சொல்றதுண்டு” என்றார். எனக்கு தோன்றிற்று எல்லா மனிதனும் திங்க
பொறந்தவந்தான். தின்னு கெட்டவன் தான். எல்லாருமே சாப்பாட்டு ராமன் தான்,
சாப்பாட்டு பிராமணன் தான்.
ருசியா சாப்பிடறது என நினைத்தவுடன் எனக்கு ஞாபகம் வருவது ராமராஜன் தான்.
அதற்கு பிறகுதான் கல்யாண சமையல் சாதம் பாட்டு, ராஜ்கிரண் எலும்பு கடித்தல் எல்லாம்.
கிட்டத்தட்ட நாம் பொறாமை கொள்ளும் அளவு ருசித்திருப்பார் ராமராஜன் அந்த படத்தில்(அத்தை
சுட்ட அப்பளம்!!!). இப்படி ருசியை மட்டுமே நோக்காகி கொண்டு தேடி சாப்பிடும்
மனிதர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு கடையாய் தேடி அங்குள்ள உணவை ருசி பார்த்து அடடா
என சொல்லிச்சொல்லி சாப்பிடும் மனிதர்கள் உண்டு. இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும்
உணவை தேடி உண்பவனாகிப் போனேன். எல்லா மனிதர்களும் வேலை முடித்து வரும்போது அல்வா, சேவு
வடை என எதையாவது வாங்கிகொண்டு செல்லும் வழக்கம் இருந்தது. நாலுபேர் சாப்பிட்டு அதை
எட்டுபேருக்கு சொல்லி அது நூறாகி ஊராகி பின் நாடு முழுவதும் கூட பிரசித்தி
பெற்றுவிடுகிறது. மேலை நாடுகளில் Food Critics உண்டு. அவர்கள் எழுதும் விமர்சனங்கள் சிலசமயம்
ஒரு உணவகத்தையே இழுத்து மூடுமளவு சென்றுவிடும். சில நொடிந்த உணவகங்களை மேலே மேலே
உயர்த்திவிடும். இதோடு நில்லாமல் health department முறைவைத்து ஆய்வு செய்யும் உணவகத்தின் சுத்தம்
உணவின் தரம் அனைத்தையும் ஆராயும். இங்கும் அவையெல்லாம் உண்டு என்றபோதும் அதை
பெரியளவில் யாரும் கண்டுகொள்ளமல் இருக்கிறார்கள்.
ஆனாலும் நமக்கும் இப்போது சில பழக்கங்கள் கைவந்திருக்கின்றன. உணவை விமர்சனம்
செய்தல் அதை பற்றி பேசுதல் என. சமூகவளைதளம் அதற்கு ஒரு மிகப்பெரிய இடத்தை
கொடுத்திருக்கிறது. நமக்கு ஒரு உணவு பற்றி அதன் தரம் தெரிய வேண்டுமா? அதை சொல்லும்
முகநூல் விமர்சகர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருக்கின்றன.
ஆனால் ஒரு சிறு ஆறுதல் இங்கே. அவர்கள் எண்ண ஓட்டங்களை நாம் நேரில் பார்க்க
முடியும்போது பெரும்பாலும் கண்டுபிடித்துவிடாலாம். அது பொய்யா மெய்யா என்று.
சினிமா விமர்சனம் போலன்றி இதில் முகமே காட்டிகொடுத்துவிடும் உணவு ருசியை.
எழுதுகிறார்கள் எனில் ரொம்ப நேரம் விஷயத்தை சொல்லாமல் சிலாகிக்க முடியாது.
சுருக்கமாக அவர்கள் எழுதும்போதும் பேசும்போதும் நமக்கு நாவில் எச்சில் ஊறவேண்டும்.
இந்த இடத்தில் டேவிட் சாரை அறிமுகம் செய்வது சாலப் பொருத்தமாக இருக்கும். அவர்
உலகில் உள்ள ஏறக்குறைய பல நாடுகளுக்கு சென்று உணவுகளை ருசி பார்த்திருக்கிறார்.
உள்ளூர் நத்தை குழம்பில் ஆரம்பித்து நெருப்புக்கோழி, பாம்பு, முதலை கறி என
எல்லாவற்றையும் ருசி பார்த்தவர். அவர் சொல்வதை கேட்கும்போது என்னமோ நாமும் அவருடன்
ஆந்த இடத்தில் அமர்ந்து ருசிக்க தவறிவிட்டோமே என்றிருக்கும். அது நிச்சயமாய்
போலித்தனமாய் இருக்காது. சொல்லும்போதே நமக்கு பசிக்க ஆரம்பித்துவிடும்.
எங்கோ காடுகளில் பச்சை மாமிசமும் இலை தழைகளும் உண்டோம். பிறகு அதையே ஆடையாக்கினோம்.
உண்பதிலிருந்து உடுப்பது வரை நெருப்பு கொண்டு வாட்டி பக்குவப் படுத்தினோம்.
நிலத்தை கீறி விதை விதைத்து விவசாய விஞ்ஞானம் செய்தோம். இறைச்சியை பதப்படுத்தி
உப்பிட்டு தீயில்ட்டு பின் விளைந்ததையும் இறந்ததையும் ஒன்றாய் கலந்து சாப்பிட
ஆரம்பித்து பின் அதில் சர்க்கரை, சத்து, புரதம் என ஆராய்ந்து ஏறக்குறைய உணவை ஒரு மாபெரும்
தொழிற்கூடப் பயிற்சியாக்கி இருக்கிறோம். யாருக்கும் ரொட்டி இல்லை என்றால் என்ன கேக்
சாப்பிடுங்கள் என சொன்ன சர்வாதிகாரத்திலிருந்து எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும்
வரை யாருக்கும் கேக் கிடையாது என சொன்ன பொதுவுடைமை வரை உணவின் பின்னே ஒரு மாபெரும்
அரசியலை உருவாக்கியிருக்கிறோம். அன்னமிடுவதையும் உண்பதையுமே ஒரு கௌரவம் சம்பந்தப்
பட்டதாக கூட மாற்றியிருக்கிறோம்.
இறுதியாக இன்று நாம் விதம் விதமாக சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதை விமர்சனமும்
செய்கிறோம். நம் உணர்வில் கலந்துவிட்ட ஒவ்வொரு உணவும் அதன் ருசியும் நம்
ரத்தத்தில் கலந்து நாம் இறக்கும்வரை ஞாபகம் வைக்கப்படிருக்கிறது ஏறக்குறைய ஒரே ஒரு
உணவை தவிர. அது தாய்ப்பால். இதை படிக்கும் யாருக்கேனும் முரண்பாடிருக்கலாம் ஆனால்
எனக்கு ஞாபகமில்லை சத்தியமாக.
(நண்பரும் அண்ணனுமான இயக்குனர் சரவண கார்மேகம் அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலில் விளைந்த குறிப்புகள்)
Betway casino site, live dealer, mobile app
ReplyDeleteBetway Casino is a reputable online casino luckyclub that is based in Malta and has been operating since 2011. They offer the most up to date game