Friday, May 18, 2018

ஒரு ஆலமரத்தின் கதை

ஆனந்த்பாபு சேர்ந்தான் என்றுதான் பெஸ்ட் ட்யூஷன் சென்ட்டரில் (அதுதான் பெயர் என்று நினைக்கிறேன்) சேர்ந்தேன். பத்தாம் வகுப்பு ட்யூஷன் சென்ட்டர்கள் பெரும்பாலும் 3 திரைப்படத்தில் படவா கோபியின் வகுப்பறை போன்றே இருக்கும். அந்த நேரம் அந்த ட்யூஷன் வாத்தியாருக்கு பிரச்சினை போல. ஒரு வாரமாகியும் பாடத்தை ஆரம்பிக்கவில்லை. ஏனைய நண்பர்கள் எல்லாம் தங்கவேல் சார் ட்யூஷனில் சேர்ந்துவிட்டனர். அவரிடம் ஏற்கனவே போய் கேட்டதற்கு ஆட்கள் அதிகம் என்று சொல்லி விரட்டிவிட்டார்.



ஆனந்த்பாபு எப்படியோ சேர்ந்து விட்டான்.  அப்புறம் G.ராஜேஷோடு அவர் வீட்டுக்கு போய் அவரை குடையாய் குடைந்து சேர்த்துக் கொள்ள கட்டாயப்படுத்த அவர் எரிச்சலாகி இதோ பாரு உட்கார்ந்து படிக்க இடமில்லை. நின்னுக்கிறையா என்றார். G.ராஜேஷ் சரி சொல்லு எனச் சொல்ல நானும் தலையாட்ட சரி போ என்றார். நான் அவர் ட்யூஷனில் போய் உட்கார்ந்தேன். படிப்பில் ஆர்வம் இருந்ததால் படிக்கிற பையன்களெல்லாம் சேர்ந்து கொஞ்சம் இடம் கொடுத்தார்கள்.
அன்றைக்கு இரண்டாவதாக வகுப்பெடுக்க வந்த தங்கவேல் சார் என் அவஸ்தையை பார்த்து இதுக்குத் தான் சொன்னேன் வேண்டாமென்று என்றார். நான் இளித்தபடியே பரவாயில்லை சார் என்றேன்.

தங்கவேல் சார் ட்யூஷனில் சுந்தரேசன் சார் கணக்கும் இரத்தினசபாபதி சார் அறிவியல் பாடமும் எடுத்தார்கள். இதில் இரத்தினசபாபதி சார் எடுக்கும் அறிவியலை நான் காது கொடுத்துக் கேட்டதில்லை. எனக்கு பள்ளியில் சம்பத் சார் நடத்துவதே போதுமானதாக இருந்தது. ஆனால் சுந்தரேசன் சாரிடம் அப்படி அல்ல. அவர் நடத்துவதை கேட்பதே ஆனந்தமாக இருந்தது. Algebra trigonometry எல்லாம் அவர் கேட்க நான் விடை சொல்ல அவர் பாராட்டுவதெல்லாம் தெவிட்டாத நினைவுகள். அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார் "என்ன கல்யாணராமா திருமணஞ்சேரி போனியா". நான் உடனே "இல்ல சார்" என வழிவேன். பிரம்பை செல்லமாக தலையில் தட்டிவிட்டுப் போவார்.

தங்கவேல் சாரின் கவனத்தை ஈர்க்க நான் கொஞ்சம் படாத பாடுபட வேண்டியிருந்தது. என்னுடைய கெட்ட நேரம் நிறைய பல்புகள் வாங்கினேன். குறிப்பாக இரத்தினசபாபதிசார் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் நானும் அருண் எனும் நண்பனும் விரல் சண்டை போட்டுக் கொண்டிருக்க ஜன்னல் வழியே பார்த்துவிட்டு அவர் வகுப்பின் போது எங்கள் இருவரையும் எழுப்பினார். "நீங்க ரெண்டு பேரும் விரல நாமம்  மாதிரி வெச்சுகிட்டு விளையாட்றீங்க. இப்படியே ஒருத்தருக்கு ஒருத்தர் நாமம் போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான். சீ உக்காரு" என்றார். சரி என்றைக்காவது இவரிடம் பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்திக் கொண்டேன்.

தங்கவேல் சார் ட்யூஷனில் நிறைய தேர்வுகள் நடத்துவார் எல்லா பாடங்களுக்கும். தேர்வு எழுதுபவர்களை குழுவாக பிரிப்பார். நன்றாக படிக்கும் மாணவர்கள், சுமார் மாணவர்கள், ரொம்ப சுமார் மாணவர்கள் எல்லோரையும் கலந்து குழுவாக பிரிப்பார். குழு மதிப்பெண்கள் அடிப்படையில் முதலிடம் பெற்ற குழுவுக்கும் இரண்டாமிடம் பெற்ற குழுவுக்கும் பரிசுகள் தருவார். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் ஒரு யுக்தியாக கையாள்வார். இன்றும் நான் வேலைக்கு நேர்முகத்தேர்வு நடத்தி என் டீமை இப்படித்தான் அமைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் மூலக்காரணம் தங்கவேல் சார் தான். அதேபோல் என் அலுவலக நண்பர்களுக்கு நான் பரிசுகள் வாங்கித் தரும் முறையிலும் தங்கவேல்சாரையே பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.

i.e என்ற வார்த்தைக்கு பொருள் சொன்னது, போர்-war வார்-pour என்று வார்த்தை ஜாலம் செய்தது, உலகப்போர்களை அதிரடிக்கதைகளாக சொல்லிக்கொடுத்தது என தங்கவேல் சார் பற்றிய கதைகள் நிறைய சொல்லலாம். நான் தொழில்நுட்ப கல்வி பயிலும்போதே பணி ஓய்வுபெற்று ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். எட்டு வருடங்கள் கழித்து மதுவின் கல்யாணத்திற்காக சீர்காழி சென்றபோது சாரை சந்தித்தேன். அவருக்கு என்னை பற்றி எந்த நினைவுமில்லை. என்ன கதை சொல்லியும் அவருக்கு நினைவூட்ட முடியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக வரவேற்றார். ஒரு வயதான மனிதர் தன் இளைய நண்பருடன் உரையாடுவதுபோல பேசினார்.

ஊர் திரும்புவதற்கு முன் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு சென்னை திரும்பினேன். என்னோடு கைக்குலுக்கினார். உள்ளே இருந்த கல்யாண ராமன் குதுகலித்தான். வரும்போது நினைத்துக் கொண்டேன் அவர் சொல்லிக் கொடுத்த உலகப்போர் வரலாறும் காரணமாக இருக்கலாம் என் சினிமா ஆர்வத்திற்கு. சார் என்னை மறந்து போவது இயற்கை தான். பறவைகளுக்குத்தான் வசித்த ஆலமரம் நினைவில் இருக்க வேண்டும்.  எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட என் நினைவில் S.m.h.s School groundல் மாலை வேளையில் கால்பந்தை துரத்திக் கொண்டு முதல் மனிதராக வரிவரியான டிஷர்ட்டில் தங்கவேல் சார் கடந்து போகிறார் மின்னல் என.

Wednesday, May 16, 2018

இது வேற யானை

ஏற்கெனவே பாலம் இதழில் மனசு அவர்களின் யானை சிறுகதை வந்துவிட்டதாலும், லக்ஷ்மி சரவணக்குமாரின் யானை என்ற சிறுகதை தொகுப்பு இருப்பதாலும் இந்த பதிவின் தலைப்பை இப்படி வைக்க வேண்டியதாயிற்று. மேலே சொன்னதில் மனசு அவர்களின் யானை கதையை படித்திருக்கிறேன். அது ஒரு வியட்நாம் தேசத்துக் கதை.



நான் சொல்ல வந்தது நான் பார்த்த யானையை பற்றி. கோயில் யானை. ஒவ்வொரு முறை புதுவைக்கு செல்லும் போதும் மறவாமல் மணக்குளவிநாயகர் கோயிலுக்கு செல்வேன். அங்கிருக்கும் யானை குள்ளமாக இருக்கும். நான்கு கால்களிலும் வெள்ளியில் கொலுசு போட்டிருக்கும். ஆண் யானையா இல்லையா என்பதை படம் பார்த்து முடிவு செய்து கொள்ளவும். கால் ஒன்றில் இரும்பு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அதன் கீழ் அமர்ந்திருக்கும் பாகன் தன் கையில் வைத்திருக்கும் அங்குசத்தை வைத்து தட்டிக்கொண்டே இருப்பார். பெரும்பாலும் கருநீலச்சட்டை போட்டே அவரை பார்த்த ஞாபகம். அந்த யானையையும் அதன் பாகனையும் நினைக்கும் போதெல்லாம் என்னை கவராத ஜெயமோகனின் எழுத்துக்களில் என்னைக் கவர்ந்த வரிகள் கூடவே வரும் அது "கொலைவேழத்தின் பெருங்கருணையை அறிந்தவன் ஒருவன் மட்டுமே. அதன் கீழ் வாழும் எளிய பாகன் தான்"

ஆனால் எங்கள் ஊரில் இருந்த பெரியகோயில் யானையின் பாகன் சட்டை அணிந்து பார்த்ததில்லை. யானை மேய்ப்பவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அதேபோல அந்த யானையின் கீழ் பாகன் உறங்கியும் பார்த்ததில்லை. ஒரேயொருமுறை மட்டும் சாயுங்காலத்தில் அந்த பாகன் ரொம்ப வேகமாக நடந்து கொண்டிருந்தார். அவர் கூட வரும் பையன் யானையை மிரட்டி கூப்பிட்டுக் கொண்டிருந்தான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதே மது காதில் வந்து கிசுகிசுப்பாய் "அந்தாள் தண்ணியடிச்சிருக்கான்" என்றான்.
அந்த பெண்யானை வாரம் ஒருமுறை குளிப்பதற்கு எங்கள் தெருவில் புகுந்து தான் திருக்கோலக்கா கோவில் குளத்திற்கு செல்லும். இல்லை வாய்க்காலுக்கு போகுமாயிருக்கும். ஒருமுறை வாய்க்காலில் குளித்ததை பார்த்திருக்கிறேன். குளித்துவிட்டு திரும்ப எங்கள் தெருவழியாகவே பட்டை எல்லாம் அடித்துக் கொண்டு ஜம்மென்று போகும். கடைவீதி வழியாக பலரை ஆசிர்வதித்து வாழைப்பழம் தேங்காய் காசுகள் என கல்லா கட்டிக்கொண்டு போகும்.

பெரியகோயில் யானை இறந்து போனதை அப்பாதான் வந்து சொன்னார். அன்று தான் அதன் பெயர் ஜெயந்தி என்றே தெரியும் எனக்கு. அதன் இறப்பு செய்தியை செய்தித்தாளிலும் போட்டார்கள். அன்று மாலை நானும் மதுவும் கிளம்பினோம். நடந்து தான் போனோம். கோயில் உள்ளே அதன் கொட்டடிக்கு சென்றோம். எத்தனையோ இரவுகள் அந்த கொட்டடியின் இருட்டை பார்த்து பயந்திருக்கிறேன். தனியே பிராகாரத்தை சுற்றும்போது சிலசமயம் யானை செய்யும் சலசலப்புக்கு அஞ்சி பயந்து ஓடியிருக்கிறேன். இன்று அந்த கொட்டடிக்கு வெளியிலிருந்து நல்ல நூறுவாட்ஸ் வெளிச்சத்திற்கு நடுவே யானை கிடத்தப்பட்டிருப்பதை பார்த்தேன். நான் பார்த்த யானை அல்ல அது. உடல் வற்றி தலை சிறிதாகி ஏதோ ஒரு பொருளாகக் கிடந்தது. மது "நீ வருத்தப்பட ஆரம்பிச்சா உன்னை சமாதான படுத்த முடியாது" என என்னை உள்ளே செல்லவிடாமல் தடுத்து விட்டான். பிறகு வெளியேவந்து "பாவம்டா அந்த யானை. ஆனா அந்த பாகன் பாரு இனிமே என் பொழப்புக்கு என்ன செய்வேன் ஏதாவது காசு போட்டு போங்கன்ட்றான்" என்றான் கோபமாக. ஒரு கட்டம்வரைதான் இறந்தவர்களுக்காக அழமுடியும் என்றோ பாகன் வறுமையையோ  நாங்கள் புரிந்திருக்க வாய்ப்புமில்லை வயதுமில்லை. மறுநாள் அப்பா அதன் ஈமச்சடங்கிற்கு சென்று வந்தார். எரியூட்டினார்கள் என்று நினைவு.

நான் இதுகுறித்து எழுதியதை பற்றி சரவணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன் இளமைக்காலத்திய நினைவுகளையும் தான் படித்த யானை கதைகளையும் பற்றி பேசிக்கொண்டிருந்தார். குறிப்பாக யானை சவாரி செய்ததை சொன்னார். நான் என் வாழ்வில் யானை சவாரி செய்ததே இல்லை. யானை அருகே சென்று ஒரிருமுறை ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதுவும் வைத்தீஸ்வரன் கோயில் யானையிடம் மட்டும். யானை கதைகளை நிரம்ப படித்திருந்தாலும்  யானையை பற்றிய தகவல்கள் அதிகமாக தெரிந்திருந்தாலும்  ஒருமுறை யானை பற்றி மாமா சொன்னதை இங்கே சொல்லி முடிப்பது சரியாக இருக்கும். "யானை பாத்திருக்கியா? அதுக்கு மதம் பிடிச்சா காடே தாங்காது. தொம்சம் பண்ணிரும். சிங்கம்புலி எல்லாம் காணாப்போயிரும். ஆனா அவ்ளோ பெரிய யானையை மனுசன் தான் வயித்துக்காக கடைக்கடையா பிச்சை எடுக்கவுட்ருவான். நம்ம எல்லாருமே ஒருவகையில அந்த யானை தான்".

Monday, May 14, 2018

ஏனென்றால் என் பிறந்தநாள்

துன்பம் நிறைந்த வாழ்வில் மகிழ்ச்சி எண்ணிப்பார்க்கும் அளவே இருக்கும்

என்று தால்ஸ்தாய் சொல்லவில்லை. அவர் அப்படி சொன்னதாக நான் எடுத்துக் கொண்டேன். அப்படியான சந்தோஷமான தருணங்களில் ஒன்று என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாதிரி மகிழ்ச்சி இருக்கும். ஒருமுறை சந்தனக்கலரில் சட்டை போட்டுக்கொண்டு வீடுவீடாக எவர்சில்வர் டப்பாவில் சாக்லேட் கொடுத்துவிட்டு வந்தேன். ஒருமுறை மது என்னை அழைத்துப் போய் சமோசா வாங்கிக் கொடுத்தான். இரண்டு பிறந்தநாட்களுக்கு அப்பா வாட்ச் வாங்கி தந்தார். இரண்டு வாடச்சுகளுக்கும் நடுவே எட்டு வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு பல வருடங்களுக்கு பிறகு நண்பர் பிரேம் வாட்ச் வாங்கி கொடுத்திருக்கிறார்.


பிறந்த நாளுக்கு கேக் வெட்டும் பழக்கம் கிடையாது. ஆனால் ஆசை இருக்கிறது. என் ஆறாவது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய ஞாபகம் இருக்கிறது. அன்று அக்காவின் தோழிகள் நிறையபேர் வந்திருந்தார்கள். அதில் இப்போது ஞாபகம் இருப்பது கவிதாக்காவும் அவர் கண்ணாடியும் மட்டும்தான். கண்ணாடி போட்ட பெண்களின் மீது என்னுள் பெருகும் அன்பிற்கும் காதலுக்கும் அது காரணமாக இருக்கலாம். பிறகு கேக் வெட்டியது என்னுடைய இருபத்தி இரண்டாவது பிறந்தநாளில். பிரகாஷ் சந்தோஷ் ராம் என என் அலுவலக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள் அது. நான் அதிகமாக பரிசுகள் பெற்ற பிறந்த நாளும் அதுதான். இரண்டு பேண்ட் இரண்டு சட்டை. காதலியிடமிருந்து ஒரு சட்டை(இப்போது முன்னாள்), ஒரு பிள்ளையார் பொம்மை, பணி நிரந்தர ஆணை அப்புறம் ஒரு மிக்கிமௌஸ் கேக். அதில் எழுதிய வாசகங்கள் இப்போதும் புன்னகை வரவழைப்பது. Happy birthday Mr. Romeo.
சத்தியமாக அதைத்தான் எழுதி இருந்தார்கள்.

அதேபோல பிறந்த நாளில் எதையாவது வித்தியாசமாக செய்து பார்க்கும் ஆசை வரும். சிலசமயம் அது சரியாக வரும். சிலநேரங்களில் சொதப்பும். ஒருமுறை பிறந்த நாள் அன்று வேலைக்கு கிளம்பிவிட்டேன். அம்மா எவ்வளவு காசு வேண்டும் என்று கேட்டார். யாருக்கும் செலவழிக்க தோன்றவில்லை. நூறு ரூபாய் கொடு போதும் என்றேன். ஒரு மாதிரி முறைத்தபடியே கொடுத்தார். அலுவலகம் வருவதற்குள் எண்ணம் மாறிவிட்டது. சரி எதையாவது வாங்கலாம் என முடிவுசெய்து என்ன வாங்குவது நூறு ரூபாய்க்கு என்று யோசித்தபடியே கடையில் இருந்த ஒரு பெட்டியை வாங்கினேன் நூற்றியிருபது ரூபாய்க்கு.  என் பையில் குப்பையுடன் குப்பையாய் பணத்தை திணித்து வைத்திருப்பேன். எப்போது துழாவினாலும் ஐம்பது தேறும். எனவே வாங்கிப்போய் பெட்டியில் இருந்ததை எல்லோருக்கும் கொடுத்தேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட குழந்தை பருவத்திற்கே போய்விட்டார்கள். எனக்கு ஒருவாரம் முன்பு பிறந்த நாள் கொண்டாடிய சிவா என்னிடம் ரகசியமாக கேட்டார். எவ்வளவு செலவு பண்ணீங்க என்றார். சொன்னேன். எண்ணுறு ரூபாய்க்கு A2B ஸ்வீட் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். ஒரு பய என்னை ஞாபகத்துல வெச்சுக்கமாட்டான். நீங்க பெரிய ஆளுங்க என்றபடி alpenliebe lollipopஐ சப்பியபடி சொல்லிவிட்டு சென்றார். சிரித்துக் கொண்டேன்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எனக்கு எப்போதுமே வரமான நாட்கள் தான். ஒவ்வொரு வருடமும் நம்மை நினைவில் வைத்து வாழ்த்தும் உள்ளங்களே நம் ஆயுள் நீட்டிப்பிற்கும் நாம் வாழும் வாழ்வின் பக்கங்களை நிரப்புவதற்கும் காரணமானவர்கள். இதை தலைகீழாகவும் சொல்லலாம். தோழமை தாய்மார்களாக தோழமை தந்தையர்களாக தோழமை சகோதரசகோதரிகளாக உறவுகளில் நண்பர்களாக முகநூல் நட்புகளாக என வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் மட்டுமே என் இரண்டு பிறந்தநாட்களுக்கு நடுவில் என்னையும் என் அன்பையும் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன்கள். ரஜினிகாந்தின் மனிதன் திரைப்படத்தில் ஶ்ரீவித்யா உதட்டசைக்கும் பாடல் ஒன்றில் வரும் இந்த வரிகளை அந்த அன்புள்ளங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். "உள்ளிருந்து வாழ்த்தும் உள்ளமது வாழ்க"