மொத்த உலகமும் ஒன்றுமில்லாமல் போய் அவன் ஒற்றை மனிதனாக திரிய ஆரம்பித்து பல வருடங்கள் ஆயிற்று. யாருமில்லாத முதல் சில காலம் அவனுக்கு நரகமாக இருந்தது. தனிமையை விரட்ட தன்னை தேடி யாரேனும் வருவார்கள் என நம்பிக்கொண்டே இருந்தான் அவன். யாரும் வராதது அவனுக்கு பயமாக இருந்தது. பயத்தோடு அவன் வாழ விரும்பவில்லை. தற்கொலை கோழைத்தனமாகவும் தோன்றியது. சிலநேரங்களில் மிகவும் தைரியமான செயலாகவும் தோன்றியது. இரண்டுமே அவன் அந்த எண்ணத்தை கைவிடுவதற்கு வழி செய்தது. அதுவரை அதிபுத்திசாலித்தனமாக நினைத்து கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்டுக்கொண்டிருண்டிருந்த அவன் இப்போது தன்னை யாரேனும் கொல்வதற்க்கேனும் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருந்தான்.
யாரும் வராத காரணத்தில் சலித்துபோய் காத்திருப்பது வீண் என தனியே தன் பயணத்தை தொடங்கினான் ஒருநாள். அந்த பயணம் ஆரம்பித்த அந்த நாள் அவனுக்கு ஏதோ திரைப்படத்தின் முதல் காட்சி ஞாபகம் வந்தது. அதைப்பற்றி தனக்குத்தானே சிலவார்த்தைகள் பேசிக்கொண்டான். விவாதித்து தன்னை தானே தோற்கடித்துக்கொண்டான். பயணம் ஆரம்பித்து முதலில் வேகமாக ஓடினான். எவ்வளவு சீக்கிரம் அந்த பாழடைந்த நகரத்தை தாண்டவேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் தாண்டிட முயற்சித்தான். ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் களைத்துப்போய் நடந்தான். பிறகு நடப்பதையும் கிடைத்த இடங்களில் இளைப்பாறுவதையும் தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. முடிவில்லாமல் நீண்ட அந்த நகரம் ஒருவழியாக முடிந்தது. ஆனால் அதோடு அந்த பயணமும் முடிந்து போனது. ஏனென்றால் நகரம் தாண்டிய பிறகு வெறும் பாலைவனமே இருந்தது.
நம்பிக்கையற்று விரக்தியோடு நகரத்திற்கே திரும்பினான். தினம் அவன் அந்த பாலைவனத்தின் எல்லையை தொட்டு வருவதை வழக்கமாக வைத்துக்கொண்டு பொழுது போக்கினான். துரதிர்ஷ்டவசமாக அவன் வாழ்வில் அவனால் அதுமட்டுமே செய்ய முடிந்தது. நகரின் ஓரிடத்தில் நூறுவருடத்திற்கு தேவையானவைகள் சேமிக்கப்பட்டு கெடாமல் இருந்ததில் அவன் வாழ்க்கை பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தது. அப்படியே காலம் ஓடியது..
ஒருநாள் அந்த பாலைவனத்தில் கொஞ்ச தூரத்தில் ஏதோ கானல் காட்சியாக தெரிந்தது போல் இருந்தது. ஒரு கீற்று நம்பிக்கை அவனை தொற்றிக்கொண்டது. சரேலென்று அதை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கிட்டே செல்ல செல்ல அங்கே ஓர் ஒற்றை மரம் மட்டும் இருந்தது. இத்தனை நாள் இல்லாமல் இன்றொரு மரம் இங்கே இருக்கிறதே என ஆச்சர்யமாய் இருந்தது அவனுக்கு. மரத்தை சுற்றி நடந்தான். மரம் மிகப்பெரியதாக இருந்தது. பல கொடிகள் தொங்கிக்கொண்டிருந்தது. ஒரு கொடி மட்டும் சற்று மஞ்சளும் பழுப்புமாய் இருந்தது. சற்று தடிமன் கம்மியாக இருந்தது. அதை தொட்டு பார்க்க கைய நீட்டியபோது கொடி நெளிந்து அவன் முன்னே அமைதியாய் எழுந்தது அந்த பாம்பு.
பாம்பு அவனை நேரே பார்த்து உன் பெயரென்ன என்றது? கூப்பிட யாருமில்லாத அவன் தன் பெயரை மறக்க மிகவும் விரும்பி மறந்தே போனதால் ஞாபகம் இல்லை அவனுக்கு. பேசாமல் இருந்ததால் சொற்களும் கூட கொஞ்சம் மறக்க தொடங்கியது. ஞாபகம் இருந்தாலும் தர்க்கம் செய்ய அவன் ஆறாம் அறிவு வேலை செய்யவில்லை. பாம்பு அவனை மறுபடியும் கேட்டது உன் பெயரென்ன? அவன் தெரியாது என்றான். தெரியாது என்பதெல்லாம் ஒரு பெயரா? என்றது பாம்பு. எப்போதோ இதுபோல் தனக்கு தெரிந்தவள் சொல்லி நகைத்து தான் எரிச்ச்சலுற்றது ஞாபகம் வந்தது. அன்றைக்கு பொய்யாய் சிரித்தோம் என்று நினைவு வந்தது. இப்போது பாம்பின் முன் சிரிக்கலாமா என்று யோசித்தான்.
அதற்குள் பாம்பு எதையோ நினைத்தது போல சிரித்துக்கொண்டது. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு மனிதனை பார்த்தேன் அவனும் தெரியாது என்றுதான் சொன்னான். அன்று நான் அவனுக்கு ஆதம் என பெயர் வைத்தேன் என்றது. இப்போது நானே உனக்கும் ஒரு பெயர் வைக்கிறேன். உன் பெயர் ஆதம் என்றது. மறுபடியும் அதே பெயரா என்று முகம் சுளித்தான்.. இருக்கட்டும் வைத்துக்கொள் என்றது பெருமிதமாக.
பின் இரண்டு கொடிக்கு குறுக்காக படுத்து ஊஞ்சலாடியபடியே நான் இன்றைக்கு ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறேன். ஏன் யாரையும் காணவில்லை ம்ம்ம்..? அன்றும் அப்படித்தான் இருந்தது அப்புறம் ஒரு பெண் வந்தாள் அவளோடு பேசி பொழுதுபோக்கிவிட்டுத்தான் சென்றேன். இன்றைக்கும் அவள் வருவாளா என்று பார்ப்போமா என்று கண்ணடித்தது. அவன் எந்த சலனமுமின்றி இன்றைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று சொல்ல பாம்பு ஏளனமாக பார்த்தது. எப்படி இவ்வளவு திடமாக சொல்கிறாய். நான் நம்பமாட்டேன். மேலும் நான் என் விடுமுறை முழுவதும் எப்படி பொழுதை கழிப்பது அதுவும் உன் மூஞ்சியை பார்த்துக்கொண்டு? ம்ம்ம்?
அவன் சற்று கோபமாய் இதோ பார் நீ ஒன்றும் என் மூஞ்சியை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டாம். எனக்கே சலித்துவிட்டது இதற்கு மேல் நான் ஒரு கனத்தையும் கழிக்க விரும்பவில்லை. என்னை கொன்றுவிடு என்றான். அப்படி சொல்லாதே என்று அது இடைமறிக்க இவன் இன்னும் ஆவேசமாக யாருமில்லாத உலகம் இது இங்குதான் தனிமையில் சாக காத்திருக்கிறேன் கொன்றுவிடு தயவு செய்து என்னை கொன்றுவிடு என்று மண்டியிட்டான். பாம்பு இப்போது அவனுக்காக பச்சாதாபப்பட்டது. உனக்கு போய் ஆதம் என்று பெயர் வைத்தேனே என மனதில் நினைத்துக்கொண்டது. பின்பு இரு நிச்சயம் ஒருத்தி வருவாள் அவளை கண்டிப்பாக பார்த்து போவதற்காகத்தான் வந்திருக்கிறேன். உன்னையும் அறிமுகம் செய்து வைக்கிறேன். பிறகென்ன.. அவளுடன் நீ சேர்ந்து வாழலாம். இதெல்லாம் எனக்கு ஜுஜுபி என்றது உற்சாகமாய். விரக்தியின் உச்சத்தில் மிக சத்தமாக சிரித்துவிட்டு பாம்பு இருந்த இடத்திலேயே சம்மணம் போட்டு அமர்ந்தான் அவன். யாருமே வாழாத இந்த உலகில் ஒருத்தி வருவாள் என நம்பிய பாம்பின் மீது அவனுக்கு கேலியாக இருந்தது.
ஆனால் பாம்பு நம்பிக்கையோடு காத்திருந்தது. முதல் நாள் பகலும் இரவும் போனது. இரண்டாம் நாள் தொடக்கத்தில் தூக்கம் கலைந்து பார்த்தான். பாம்பு வழிமேல் விழிவைத்தது காத்திருந்தது. இரவு தூங்கவில்லையா என்று கேட்டான். தூங்கிவிட்டால் அவள் வருவது எப்படி தெரியுமாம்? நீ இரு அவளை உனக்கு கண்டிப்பாக அறிமுகப்படுத்துகிறேன் என்றது மீண்டும்.
முட்டாள் பாம்பே இங்கே நான் மட்டுமே இருக்கிறேன் தயவு செய்து புரிந்துகொள் என்று ஆத்திரமாய் கத்தினான். எவ்வளவோ தன் அனுபவங்களை தனிமை துயரை சொல்லிப்பார்த்தான். பாம்பு கேட்க தயாராக இல்லை. மேலும் அவளை அது வர்ணித்துக்கொண்டே இருந்தது. அவளுடன் சேர்ந்து பழத்தை தின்ற ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டிருந்தது. இவனுக்கு கேட்பதற்கு அறுவையாக இருந்தது. அந்த ஆதாமும் அவளும் தாம்பத்ய உறவில் இருந்ததை ரகசியமாய் ஒளிந்து பார்த்ததை சொல்லி சிலாகித்துக்கொண்டிருந்தது. இவனுக்கு கேட்க கேட்க எரிச்சலாக இருந்தது.
ஓருகட்டத்திற்கு மேல் தேவை இல்லாமல் நம்பிக்கொண்டிருந்து தன்னையும் நம்ப வைக்க முயற்சித்த பாம்பை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு மேல் அது விடுகிற கதையை தாங்க முடியாது என்று இரண்டாம் நாள் இரவில் பாம்பின் கழுத்தை பிடித்து நெறிக்க ஆரம்பித்தான். சற்றும் எதிர்பார்க்காத பாம்பு திணற ஆரம்பித்து பின் அவனை சுற்றிவளைக்க ஆரம்பித்தது. இரண்டுபேரும் விடாமல் அழுத்திக்கொண்டிருந்ததில் மரணம் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தது. இரு உடல்களும் தன்னுணர்வில் வாழ்வவதற்க்கான பேராசையில் ஒருவர் பிடியிலிருந்து ஒருவர் தப்பிக்க முயன்றனர். ஆனால் ஒருவரை ஒருவர் விடாமல் கழுத்தையும் நெரித்து கொண்டார்கள் இன்னமும் இறுக்கமாய்..
மூன்றாம் நாள் காலை அந்த மரத்தின் கீழ் பாம்பும் அவனும் கழுத்தை நெரித்தபடியே இறந்து போயிருந்தார்கள். அவர்கள் உடல் அருகே அவள் நின்று கொண்டிருந்தாள். இறந்துபோன உடல்களை ஒருமுறை பார்த்து பெருமூச்செறிந்தாள். பாம்புக்காக தான் மறக்காமல் கொண்டு வந்திருந்த பழத்தை அதன் தலைமாட்டில் வைத்தாள். எந்த சலனமுமின்றி இரண்டடி மண்ணில் நடந்து பின் வானில் பறந்து மறைந்தாள்.