Thursday, April 23, 2020

டயாலிஸிஸ் நாட்களில் ஒருநாள் (1)

நான் டயாலிஸிஸ் வாழ்க்கை முறையில் இருந்த ஒரு காலகட்டத்தில் ஒருநாள் நடந்தது.

டயாலிஸிஸ் வார்டை HB(hepatitis b) நெகட்டிவ் பாசிட்டிவ் என இரண்டு யூனிட்களாக பிரித்திருப்பார்கள். பாசிட்டிவில் இருக்கும் மெஷின்களை நெகட்டிவ்க்குள் பயன்படுத்தமாட்டார்கள். பெரும்பாலும் எல்லா மெஷின்களும் occupied ஆக இருக்கும். 
ஆனால்  பாசிட்டிவில் எப்போதும் ஒரு மெஷின் மட்டும் எப்போது பார்த்தாலும் பயன்படுத்தாமல் காலியாக இருக்கும்.  ஒருமுறை டெக்னீஷியனிடம் கேட்டேன்.

ஏன் ஸிஸ்டர் அந்த மெஷின் யூஸ் பன்னாம இருக்கு?

அது hiv பாஸிட்டிவ் இருக்கிறவங்களுக்கானது சார்.

யாராவது வருவாங்களா?

ஹ்ம்ம் ஒருத்தரு வருவாரு! நீங்க வர்ற நேரத்துல வரமாட்டாரு.

ஓ என்றபடியே அந்த மெஷின் அருகில் இருந்த பெட்டை பார்த்தேன். ஒருமாதிரி cushion சேர் மாதிரி இருந்தது.

சிலநாட்கள் சென்ற பிறகு ஒருநாள் யூனிட்டில் படுக்கை தட்டுப்பாடு. அந்த cushion chairஐ போட்டு என்னை அதில் உட்கார்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்ள சொன்னார்கள். ஒரு நொடி ஸிஸ்டரை தயங்கிப் பார்த்தேன்.

என்ன?

இல்லை இது அந்த HiV பாஸிட்டிவ் மெஷின் கூட இருக்குமே அந்த சேர் தானே?

ஆமா. அதுக்கென்ன?

ஒன்னுமில்லை ஸிஸ்டர்! என்றேன் தயக்கமாய்.

சார் இதுல புதுபெட்ஷீட் போட்ருக்கேன். Hiv வைரஸ் பெட்ஷீட் மூலமா எல்லாம் பரவாது. இன்னமும் உங்களுக்கு டவுட்னா வேற பெட்ல...

எனும்போதே வேண்டாம் என்றபடி அதில் அமர்ந்து கொண்டேன். டயாலிஸிஸ் ஸ்டார்ட் ஆனது.

டயாலிஸிஸ் ஆரம்பித்த அரைமணி நேரம் கழித்து ஸிஸ்டர் என்றேன்.

அருகில் வந்து என்ன என்றார்.

ஒன்னுமில்லை.. hiv பத்தி நீங்க சொன்னது எனக்கும் தெரியும். ஆனா ஒரு நிமிஷம் "படிச்சத பயம் சாப்டுருச்சு". 

உண்மைதான் சார். உங்க பயம் தப்பில்ல ஆனா அந்த பயத்தை உதறிதள்ளதானே சார் படிக்கிறோம். 

"சாரி ஸிஸ்டர்" என்றேன். "பரவாயில்லை சார் வேற ஏதாச்சும் வேணும்னா கூப்பிடுங்க."

சிரித்தபடியே அடுத்த பேஷன்டை நோக்கி போனார்.  எனக்கு தான் என்ன நாமெல்லாம் படித்து கிழித்தோம் என்றிருந்தது.

இன்றைக்கு ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய மறுத்த சம்பவத்தை படித்தபோது ஸிஸ்டர் சொன்னதை நினைத்துக் கொண்டேன். பயம் மனித இயல்புதான் ஆனால் அதை களைந்து மனிதத்தை கடைபிடிக்க தானே இவ்வளவு படிப்பு அறிவு எல்லாம் தேவைப்படுகிறது. அதற்கு தானே படிக்கிறோம்!

"Being human is not a state. It's a practice."

Sunday, December 15, 2019

கடைசி இருவர்

மொத்த உலகமும் ஒன்றுமில்லாமல் போய் அவன் ஒற்றை மனிதனாக திரிய ஆரம்பித்து பல வருடங்கள் ஆயிற்று. யாருமில்லாத முதல் சில காலம் அவனுக்கு நரகமாக இருந்தது. தனிமையை விரட்ட தன்னை தேடி யாரேனும் வருவார்கள் என நம்பிக்கொண்டே இருந்தான் அவன். யாரும் வராதது அவனுக்கு பயமாக இருந்தது. பயத்தோடு அவன் வாழ விரும்பவில்லை. தற்கொலை கோழைத்தனமாகவும் தோன்றியது. சிலநேரங்களில் மிகவும் தைரியமான செயலாகவும் தோன்றியது. இரண்டுமே அவன் அந்த எண்ணத்தை கைவிடுவதற்கு வழி செய்தது. அதுவரை அதிபுத்திசாலித்தனமாக நினைத்து கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்டுக்கொண்டிருண்டிருந்த அவன் இப்போது தன்னை யாரேனும் கொல்வதற்க்கேனும் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருந்தான். 

யாரும் வராத காரணத்தில் சலித்துபோய் காத்திருப்பது வீண் என தனியே தன்  பயணத்தை தொடங்கினான் ஒருநாள். அந்த பயணம் ஆரம்பித்த அந்த நாள் அவனுக்கு ஏதோ திரைப்படத்தின் முதல் காட்சி ஞாபகம் வந்தது. அதைப்பற்றி தனக்குத்தானே  சிலவார்த்தைகள் பேசிக்கொண்டான். விவாதித்து தன்னை தானே தோற்கடித்துக்கொண்டான். பயணம் ஆரம்பித்து முதலில் வேகமாக ஓடினான். எவ்வளவு சீக்கிரம் அந்த பாழடைந்த நகரத்தை தாண்டவேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் தாண்டிட முயற்சித்தான். ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் களைத்துப்போய் நடந்தான். பிறகு நடப்பதையும் கிடைத்த இடங்களில் இளைப்பாறுவதையும் தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. முடிவில்லாமல் நீண்ட அந்த நகரம் ஒருவழியாக முடிந்தது. ஆனால் அதோடு அந்த பயணமும் முடிந்து போனது. ஏனென்றால் நகரம் தாண்டிய பிறகு வெறும் பாலைவனமே இருந்தது. 

நம்பிக்கையற்று விரக்தியோடு நகரத்திற்கே திரும்பினான். தினம் அவன் அந்த பாலைவனத்தின் எல்லையை தொட்டு வருவதை வழக்கமாக வைத்துக்கொண்டு பொழுது போக்கினான். துரதிர்ஷ்டவசமாக அவன் வாழ்வில் அவனால் அதுமட்டுமே செய்ய முடிந்தது. நகரின் ஓரிடத்தில் நூறுவருடத்திற்கு தேவையானவைகள் சேமிக்கப்பட்டு கெடாமல் இருந்ததில் அவன் வாழ்க்கை பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தது. அப்படியே காலம் ஓடியது.. 



ஒருநாள் அந்த பாலைவனத்தில் கொஞ்ச தூரத்தில் ஏதோ கானல் காட்சியாக தெரிந்தது போல் இருந்தது. ஒரு கீற்று நம்பிக்கை அவனை தொற்றிக்கொண்டது. சரேலென்று அதை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கிட்டே செல்ல செல்ல அங்கே ஓர் ஒற்றை மரம் மட்டும் இருந்தது. இத்தனை நாள் இல்லாமல் இன்றொரு மரம் இங்கே இருக்கிறதே என ஆச்சர்யமாய் இருந்தது அவனுக்கு. மரத்தை சுற்றி நடந்தான். மரம் மிகப்பெரியதாக இருந்தது. பல கொடிகள் தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு கொடி மட்டும் சற்று மஞ்சளும் பழுப்புமாய் இருந்தது. சற்று தடிமன் கம்மியாக இருந்தது. அதை தொட்டு பார்க்க கைய நீட்டியபோது கொடி நெளிந்து அவன் முன்னே அமைதியாய் எழுந்தது அந்த பாம்பு.

பாம்பு அவனை நேரே பார்த்து உன் பெயரென்ன என்றது? கூப்பிட யாருமில்லாத அவன் தன் பெயரை மறக்க மிகவும் விரும்பி மறந்தே போனதால் ஞாபகம் இல்லை அவனுக்கு. பேசாமல் இருந்ததால் சொற்களும் கூட கொஞ்சம் மறக்க தொடங்கியது. ஞாபகம் இருந்தாலும் தர்க்கம் செய்ய அவன் ஆறாம் அறிவு வேலை செய்யவில்லை. பாம்பு அவனை மறுபடியும் கேட்டது உன் பெயரென்ன? அவன் தெரியாது என்றான். தெரியாது என்பதெல்லாம் ஒரு பெயரா? என்றது பாம்பு. எப்போதோ இதுபோல் தனக்கு தெரிந்தவள் சொல்லி நகைத்து தான் எரிச்ச்சலுற்றது ஞாபகம் வந்தது. அன்றைக்கு பொய்யாய் சிரித்தோம் என்று நினைவு வந்தது. இப்போது பாம்பின் முன் சிரிக்கலாமா என்று யோசித்தான். 

அதற்குள் பாம்பு எதையோ நினைத்தது போல சிரித்துக்கொண்டது.  எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு மனிதனை பார்த்தேன் அவனும் தெரியாது என்றுதான் சொன்னான். அன்று நான் அவனுக்கு ஆதம் என பெயர் வைத்தேன் என்றது. இப்போது நானே உனக்கும் ஒரு பெயர் வைக்கிறேன். உன் பெயர் ஆதம் என்றது. மறுபடியும் அதே பெயரா என்று முகம் சுளித்தான்.. இருக்கட்டும் வைத்துக்கொள் என்றது பெருமிதமாக.

பின் இரண்டு கொடிக்கு குறுக்காக படுத்து ஊஞ்சலாடியபடியே நான் இன்றைக்கு ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறேன். ஏன் யாரையும் காணவில்லை ம்ம்ம்..? அன்றும் அப்படித்தான் இருந்தது அப்புறம் ஒரு பெண் வந்தாள் அவளோடு பேசி பொழுதுபோக்கிவிட்டுத்தான் சென்றேன். இன்றைக்கும் அவள் வருவாளா என்று பார்ப்போமா என்று கண்ணடித்தது. அவன் எந்த சலனமுமின்றி இன்றைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று சொல்ல  பாம்பு ஏளனமாக பார்த்தது. எப்படி இவ்வளவு திடமாக சொல்கிறாய். நான் நம்பமாட்டேன். மேலும் நான் என் விடுமுறை முழுவதும் எப்படி பொழுதை கழிப்பது அதுவும் உன் மூஞ்சியை பார்த்துக்கொண்டு? ம்ம்ம்?

அவன் சற்று கோபமாய் இதோ பார் நீ ஒன்றும் என் மூஞ்சியை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டாம். எனக்கே சலித்துவிட்டது  இதற்கு மேல் நான் ஒரு கனத்தையும் கழிக்க விரும்பவில்லை. என்னை கொன்றுவிடு என்றான். அப்படி சொல்லாதே என்று அது இடைமறிக்க இவன் இன்னும் ஆவேசமாக  யாருமில்லாத உலகம் இது இங்குதான் தனிமையில் சாக காத்திருக்கிறேன் கொன்றுவிடு தயவு செய்து என்னை கொன்றுவிடு என்று மண்டியிட்டான். பாம்பு இப்போது அவனுக்காக பச்சாதாபப்பட்டது. உனக்கு போய் ஆதம் என்று பெயர் வைத்தேனே என மனதில் நினைத்துக்கொண்டது. பின்பு இரு நிச்சயம் ஒருத்தி வருவாள் அவளை கண்டிப்பாக பார்த்து போவதற்காகத்தான் வந்திருக்கிறேன். உன்னையும் அறிமுகம் செய்து வைக்கிறேன். பிறகென்ன.. அவளுடன் நீ சேர்ந்து வாழலாம். இதெல்லாம் எனக்கு ஜுஜுபி என்றது உற்சாகமாய். விரக்தியின் உச்சத்தில் மிக சத்தமாக சிரித்துவிட்டு பாம்பு இருந்த இடத்திலேயே சம்மணம் போட்டு அமர்ந்தான் அவன். யாருமே வாழாத இந்த உலகில் ஒருத்தி வருவாள் என நம்பிய பாம்பின் மீது அவனுக்கு கேலியாக இருந்தது. 

ஆனால் பாம்பு நம்பிக்கையோடு காத்திருந்தது. முதல் நாள் பகலும் இரவும் போனது. இரண்டாம் நாள் தொடக்கத்தில் தூக்கம் கலைந்து பார்த்தான். பாம்பு வழிமேல் விழிவைத்தது காத்திருந்தது. இரவு தூங்கவில்லையா என்று கேட்டான். தூங்கிவிட்டால் அவள் வருவது எப்படி தெரியுமாம்? நீ இரு அவளை உனக்கு கண்டிப்பாக அறிமுகப்படுத்துகிறேன் என்றது மீண்டும்.

முட்டாள் பாம்பே இங்கே நான் மட்டுமே இருக்கிறேன் தயவு செய்து புரிந்துகொள் என்று ஆத்திரமாய் கத்தினான். எவ்வளவோ தன் அனுபவங்களை தனிமை துயரை சொல்லிப்பார்த்தான். பாம்பு கேட்க தயாராக இல்லை. மேலும் அவளை அது வர்ணித்துக்கொண்டே இருந்தது. அவளுடன் சேர்ந்து பழத்தை தின்ற ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டிருந்தது. இவனுக்கு கேட்பதற்கு அறுவையாக இருந்தது. அந்த ஆதாமும் அவளும் தாம்பத்ய உறவில் இருந்ததை ரகசியமாய் ஒளிந்து பார்த்ததை சொல்லி சிலாகித்துக்கொண்டிருந்தது. இவனுக்கு கேட்க கேட்க  எரிச்சலாக இருந்தது. 

ஓருகட்டத்திற்கு மேல்  தேவை இல்லாமல் நம்பிக்கொண்டிருந்து தன்னையும் நம்ப வைக்க முயற்சித்த பாம்பை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு மேல் அது விடுகிற கதையை தாங்க முடியாது என்று  இரண்டாம் நாள் இரவில் பாம்பின் கழுத்தை பிடித்து நெறிக்க ஆரம்பித்தான். சற்றும் எதிர்பார்க்காத பாம்பு திணற ஆரம்பித்து பின் அவனை சுற்றிவளைக்க ஆரம்பித்தது. இரண்டுபேரும் விடாமல் அழுத்திக்கொண்டிருந்ததில் மரணம் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது. இரு உடல்களும் தன்னுணர்வில் வாழ்வவதற்க்கான பேராசையில் ஒருவர் பிடியிலிருந்து ஒருவர் தப்பிக்க முயன்றனர். ஆனால் ஒருவரை ஒருவர் விடாமல் கழுத்தையும் நெரித்து கொண்டார்கள் இன்னமும் இறுக்கமாய்.. 

மூன்றாம் நாள் காலை அந்த மரத்தின் கீழ் பாம்பும்  அவனும் கழுத்தை நெரித்தபடியே இறந்து போயிருந்தார்கள். அவர்கள் உடல் அருகே அவள் நின்று கொண்டிருந்தாள். இறந்துபோன உடல்களை ஒருமுறை பார்த்து பெருமூச்செறிந்தாள். பாம்புக்காக தான் மறக்காமல் கொண்டு வந்திருந்த பழத்தை அதன் தலைமாட்டில் வைத்தாள். எந்த சலனமுமின்றி இரண்டடி மண்ணில் நடந்து பின் வானில் பறந்து மறைந்தாள்.

Saturday, February 23, 2019

Tolet - தமிழ் சினிமா

Tolet பார்த்து முடித்த பிறகு தோன்றிய டயலாக்கை கடைசி பாராவில் எழுதி முடிக்கிறேன். படம் நிச்சயமாக பிரமாதமான திரைப்படம். காட்சிக்கு காட்சி என்னை சுவாரஸ்யப் படுத்தியது. இன்னார் நடிப்பு வெகு அருமை என குறிப்பிட்டுச் சொல்லமுடியாமல் தினறிக் கொண்டிருக்கிறேன். நிறைய பேசவேண்டிய விஷயங்கள் திரைப்படம் முழுவதும் இருந்தது. முடிந்த அளவு சுருக்கமாக பதிக்கிறேன்.


மாநகரம் ஒரு கான்கிரீட் காடு என்று நிறைய சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை உணர்த்தும் இருக்கிறேன் ஆனால் அந்தக் காட்டில் இளைப்பாற இடம் கிடைப்பது என்பது ஒரு பெரிய சவால். பிரம்மப்ரயத்தனம் என் வார்த்தையில்.  முரளியின் "மாநகரம்" கவிதையில் "அந்த மாநகரம் இன்னும் வேகமாக இயங்குகிறது அன்பற்றதாக". என்று முடித்திருப்பார். அது எவ்வளவு அன்பற்றதாக இயங்குகிறது என்பதை மிகக் கண்கூடாக தெரிந்து கொள்ள நாம் வாடகைக்கு வீடு தேட ஆரம்பித்தால் தெரியும். எத்தனை கேள்விகள், எத்தனை அலட்சியப் பார்வைகள், எத்தனை சீண்டல்கள் அடச்சே என்ற ஒரு எண்ணம் வந்துவிடும் எவ்வளவு மனோதிடம் கொண்டவருக்கும். அந்த மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது Tolet.

பிடித்த நடிப்பு என ஒவ்வொருவருடைய நடிப்பிலும் ஒவ்வொன்றை சொல்கிறேன். இளங்கோ அமுதாவிடம் பணம் தரும் காட்சி, அமுதா அழைப்பு மணிச்சத்தத்தை கேட்டு ஓடிவரும் காட்சி. சித்து வரும் எல்லா காட்சிகளும். அதிலும் சித்து மட்டும் படத்தில் தனியாக தெரிந்தான் எனக்கு. "இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்கிற பிரபஞ்சனின் வரிகளை சித்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தான் எனக்கு.  இயக்குநரை பாராட்ட ஆயிரம் பேருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் நான் உட்பட. என்னை பொறுத்தவரை மாநகரங்களில் வசிக்கும் அத்தனை மனிதர்களும் இந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட மனிதர்களே. எல்லோரையும் பாதிக்கும் திரைப்படம் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. இந்த ஒரு பிரச்சினையைக் கொண்டு வர்க்கப்பிரிவினையை மிக எளிதாக புரியும்படி அருமையாக காட்டிவிட்டார் இயக்குநர் அதற்காகவே ஒரு ரெட் சல்யூட்.

 ஆனால் வலிந்து ஒரு திரைப்படத்தை சோகத்தை நோக்கி நகர்த்துவது என்பது திட்டமிட்ட படுகொலைக்கு சமம். என்னை பொறுத்தவரை யதார்த்த சினிமா என்கிற சொல்லாடல்கள் எல்லாம் ஜிகர்தண்டா நரேன் ஸ்டைலில் சொல்லவேண்டுமானால் "எழவை கூட்டி அவார்டு வாங்கும்" ஆசைக்கான மாயப்போர்வை. அந்த போர்வைக்குள் புகுந்து கொண்டு செய்யும் அக்கிரமங்கள் பல. யாரோ ஒரு கிராமத்து இசைக் கலைஞரின் காலில் விழுந்து வாத்தியக் கருவியை பிடுங்கிக் போய் 25000 ரூபாய்க்கு விற்று குழந்தைக்கு நாய்க்குட்டி வாங்கித்தருவது, அப்புறம் கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் கதை சொல்கிறேன் என்று எல்லோரையும் கொடுரமாக போட்டுத் தள்ளுவது, உண்மையை அழித்துவிட்டு உண்மைக் கதை எனப் போடுவது அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி எல்லாம் பெரிய தவறு இல்லை என்றாலும் ஒரு குறை இந்த படத்திலும் இருக்கிறது. இல்லை இது இப்படித்தான் க்ளைமாக்ஸாக இருந்தது என நீங்கள் சொல்லமுடியாது. ஏனெனில் எங்கோ ஓரிடத்தில் இது போன்ற tolet அலைச்சல்கள் இளைப்பாறி இருக்கும்.  அது போன்ற இளைப்பாறலை சொன்னதினாலேயே அங்காடித்தெருவும் பரியேறும் பெருமாளும் மனதில் மகாவீரச் சம்மணம் போட்டிருக்கிறது என்னுள். அந்த இளைப்பாறலை பதிவு செய்யத் தவறிவிட்டது இந்தப் படம்.

இப்போது முதல் பாராவில் நான் கமிட் செய்த அந்த மனதில் தோன்றிய வரிகளை சொல்கிறேன். The middle என்னும் ஆங்கிலத் தொடரில் வருவன அவை. "நம் யாருக்கும் சந்தோஷமான முடிவென்று ஒன்று கிடையாது. இடைப்பட்ட நாட்களில் முடிந்த அளவு எத்தனை துன்பங்களுக்கு இடையிலும் நம்மால் முடிந்த சந்தோஷங்களை கொடுப்போம்." (அதற்காக எல்லாப் படங்களிலும் மகிழ்ச்சியான முடிவு வேண்டும் என சொல்லவில்லை. ஆனால் இந்தப் படத்தில் சொல்ல வாய்ப்பிருக்கிறது. அது உண்மைக்கும் யதார்த்தத்திற்கும் அருகில் இருக்கிறது ஆனால் அது விடுபட்டு விட்டது என்கிறேன்).

#தமிழ்சினிமா

Thursday, June 14, 2018

உலகம் விரும்பும் மனிதன்

முதன்முதலில் நான் அவரை பார்த்தது என் இருபத்தி இரண்டு வயதில். முரளி ஒரு கூகிள் படத்தில் அவரை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு அடுத்தவர் கணினியை எட்டிப் பார்க்கும கெட்டப் பழக்கம் நிறையவே இருந்தது. இரண்டு மூன்று முறை கிண்டல் செய்தும் பிரயோஜனம் இல்லை. நான் திருந்தவில்லை. முரளியிடம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று பரவசமாக சொன்னேன். அதற்கு முரளி  "சே"வை முதலில் பார்க்கும் எல்லோருக்கும் தோன்றும் உணர்வு அதுதான் என்றார். நட்சத்திரம் பொறித்த தொப்பியில் ஒரு தீர்க்கமான பார்வையோடு இருந்த அந்த ஸ்கெட்ச் படம் என் மனதில் வந்துவந்து போனது.




ஆர்க்குட்டுக்கும் முகநூலுக்கும் இடையில் வலைப்பூ காலம் ஒன்றிருந்தது நம் மார்கழியை போல. நிறைய எழுத்துக்களை வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டது அப்போது தான். அப்படி பாமரனின் வலைப்பூவை தொடர்ந்து வாசிக்கும் போது "சே"வை பற்றிய சின்ன அறிமுக வரலாறு இருந்தது. அதில் எனக்கு ஞாபகம் இருக்கும் பல வரிகளில் ஒன்று "ஹில்டாவை மறுமணம் செய்து கொள்ளச்சொல். உன் கை நடுங்குகிறது. நெற்றிக்கு குறி பார்." சத்தியமாக அந்த தைரியம் எனக்கு வரவே வராது. சமீபத்தில் கூட ஆஸ்பத்திரியில் மூச்சுத் தினறத்தினற மரணம் தழுவிவிடுமோ என்ற பயம் தான் இருந்தது எனக்கு. ஒரு மனிதன் துப்பாக்கிக்கு சவால் விட்டிருக்கிறான். அதுவும் எந்த நாட்டு மக்களுக்காகவோ. அவனை நான் படித்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அந்த சிங்கப்பூர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில்  நான் வாங்கிய ஒரே தமிழ் புத்தகம் "சே - வேண்டும் விடுதலை" மருதன் எழுதியது. க்யூப வரலாறும் "சே"வின் வாழ்வை பற்றியும் அதிரடி கதை போல தெரிந்து கொண்டேன். என் லினக்ஸ் கணினிக்கு கிரான்மா என பெயர் வைத்தேன். மோட்டார் சைக்கிள் டெய்ரீஸ் படத்தை பார்த்தேன். எர்னஸ்டோ,  காதல், பயணம், கம்யூனிஸ்ட், துப்பாக்கி விபத்து, பிடலுடனான தர்க்கம், ஆஸ்த்துமா, தொழுநோயாளிகளுக்கான மருத்துவச்சேவை, அந்த டாக்டர் நண்பர், ஹில்டா, சின்சினா, அலெய்டா என ஒவ்வொரு துளியாக "சே"வை நினைவில் சேகரித்தேன். அவர் பிடலுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து வார்த்தைகளை உருவி போட்டு பல கடிதமும் கட்டுரையும் ஊக்கம் தரும் பேச்சுக்களையும் செய்திருக்கிறேன். நீங்கள் முறைக்கிறீர்கள் ஆனால் நம் "சே" அதற்க்காகவெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டார்.

"சே" இந்த காலத்திற்கு மட்டும் அல்ல எதிர்காலத்திற்கும் தேவையான அமரன். இந்த உலகில் உள்ள அத்தனை மத மகான்களும் மேற்க்கொண்ட பயணத்திலிருந்து "சே"வின் பயணம் வித்தியாசமானது. எல்லோரும் கடவுளை தேடி புறப்பட்டனர். புத்தன் கூட துன்பத்தின் காரணமறிய பயணத்தை துவக்கினான். தன் மருத்துவமும் நோயுற்ற வாழ்வும் தன் கண்முன்னே பயமுறுத்திக்கொண்டிருக்க, எங்கேயோ அழுது கொண்டிருக்கும் மனிதத்தின் விழிநீர் துடைக்க புறப்பட்டவர் "சே". ஒரு சின்ன அமௌன்ட் வாழ்வில் தொடர்ந்து கிடைத்தால் போதும் கவலையின்றி வாழலாம் என சுயநலமாக யோசிக்கிறேன் அவருக்கு ஐம்பது வருடங்கள் கழித்துப் பிறந்த நான். ஒரு நாட்டின் உயர் பதவியை விட இன்னொரு நாட்டின் விடுதலைக்கு துணை நிற்பதே தன் கடமை என வாழ்ந்து முடித்திருக்கிறார் அவர். க்யூபாவை விட்டு வெளியேறியதை பற்றி  மாமாவுடன் விவாதித்தபோது மாமா சொன்னார் புரட்சியை அப்படி எல்லாம் ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால் மானுடவிடுதலையின் மீதான தீவிரமே அவரை அப்படி செய்ய தூண்டி இருக்கிறது என்றார்.

"சே"வை பற்றி கணக்கிலடங்காமல் எழுதவும் பேசவும் பரவசப்படவும் முடியும் என்னால். ஆனால் "சே"வை போல என் சொற்களுக்கு சக்தி அதிகம் இல்லை. ஆகவே நிறைவு செய்யும் கட்டாயத்தோடு மேலும் ஒரு வரி. சென்ற வருட நீயா நானா நிகழ்வில் விருந்தினராக பங்கெடுத்த கரு.பழநியப்பன் "மனிதன் உலகத்தின் குடிமகன் ஆவதுதான் முக்கியம்" என்றார். என் மனதில் தோன்றியது, மானுட விடுதலையின் மீது தீராக்காதல் கொண்ட ஒரு மனிதனே அவ்வாறாக முடியும் என்றெண்ணினேன். மனதில் இலட்சித்தி எத்தனையாவது முறையோ "சே" வந்து போனார். ஆம் சே நீங்கள் தான் citizen of the world.

Friday, May 18, 2018

ஒரு ஆலமரத்தின் கதை

ஆனந்த்பாபு சேர்ந்தான் என்றுதான் பெஸ்ட் ட்யூஷன் சென்ட்டரில் (அதுதான் பெயர் என்று நினைக்கிறேன்) சேர்ந்தேன். பத்தாம் வகுப்பு ட்யூஷன் சென்ட்டர்கள் பெரும்பாலும் 3 திரைப்படத்தில் படவா கோபியின் வகுப்பறை போன்றே இருக்கும். அந்த நேரம் அந்த ட்யூஷன் வாத்தியாருக்கு பிரச்சினை போல. ஒரு வாரமாகியும் பாடத்தை ஆரம்பிக்கவில்லை. ஏனைய நண்பர்கள் எல்லாம் தங்கவேல் சார் ட்யூஷனில் சேர்ந்துவிட்டனர். அவரிடம் ஏற்கனவே போய் கேட்டதற்கு ஆட்கள் அதிகம் என்று சொல்லி விரட்டிவிட்டார்.



ஆனந்த்பாபு எப்படியோ சேர்ந்து விட்டான்.  அப்புறம் G.ராஜேஷோடு அவர் வீட்டுக்கு போய் அவரை குடையாய் குடைந்து சேர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்த அவர் எரிச்சலாகி இதோ பாரு உட்கார்ந்து படிக்க இடமில்லை. நின்னுக்கிறையா என்றார். G.ராஜேஷ் சரி சொல்லு எனச் சொல்ல நானும் தலையாட்ட சரி போ என்றார். நான் அவர் ட்யூஷனில் போய் உட்கார்ந்தேன். படிப்பில் ஆர்வம் இருந்ததால் படிக்கிற பையன்களெல்லாம் சேர்ந்து கொஞ்சம் இடம் கொடுத்தார்கள்.
அன்றைக்கு இரண்டாவதாக வகுப்பெடுக்க வந்த தங்கவேல் சார் என் அவஸ்தையை பார்த்து இதுக்குத் தான் சொன்னேன் வேண்டாமென்று என்றார். நான் இளித்தபடியே பரவாயில்லை சார் என்றேன்.

தங்கவேல் சார் ட்யூஷனில் சுந்தரேசன் சார் கணக்கும் இரத்தினசபாபதி சார் அறிவியல் பாடமும் எடுத்தார்கள். இதில் இரத்தினசபாபதி சார் எடுக்கும் அறிவியலை நான் காது கொடுத்துக் கேட்டதில்லை. எனக்கு பள்ளியில் சம்பத் சார் நடத்துவதே போதுமானதாக இருந்தது. ஆனால் சுந்தரேசன் சாரிடம் அப்படி அல்ல. அவர் நடத்துவதை கேட்பதே ஆனந்தமாக இருந்தது. Algebra trigonometry எல்லாம் அவர் கேட்க நான் விடை சொல்ல அவர் பாராட்டுவதெல்லாம் தெவிட்டாத நினைவுகள். அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார் "என்ன கல்யாணராமா திருமணஞ்சேரி போனியா". நான் உடனே "இல்ல சார்" என வழிவேன். பிரம்பை செல்லமாக தலையில் தட்டிவிட்டுப் போவார்.

தங்கவேல் சாரின் கவனத்தை ஈர்க்க நான் கொஞ்சம் படாத பாடுபட வேண்டியிருந்தது. என்னுடைய கெட்ட நேரம் நிறைய பல்புகள் வாங்கினேன். குறிப்பாக இரத்தினசபாபதிசார் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் நானும் அருண் எனும் நண்பனும் விரல் சண்டை போட்டுக் கொண்டிருக்க ஜன்னல் வழியே பார்த்துவிட்டு அவர் வகுப்பின் போது எங்கள் இருவரையும் எழுப்பினார். "நீங்க ரெண்டு பேரும் விரல நாமம்  மாதிரி வெச்சுகிட்டு விளையாட்றீங்க. இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் நாமம் போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான். சீ உக்காரு" என்றார். சரி என்றைக்காவது இவரிடம் பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்திக் கொண்டேன்.

தங்கவேல் சார் ட்யூஷனில் நிறைய தேர்வுகள் நடத்துவார் எல்லா பாடங்களுக்கும். தேர்வு எழுதுபவர்களை குழுவாக பிரிப்பார். நன்றாக படிக்கும் மாணவர்கள், சுமார் மாணவர்கள், ரொம்ப சுமார் மாணவர்கள் எல்லோரையும் கலந்து குழுவாக பிரிப்பார். குழு மதிப்பெண்கள் அடிப்படையில் முதலிடம் பெற்ற குழுவுக்கும் இரண்டாமிடம் பெற்ற குழுவுக்கும் பரிசுகள் தருவார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் ஒரு யுக்தியாக கையாள்வார். இன்றும் நான் வேலைக்கு நேர்முகத்தேர்வு நடத்தி என் டீமை இப்படித்தான் அமைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் மூலக்காரணம் தங்கவேல் சார் தான். அதேபோல் என் அலுவலக நண்பர்களுக்கு நான் பரிசுகள் வாங்கித் தரும் முறையிலும் தங்கவேல்சாரையே பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.

i.e என்ற வார்த்தைக்கு பொருள் சொன்னது, போர்-war வார்-pour என்று வார்த்தை ஜாலம் செய்தது, உலகப்போர்களை அதிரடிக்கதைகளாக சொல்லிக்கொடுத்தது என தங்கவேல் சார் பற்றிய கதைகள் நிறைய சொல்லலாம். நான் தொழில்நுட்ப கல்வி பயிலும்போதே பணி ஓய்வுபெற்று ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். எட்டு வருடங்கள் கழித்து மதுவின் கல்யாணத்திற்காக சீர்காழி சென்றபோது சாரை சந்தித்தேன். அவருக்கு என்னை பற்றி எந்த நினைவுமில்லை. என்ன கதை சொல்லியும் அவருக்கு நினைவூட்ட முடியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக வரவேற்றார். ஒரு வயதான மனிதர் தன் இளைய நண்பருடன் உரையாடுவதுபோல பேசினார்.

ஊர் திரும்புவதற்கு முன் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு சென்னை திரும்பினேன். என்னோடு கைக்குலுக்கினார். உள்ளே இருந்த கல்யாண ராமன் குதுகலித்தான். வரும்போது நினைத்துக் கொண்டேன் அவர் சொல்லிக் கொடுத்த உலகப்போர் வரலாறும் காரணமாக இருக்கலாம் என் சினிமா ஆர்வத்திற்கு. சார் என்னை மறந்து போவது இயற்கை தான். பறவைகளுக்குத்தான் வசித்த ஆலமரம் நினைவில் இருக்க வேண்டும்.  எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட என் நினைவில் S.m.h.s School groundல் மாலை வேளையில் கால்பந்தை துரத்திக் கொண்டு முதல் மனிதராக வரிவரியான டிஷர்ட்டில் தங்கவேல் சார் கடந்து போகிறார் மின்னல் என.

Wednesday, May 16, 2018

இது வேற யானை

ஏற்கெனவே பாலம் இதழில் மனசு அவர்களின் யானை சிறுகதை வந்துவிட்டதாலும், லக்ஷ்மி சரவணக்குமாரின் யானை என்ற சிறுகதை தொகுப்பு இருப்பதாலும் இந்த பதிவின் தலைப்பை இப்படி வைக்க வேண்டியதாயிற்று. மேலே சொன்னதில் மனசு அவர்களின் யானை கதையை படித்திருக்கிறேன். அது ஒரு வியட்நாம் தேசத்துக் கதை.



நான் சொல்ல வந்தது நான் பார்த்த யானையை பற்றி. கோயில் யானை. ஒவ்வொரு முறை புதுவைக்கு செல்லும் போதும் மறவாமல் மணக்குளவிநாயகர் கோயிலுக்கு செல்வேன். அங்கிருக்கும் யானை குள்ளமாக இருக்கும். நான்கு கால்களிலும் வெள்ளியில் கொலுசு போட்டிருக்கும். ஆண் யானையா இல்லையா என்பதை படம் பார்த்து முடிவு செய்து கொள்ளவும். கால் ஒன்றில் இரும்பு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அதன் கீழ் அமர்ந்திருக்கும் பாகன் தன் கையில் வைத்திருக்கும் அங்குசத்தை வைத்து தட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலும் கருநீலச்சட்டை போட்டே அவரை பார்த்த ஞாபகம். அந்த யானையையும் அதன் பாகனையும் நினைக்கும் போதெல்லாம் என்னை கவராத ஜெயமோகனின் எழுத்துக்களில் என்னைக் கவர்ந்த வரிகள் கூடவே வரும் அது "கொலைவேழத்தின் பெருங்கருணையை அறிந்தவன் ஒருவன் மட்டுமே. அதன் கீழ் வாழும் எளிய பாகன் தான்"

ஆனால் எங்கள் ஊரில் இருந்த பெரியகோயில் யானையின் பாகன் சட்டை அணிந்து பார்த்ததில்லை. யானை மேய்ப்பவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அதேபோல அந்த யானையின் கீழ் பாகன் உறங்கியும் பார்த்ததில்லை. ஒரேயொருமுறை மட்டும் சாயுங்காலத்தில் அந்த பாகன் ரொம்ப வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவர் கூட வரும் பையன் யானையை மிரட்டி கூப்பிட்டுக் கொண்டிருந்தான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதே மது காதில் வந்து கிசுகிசுப்பாய் "அந்தாள் தண்ணியடிச்சிருக்கான்" என்றான்.
அந்த பெண்யானை வாரம் ஒருமுறை குளிப்பதற்கு எங்கள் தெருவில் புகுந்து தான் திருக்கோலக்கா கோவில் குளத்திற்கு செல்லும். இல்லை வாய்க்காலுக்கு போகுமாயிருக்கும். ஒருமுறை வாய்க்காலில் குளித்ததை பார்த்திருக்கிறேன். குளித்துவிட்டு திரும்ப எங்கள் தெருவழியாகவே பட்டை எல்லாம் அடித்துக் கொண்டு ஜம்மென்று போகும். கடைவீதி வழியாக பலரை ஆசிர்வதித்து வாழைப்பழம் தேங்காய் காசுகள் என கல்லா கட்டிக்கொண்டு போகும்.

பெரியகோயில் யானை இறந்து போனதை அப்பாதான் வந்து சொன்னார். அன்று தான் அதன் பெயர் ஜெயந்தி என்றே தெரியும் எனக்கு. அதன் இறப்பு செய்தியை செய்தித்தாளிலும் போட்டார்கள். அன்று மாலை நானும் மதுவும் கிளம்பினோம். நடந்து தான் போனோம். கோயில் உள்ளே அதன் கொட்டடிக்கு சென்றோம். எத்தனையோ இரவுகள் அந்த கொட்டடியின் இருட்டை பார்த்து பயந்திருக்கிறேன். தனியே பிராகாரத்தை சுற்றும்போது சிலசமயம் யானை செய்யும் சலசலப்புக்கு அஞ்சி பயந்து ஓடியிருக்கிறேன். இன்று அந்த கொட்டடிக்கு வெளியிலிருந்து நல்ல நூறுவாட்ஸ் வெளிச்சத்திற்கு நடுவே யானை கிடத்தப்பட்டிருப்பதை பார்த்தேன். நான் பார்த்த யானை அல்ல அது. உடல் வற்றி தலை சிறிதாகி ஏதோ ஒரு பொருளாகக் கிடந்தது. மது "நீ வருத்தப்பட ஆரம்பிச்சா உன்னை சமாதான படுத்த முடியாது" என என்னை உள்ளே செல்லவிடாமல் தடுத்து விட்டான். பிறகு வெளியேவந்து "பாவம்டா அந்த யானை. ஆனா அந்த பாகன் பாரு இனிமே என் பொழப்புக்கு என்ன செய்வேன் ஏதாவது காசு போட்டு போங்கன்ட்றான்" என்றான் கோபமாக. ஒரு கட்டம்வரைதான் இறந்தவர்களுக்காக அழமுடியும் என்றோ பாகன் வறுமையையோ  நாங்கள் புரிந்திருக்க வாய்ப்புமில்லை வயதுமில்லை. மறுநாள் அப்பா அதன் ஈமச்சடங்கிற்கு சென்று வந்தார். எரியூட்டினார்கள் என்று நினைவு.

நான் இதுகுறித்து எழுதியதை பற்றி சரவணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன் இளமைக்காலத்திய நினைவுகளையும் தான் படித்த யானை கதைகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார். குறிப்பாக யானை சவாரி செய்ததை சொன்னார். நான் என் வாழ்வில் யானை சவாரி செய்ததே இல்லை. யானை அருகே சென்று ஒரிருமுறை ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதுவும் வைத்தீஸ்வரன் கோயில் யானையிடம் மட்டும். யானை கதைகளை நிரம்ப படித்திருந்தாலும்  யானையை பற்றிய தகவல்கள் அதிகமாக தெரிந்திருந்தாலும்  ஒருமுறை யானை பற்றி மாமா சொன்னதை இங்கே சொல்லி முடிப்பது சரியாக இருக்கும். "யானை பாத்திருக்கியா? அதுக்கு மதம் பிடிச்சா காடே தாங்காது. தொம்சம் பண்ணிரும். சிங்கம்புலி எல்லாம் காணாப்போயிரும். ஆனா அவ்ளோ பெரிய யானையை மனுசன் தான் வயித்துக்காக கடைக்கடையா பிச்சை எடுக்கவுட்ருவான். நம்ம எல்லாருமே ஒருவகையில அந்த யானை தான்".

Monday, May 14, 2018

ஏனென்றால் என் பிறந்தநாள்

துன்பம் நிறைந்த வாழ்வில் மகிழ்ச்சி எண்ணிப்பார்க்கும் அளவே இருக்கும்

என்று தால்ஸ்தாய் சொல்லவில்லை. அவர் அப்படி சொன்னதாக நான் எடுத்துக் கொண்டேன். அப்படியான சந்தோஷமான தருணங்களில் ஒன்று என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாதிரி மகிழ்ச்சி இருக்கும். ஒருமுறை சந்தனக்கலரில் சட்டை போட்டுக்கொண்டு வீடுவீடாக எவர்சில்வர் டப்பாவில் சாக்லேட் கொடுத்துவிட்டு வந்தேன். ஒருமுறை மது என்னை அழைத்துப் போய் சமோசா வாங்கிக் கொடுத்தான். இரண்டு பிறந்தநாட்களுக்கு அப்பா வாட்ச் வாங்கி தந்தார். இரண்டு வாடச்சுகளுக்கும் நடுவே எட்டு வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு பல வருடங்களுக்கு பிறகு நண்பர் பிரேம் வாட்ச் வாங்கி கொடுத்திருக்கிறார்.


பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் பழக்கம் கிடையாது. ஆனால் ஆசை இருக்கிறது. என் ஆறாவது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய ஞாபகம் இருக்கிறது. அன்று அக்காவின் தோழிகள் நிறையபேர் வந்திருந்தார்கள். அதில் இப்போது ஞாபகம் இருப்பது கவிதாக்காவும் அவர் கண்ணாடியும் மட்டும்தான். கண்ணாடி போட்ட பெண்களின் மீது என்னுள் பெருகும் அன்பிற்கும் காதலுக்கும் அது காரணமாக இருக்கலாம். பிறகு கேக் வெட்டியது என்னுடைய இருபத்தி இரண்டாவது பிறந்தநாளில். பிரகாஷ் சந்தோஷ் ராம் என என் அலுவலக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள் அது. நான் அதிகமாக பரிசுகள் பெற்ற பிறந்த நாளும் அதுதான். இரண்டு பேண்ட் இரண்டு சட்டை. காதலியிடமிருந்து ஒரு சட்டை(இப்போது முன்னாள்), ஒரு பிள்ளையார் பொம்மை, பணி நிரந்தர ஆணை அப்புறம் ஒரு மிக்கிமௌஸ் கேக். அதில் எழுதிய வாசகங்கள் இப்போதும் புன்னகை வரவழைப்பது. Happy birthday Mr. Romeo.
சத்தியமாக அதைத்தான் எழுதி இருந்தார்கள்.

அதேபோல பிறந்த நாளில் எதையாவது வித்தியாசமாக செய்து பார்க்கும் ஆசை வரும். சிலசமயம் அது சரியாக வரும். சிலநேரங்களில் சொதப்பும். ஒருமுறை பிறந்த நாள் அன்று வேலைக்கு கிளம்பிவிட்டேன். அம்மா எவ்வளவு காசு வேண்டும் என்று கேட்டார். யாருக்கும் செலவழிக்க தோன்றவில்லை. நூறு ரூபாய் கொடு போதும் என்றேன். ஒரு மாதிரி முறைத்தபடியே கொடுத்தார். அலுவலகம் வருவதற்குள் எண்ணம் மாறிவிட்டது. சரி எதையாவது வாங்கலாம் என முடிவுசெய்து என்ன வாங்குவது நூறு ரூபாய்க்கு என்று யோசித்தபடியே கடையில் இருந்த ஒரு பெட்டியை வாங்கினேன் நூற்றியிருபது ரூபாய்க்கு.  என் பையில் குப்பையுடன் குப்பையாய் பணத்தை திணித்து வைத்திருப்பேன். எப்போது துழாவினாலும் ஐம்பது தேறும். எனவே வாங்கிப்போய் பெட்டியில் இருந்ததை எல்லோருக்கும் கொடுத்தேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட குழந்தை பருவத்திற்கே போய்விட்டார்கள். எனக்கு ஒருவாரம் முன்பு பிறந்த நாள் கொண்டாடிய சிவா என்னிடம் ரகசியமாக கேட்டார். எவ்வளவு செலவு பண்ணீங்க என்றார். சொன்னேன். எண்ணுறு ரூபாய்க்கு A2B ஸ்வீட் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். ஒரு பய என்னை ஞாபகத்துல வெச்சுக்கமாட்டான். நீங்க பெரிய ஆளுங்க என்றபடி alpenliebe lollipopஐ சப்பியபடி சொல்லிவிட்டு சென்றார். சிரித்துக் கொண்டேன்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனக்கு எப்போதுமே வரமான நாட்கள் தான். ஒவ்வொரு வருடமும் நம்மை நினைவில் வைத்து வாழ்த்தும் உள்ளங்களே நம் ஆயுள் நீட்டிப்பிற்கும் நாம் வாழும் வாழ்வின் பக்கங்களை நிரப்புவதற்கும் காரணமானவர்கள். இதை தலைகீழாகவும் சொல்லலாம். தோழமை தாய்மார்களாக தோழமை தந்தையர்களாக தோழமை சகோதரசகோதரிகளாக உறவுகளில் நண்பர்களாக முகநூல் நட்புகளாக என வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் மட்டுமே என் இரண்டு பிறந்தநாட்களுக்கு நடுவில் என்னையும் என் அன்பையும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன்கள். ரஜினிகாந்தின் மனிதன் திரைப்படத்தில் ஶ்ரீவித்யா உதட்டசைக்கும் பாடல் ஒன்றில் வரும் இந்த வரிகளை அந்த அன்புள்ளங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். "உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க"